விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/செல்வா
செல்வா என்று அழைக்கப்படும் செ. இரா. செல்வக்குமார், தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து பின்னர் கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் மின்னியல் மற்றும் கணினியியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவருடைய ஆய்வுத்துறை குறைக்கடத்திக் கருவிகள் நுட்பம் பற்றியது. மே 2006 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களித்து வருகின்றார். விக்கிப்பீடியாவில் கட்டுரையாக்கம் (இதுவரை ஏறத்தாழ 800 கட்டுரைகள்), உரைதிருத்தம், படங்கள் உருவாக்குதல், இணைத்தல், தமிழ்விக்கி கொள்கை, நடை பற்றிய உரையாடல்களில் பங்களித்தல் முதலான பணிகளில் ஈடுபட்டுவருகின்றார். கலைச்சொற்கள் ஆக்கித் தருவதிலும், விக்கிப்பீடியர்களுக்கு ஊக்கம் தந்து உதவுவதிலும் ஆர்வம் காட்டுகின்றார். கனடாவில் விக்கிப் பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல், பொதுவாக இணைய உலகில் விக்கிப்பீடியாவின் திட்டங்களைப் பற்றி எடுத்துரைத்தல் முதலான பணிகளிலும் ஈடுபடுகின்றார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்த தமிழ் இணைய மாநாட்டின் ஒரு நிகழ்வாக தமிழ்நாடு அரசு நடத்திய விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டியை உருவாக்குவதற்கும், நடுவர்கள் தேர்வுக்கும் பெரும் பங்காற்றியுள்ளார்.