விக்கிப்பீடியா:பக்கக் காப்புக் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விசமத் தொகுப்புகளை தடுக்கும் பொருட்டு பயனர்களின் இணக்க முடிவுக்கு ஏற்ப தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகள் சில பக்கங்களை தொகுக்க இயலாமல் பூட்டி வைக்கலாம். பிரச்சினையின் தீவிரத்தை பொறுத்து இது தற்காலிகமாகவோ தொடர்ந்தோ இருக்கலாம்.

  • விக்கிப்பீடியாவின் முதற்பக்கம் பலராலும் தொடர்ந்து பார்க்கப்படுவது என்ற காரணத்தால், முன்னெச்சரிக்கையாக அப்பக்கம் மட்டும் தற்போது பூட்டப்பட்டுள்ளது. எனினும், அதனோடு தொடர்புடைய வார்ப்புருக்களை தொகுக்க இயலும் என்பதால், உண்மையில் இப்பக்கம் தொகுக்கத் தக்கதே. விளையாட்டுத்தனமாக முதற்பக்கத்தில் தொகுப்புகள் செய்பவர்களை தடுப்பதை மட்டும் இப்பூட்டு தற்போது நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
  • பயனர்கள் தத்தம் பயனர் பக்கங்களை பூட்டி வைத்துக் கொள்ள உரிமை உண்டு என்றாலும் இது கூட தெளிவான விசமத் தாக்குதலுக்கு உள்ளாகும் பட்சத்தில் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது.
  • ஒரு பயனர் மட்டும் தொடர்ந்து விதண்டாவாதமாக ஒரு பக்கத்தையோ பல பக்கங்களையோ தொகுக்க முனைந்தால், அவரது பயனர் கணக்கை முடக்குவதே முதற் தீர்வாக இருக்கும். இந்த விசயத்தில் பக்கத்தை பூட்டுவது தீர்வாகாது.
  • ஒரு பக்கம் மட்டும் இலக்காக வைக்கப்பட்டு பலராலும் முன்னுக்குப் பின்னாக திரும்பத் திரும்ப மாற்றப்படும் சமயங்களில் மட்டும் அந்தப் பக்கத்தை பூட்டலாம். பக்கத்தை பூட்டுவதற்கு தற்போது வாக்கெடுப்பு ஒன்றும் இல்லை. நிர்வாகிகளின் ஆராய்ந்தறிதல் அடிப்படையில் ஒரு பக்கத்தைப் பூட்டலாம். வாக்கெடுப்பு தேவை என்று நிலை வரும்போது அதற்கான வழிமுறைகளை கொண்டு வரலாம். எனினும் பக்கங்களை காப்பது ஒரு அவசர நடவடிக்கை என்பதால் சில சமயம் வாக்கெடுக்கும் அவகாசம் இல்லாமல் போகலாம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • ஒரு பக்கம் விசமத் தாக்குதலுக்கு உள்ளாகும் என்று ஊகத்தின் அடிப்படையில் காப்பது தவறு. முதற்பக்கம் மட்டும் இதற்கு விதிவிலக்காகும். விசமத்தனத்துக்கான தெளிவான ஆதாரங்களை கண்ட பிறகே பக்கத்தை பூட்ட வேண்டும்.
  • ஒரு பக்கம் பூட்டப்படும் வேண்டும் என்று நீங்கள் கருதினால், அதற்கான காரணங்களோடு கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலும் தெரிவியுங்கள்.
  • இயன்றவரை மிகக் குறைந்த பக்கங்களுக்கு மிகக் குறைந்த கால அளவுக்கு மட்டும் பூட்டி வைப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது விக்கிபீடியாவின் திறந்த மனப்பான்மைக்கு சான்றாக அமையும்.