விக்கிப்பீடியா:தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்/பு. ஒ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த ஒப்பந்தத்தின் ஆங்கிலப் பதிப்பு (English version) இங்கு உள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

2015 திசம்பர் மாதம் இந்த நாளில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் (பு. ஒ. அல்லது ஒப்பந்தம்) ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கீழ்க்காண்போர் தங்களுக்கு இடையே:

தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி மண்டபச் சாலை, கோட்டூர், சென்னை, தமிழ்நாடு 600025

மற்றும்

விக்கிமீடியா இந்தியா, 194, இரண்டாவது C குறுக்குச்சாலை, தொம்மலூரு இரண்டாம் கட்டம், பெங்களூர், கருநாடகா 560071

இங்கே

தமிழ் இணையக் கல்விக்கழகம் (த. இ. க.), தமிழ்நாடு அரசினால் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பு ஆகும். உலகின் பல பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்களுக்கும், தமிழ், அறிவியல், தொழில்நுட்பம், தமிழ்க் கணிமை மென்பொருட்கள் என்பவற்றோடு தமிழ் மக்களுடைய வரலாறு, கலை, இலக்கியம் பண்பாடு ஆகியவற்றை அறிந்துகொள்ள ஆர்வமுள்ள பிறருக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர், அரசாங்க, கல்வி, ஊடக, மற்றும் வணிக நிறுவனங்களுக்காக தமிழ்க் கணிமைத் தேவைகளுக்கான தீர்வுகளை அடையாளம் கண்டு, நிறுவி, பேணி மேம்படுத்துதல் போன்றவற்றுக்கும் இணைய அடிப்படையிலான வளங்களையும், வாய்ப்புக்களையும் வழங்குவதை த. இ. க. நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகம் (உ. த. வி. ச. ) என்பது, தமிழ் விக்கிமீடியாவின் கட்டமைப்பையும் உள்ளடக்கங்களையும் உருவாக்கும் உலகம் முழுவதிலும் உள்ள பங்களிப்பாளர்களையும் பயனாளிகளையும் குறிக்கும். உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகம் பரந்த விக்கியூடகச் சமூகத்தில் தங்கியிருப்பதுடன் அதனுடன் இணைந்தும் செயற்படுகிறது.

விக்கிமீடியா பிரிவு (வி. இ. அல்லது விக்கிமீடியா இந்தியா எனவும் அறியப்படுவது) என்பது, இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட தனித்தியங்கும் இலாப நோக்கற்ற அமைப்பாகும். கலைக்களஞ்சியங்கள், அகரமுதலிகள், நூல்கள், படிமங்கள் முதலியவற்றை அணுகுதல், உருவாக்குதல், பங்களித்தல் என்பவற்றை உள்ளடக்கிய, கட்டற்றதும் திறந்ததுமான கல்விசார் உள்ளடக்கங்கள் கிடைக்கக்கூடியதாக இருத்தல், அவற்றின் பயன்பாடுகள் என்பன குறித்து இந்தியப் பொதுமக்களுக்கு அறிவூட்டுவதும், ஆதரிப்பதும், முன்னேற்றுவதும் விக்கிமீடியா இந்தியாவின் பணி ஆகும். விக்கிமீடியா பிரிவுகள் ஒரு நாட்டுக்குள் விக்கிமீடியா திட்டங்களை ஆதரித்து முன்னேற்றுவதற்காக நிறுவப்பட்ட தனித்தியங்கும் அமைப்புக்கள் ஆகும். தனித்தியங்கும் அதேவேளை, இப்பிரிவுகள் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஏற்பைப் பெற்றுள்ளன. உலகின் முதல் பத்து முன்னணி இணையத்தளங்களுள் ஒன்றான விக்கிப்பீடியா உட்பட, உலகின் மிகப்பெரிய கூட்டாசிரிய உசாத்துணைத் திட்டங்களில் சிலவற்றை விக்கிமீடியா அறக்கட்டளை இயக்கிவருகிறது.

