உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:துணிவு கொள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துணிவு கொள்!

[தொகு]
"துணிவு கொள்" என்பது விக்கிப்பீடியாவின் முழக்கமாக உள்ளது

விக்கிப்பீடியா சமூகம் பக்கங்களை இற்றைப்படுத்தத் தயக்கமேதும் இன்றித் துணிவாகச் செயல்படுக என்று ஊக்கப்படுத்துகிறது. நம்மைப் போன்ற விக்கிகள், அவற்றில் பிழை திருத்தவும், இலக்கணத்தைச் சரியாக்கவும், சரியான சொல்லைப் பயன்படுத்தவும் பலரும் பங்களிப்பதாலேயே வேகமாக வளர்கிறது. பங்குபெறும் எல்லோரும் துணிவாக விக்கிப்பீடியா ஓர் சிறந்த கலைக்களஞ்சியமாக உருவெடுக்க உதவிட வேண்டும். எத்தனை முறை நீங்கள் படிக்கும் நேரத்தில் "ஏன் இத்தனை பிழைகளைத் தொகுக்காது விட்டிருக்கிறார்கள்?" என்று எண்ணியிருப்பீர்கள். எவ்வளவு முறை இதனை நாமே செய்திருக்கலாமே என எண்ணியதுண்டு? விக்கிப்பீடியாவில் நீங்கள் செய்திகளைச் சேர்க்க, மாற்ற, திருத்த முடியும். சற்றுப் பணிவுடன் செயல்பட வேண்டியது நல்லது என்றாலும், எல்லா மாற்றங்களையும் எவரும் செய்யலாம். நினைவில் கொள்க - நீங்கள் எழுதியதை/திருத்தியதை மற்றவர்களும் தொகுக்க முடியும். இதனால் வருந்தாதீர்கள்! அவர்களும் நம்மைப்போன்று தமிழ் விக்கிப்பீடியாவைச் சிறந்த கலைக்களஞ்சியமாக எடுத்துச் செல்ல விழைபவர்களே!

மேலும் எந்தவொரு உரையாடல் பக்கத்திலும் விவாதம் நடைபெறும்போது "வெறும் பார்வையாளராக" இருக்காதீர்கள். துணிவாக உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்.

...ஆனால் கவனமாக இருங்கள்

[தொகு]

உங்களைப் போன்றவர்களின் துணிவே விக்கிப்பீடியாவிற்குத் துணையாக இருக்கும்போதிலும், எதனைத் தொகுக்கிறோம் என்பதில் பங்களிப்பாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் செய்யும் மாற்றங்களைத் தேவைப்பட்டால் மீளமைக்க முடியும் என்றபோதும் வீணான குழப்பங்களைத் தவிர்க்க வேண்டும். சில நேரங்களில் திருத்த வேண்டிய மாற்றங்களைச் செய்யக் கூடுதல் நேரத்தையும் உழைப்பையும் செலவழிக்க வேண்டியிருக்கலாம். உங்களுக்கு ஐயம் இருந்தால், விக்கிச் சமூகத்தின் வழிகாட்டலை நாடுங்கள்.

சில நேரங்களில் சில பக்கங்கள் நமக்குத் தவறாக உள்ளது என்று மட்டும் தெரிந்து, சரியானது எதுவென்று தெரியாமல் போகலாம். காட்டாக, ஒருவரின் பிறந்த நாள் குறித்த தரவு தவறு என்று தெரியும், ஆனால் அவரது பிறந்தநாள் எதுவென நமக்குச் சரியாகத் தெரியாது. அந்தத் தரவு தவறு என்று சுட்டிக் காட்டுவதே அது திருத்தப்படுவதற்கான முதல்படியாக அமையும்.

"Be bold, be bold, and everywhere be bold," but "Be not too bold."