விக்கிப்பீடியா, கட்டற்ற அணுக்கத்தையும் கட்டற்ற உள்ளடக்கத்தையும் கொண்ட ஒரு இணையக் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியா மிகக் கூடுதலான மக்கள் அணுகும் 10 இணையத்தளங்களுள் ஒன்று என்பதுடன் இது இணையத்தின் மிகப் பெரியதும், கூடுதலான மக்களால் விரும்பப்படுவதுமான பொது உசாத்துணை ஆக்கம் ஆகும். விக்கிப்பீடியாவில் 288 வெவ்வேறு மொழிகளில் ஏறத்தாழ 35 மில்லியன் கட்டுரைகள் உள்ளன. இது ஒரு மாதத்தில் 18 பில்லியன் பக்கப் பார்வைகளையும் ஏறத்தாழ 500 மில்லியன் தனித்துவமான வருகையாளர்களையும் கொண்டுள்ளது.

இந்தியாவில் 81,800+ கட்டுரைகளைக் கொண்டதும், பயன்பாட்டில் இரண்டாவது நிலையில் உள்ளதுமான தமிழையும் உள்ளடக்கி 22 இந்திய மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் தமிழ் விக்கிப்பீடியா 5 மில்லியன் பக்கப் பார்வைகளிலும் கூடுதலாகப் பெறுகிறது. விக்சனரி, விக்கிமூலம் போன்ற வேறு சில விக்கியூடகத் திட்டங்களும் தமிழில் உள்ளன.

தமிழைப் பொருத்தவரை, த. இ. க. 2010இல் அதன் கலைச்சொல் தொகுப்பைத் தமிழ் விக்சனரிக்குக் கொடையாக அளித்தது. இக்கொடையானது இத்திட்டத்துக்கு 1,50,000 சொற்களைச் சேர்க்க உதவியதுடன், இதை இந்திய மொழிகளுள் மிகப் பெரிய விக்சனரியாகவும், உலக அளவில் பெரிய 20 விக்சனரிகளுள் ஒன்றாகவும் ஆக்க உதவியது. இது, இக்கலைச் சொற்கள் விக்கிப்பீடியா கட்டுரைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படவும், இச்சொற்கள் பொதுமக்களிடம் புழங்கவும் வழி சமைத்தது. 2013ல், த. இ. க. வின் வழிகாட்டலுடன், தமிழ் வளர்ச்சிக் கழகம் 20 தொகுதிகளைக் கொண்ட கலைக்களஞ்சியத்தைத் தமிழ் விக்கிப்பீடியாவிலும், அதன் துணைத்திட்டங்களிலும் பயன்படுத்துவதற்காக கிரியேட்டிவ் காமென்சு அனுமதியின் கீழ் வழங்கியது.

எனவே, த. இ. க. வும் விக்கியூடகச் சமூகம் மற்றும் அமைப்புக்களும், த. இ. க. வின் செயலிலக்குக்கு நெருக்கமாகப் பொருந்தி வருகின்ற, இணையத்தில் தமிழ் மொழியின் நலன் என்னும் நோக்கத்துக்காக இணைந்து பணியாற்றுவதில் வெற்றிகரமான வரலாற்றைக் கொண்டுள்ளன. இந்தக் கூட்டுழைப்பை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்காக வி. இ. ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முன்மொழிகிறது.

இரு தரப்புக்களும் பின்வரும் ஆர்வங்களைப் பகிர்ந்து கொள்கின்றன:

அ) கலைக்களஞ்சியங்கள், அகரமுதலிகள், நூல்கள், பல்லூடகங்கள் என்பவற்றினூடாக கட்டற்ற அறிவை (குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், சமூக அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில்) உருவாக்குவதும் பரப்புவதும்
ஆ) வரலாற்று முக்கியத்துவம் கொண்ட தமிழர் மரபுரிமைகளை ஆவணப்படுத்தல்
இ) தமிழ்க் கணிமைக்கான கட்டற்ற, திறந்த மூலக் கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் உருவாக்குதல்.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ் இணையக் கல்விக்கழகத்துக்கும் (த. இ. க.) உலகளாவிய தமிழ் விக்கிமீடியர் சமூகத்தின் சார்பாகச் செயல்படும் விக்கிமீடியா இந்தியாவுக்கும் இடையிலான கூட்டுத்திட்டங்களுக்கும் முனைவுகளுக்குமான வரையீடுகளையும் பொதுவான புரிதலையும் வகுக்கிறது.