--எட்மண்டு சுபென்சர்

கட்டுரையல்லாத பெயர்வெளிகள்

[தொகு]

தொகுப்பாளர்கள் கட்டுரைப் பக்கங்கள் மட்டுமன்றி அனைத்து விக்கிப்பீடியாப் பக்கங்களையும் துணிவுடன் தொகுக்கலாம் என்று ஊக்கப்படுத்தப்பட்டாலும், பிற பெயர்வெளிப் பக்கங்களைத் தொகுக்கும்போது கூடுதல் கவனம் தேவை.

வார்ப்புருக்கள் பக்கங்களை இற்றைப்படுத்தும்போது ஏற்படும் பிழைகள் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்த வல்லன. வார்ப்புருக்கள் ஒரே செய்தியைப் பல பக்கங்களில் சேர்க்க உதவுவதால் வார்ப்புருவில் ஏற்படும் ஒரு சிறு பிழையும் அது இணைந்துள்ள பல பக்கங்களில் மாற்றங்களை உண்டாக்கும். மிகக் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் சில வார்ப்புருக்கள் இக்காரணத்தாலேயே நிரந்தரமாகத் தொகுத்தலிலிருந்து பாதுகாக்கப் பட்டுள்ளன. அவற்றில் உள்ள சிக்கலான நிரலிகளில் திருத்தங்கள் செய்யும்போது முதலில் அவற்றைச் சோதனை செய்து பார்த்த பிறகே நடப்புப் பதிப்பிற்குக் கொண்டு செல்ல வேண்டும். ஆகவே துணிவான மாற்றங்களை வார்ப்புருக்களில் செய்யுமுன்னர் நீங்கள் செய்வது சரியானது தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் (இவற்றிலும் தவறு நேர்ந்தால் பின்னோக்கி மீள்விக்க முடியும் என்ற போதிலும்).

பகுப்புகள் உருவாக்கும்போதும் மாற்றியமைக்கும்போதும் அவை பல பக்கங்களில் மாற்றங்களை உண்டாக்குகின்றன. விக்கிப்பீடியா:வகைப்படுத்துதல் மற்றும் பகுப்பு கையேட்டை கருத்தில் கொள்க. ஏதேனும் ஐயமோ ஆலோசனையோ இருப்பின் அவற்றை ஆலமரத்தடியில் விவாதியுங்கள்.

விக்கிப்பீடியாவின் கொள்கைகளையும், வழிகாட்டுதல்களையும் தொகுக்கும்போதும் கவனம் தேவை. இந்த நேரங்களில் இவற்றை விவாதித்துவிட்டு மாற்றங்களைக் கொணர்தல் நல்ல நடைமுறையாகும். ஆனால், சொற்பிழை, இலக்கணப்பிழை மற்றும் ஐயமேதுமில்லாத தரவுப்பிழைகளைக் கண்டவுடனே திருத்துதல் முறையானதும் தேவையானதுமாகும்.

புதிய படங்கள் புதிய பெயர்களிலேயே தரவேற்றப்படவேண்டும். பழைய பெயர்களில் தரவேற்றினால், ஏற்கனவே இருக்கும் பழைய படத்துடன் குழப்பம் ஏற்படும். இருக்கின்ற படத்தின் விவரணப் பக்கத்தில் கூடுதல் தரவுகள் சேர்ப்பது துணிவாகச் செய்யப்பட வேண்டிய செயலாகும்.

பொதுவாக நீங்கள் மற்ற விக்கிப்பீடியரின் பயனர் பக்கத்தைத் தொகுப்பதோ, அல்லது பேச்சுப் பக்கத்தில் உள்ள கருத்துக்களை (உங்கள் கருத்துக்களைத் தவிர, அதுவும் தேவையின்றி செய்யற்க)தொகுப்பதோ விரும்பப்படுவதில்லை. விசமத்தனங்களைத் திருத்துவது, பயனர் பக்கங்களிலும் கூட, எப்போதும் வரவேற்கத் தக்கதே. பிற பயனர்கள் உங்கள் செயல் சரியானதா என அறிவுரைப்பார்கள்.