உலகளாவிய தமிழ் விக்கிமீடியா சமூகத்தின் கூட்டுழைப்பிலும் நெறிகாட்டலிலும், தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் கழகத்தின் துணையுடனும், விக்கிமீடியா அறக்கட்டளையின் உலகளாவிய நெறிமுறைகளுக்கும் நடைமுறைகளுக்கும் உட்பட்டு தக்க நிதியுதவிபெறக்கூடியவாறு , விக்கிமீடியா இந்தியா உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகத்தின் சார்பாக பின்வரும் பல புலங்களிலும் அதுபோன்றவற்றிலும் த. இ. க. உடன் ஒத்துழைக்கவும் அதன் உதவியைப்பெறவும் விழைகிறது:

  • பொது நிறுவனங்கள் கட்டற்ற ஆக்க உரிமங்களை ஏற்பதற்கான கொள்கை முனைவுகள்
  • கட்டமைப்புதவி
  • திறன் மேம்பாட்டுத் திட்டங்கள்
  • காட்சிக்கூடங்கள், நூலகங்கள், பெட்டகங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றில் மின்னாவணமாக்கல்
  • விக்கிப்பீடியா கட்டுரைகளை எழுதுவதற்குத் தேவையான தகவல்களை வழங்கல்
  • விக்கிப்பீடியா உள்ளடக்க மேம்பாடு
  • பரப்புரை
  • கல்வியில் விக்கிப்பீடியா

மேற்கண்ட புலங்களில் தொடக்கநிலையில் பின்வரும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும்;

  • உலகளாவிய தமிழ் ஊடகப்போட்டி
  • குடிமைச் சமூக அறிஞர்கள் துறைசார் கட்டுரைகள் ஆக்குவதற்கான பயிற்சிகள்
  • பரப்புரைக்கு உதவும் வகையில் பல்வேறு பல்லூடகப் பயிற்சி வளங்கள் உருவாக்கல்
  • தமிழக ஊராட்சிகளைப் பற்றிய கட்டுரைகளை உருவாக்குதல்
  • தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்
  • கட்டற்ற அறிவு முனையம் தொடங்குதல்
  • மாவட்ட அளவிலான ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சி
  • பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கணித்தமிழ் பேரவைகள் ஊடாக விக்கிப்பீடியா பயிற்சிகள்
  • புத்தகக் காட்சி விழாக்களில் தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தல்

இவ்வாறு கூட்டு முயற்சிக்கு என அடையாளம் கண்டுள்ள புலங்களையும் செயற்பாடுகளையும், விக்கிமீடியா அறக்கட்டளை வரையறுக்கும் உலகளாவிய அளவீடுகளின் அடிப்படையில், தக்க கால இடைவெளிகளில் திறனாய்ந்து அதற்கேற்ப மேம்படுத்தவும் இற்றைப்படுத்தவும் செய்வோம். இச்செயற்பாடுகள் அனைத்தும் விக்கிமீடியா இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள், நடைமுறைகளுக்கும் உலகளாவிய தமிழ் விக்கிச் சமூகத்தின் கருத்துக்கும் உட்பட்டே அமையும்.

விக்கிமீடியா இந்தியா வழியாக வழங்கப்படக்கூடிய அனைத்து வன்பொருள், மென்பொருள் உள்ளிட்ட மீள்பயன்பாட்டுக்கு உரிய அனைத்துப் பொருட்களும் விக்கிமீடியா இந்தியாவின் உடைமையாக விளங்கும். தமிழ் இணையக் கல்விக் கழகம், கூட்டு முயற்சிக் காலம் முடிந்த பிறகோ விக்கிமீடியா இந்தியா கோரும் போதோ இவற்றைப் பயன்படுத்தும் நிலையில் திருப்பி அளிக்கும் பொறுப்புடன், இவற்றைத் தம் வளாகத்தில் வைத்துப் பயன்படுத்தி வரும்.

இக்கூட்டு முயற்சியின் விளைவுகள் (உரை, ஊடகம், மென்பொருள் நிரல், தரவு முதலியன) அனைத்தையும் படைப்பாக்கப் பொதுமங்கள் ஆக்குநர்சுட்டு பகிர்வுரிமம் 4.0 பன்னாட்டு உரிமம் (CC-By-SA 4.0) மற்றும் குனு பொது உரிமம் பதிப்பு 2+ (GPLv2+) அல்லது இவற்றினும் கூடிய கட்டற்ற உரிமைகள் அளிக்கும் கட்டற்ற ஆக்க உரிமத்தின் கீழ் வெளியிட ஒப்பந்தக்காரர்கள் உடன்படுகின்றனர்.

கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள் முதலிய விக்கிப்பீடியா செயற்பாடுகளுக்குத் தமிழ் இணையக் கல்விக்கழகம் தமது வளாக வளங்களைப் பகிர்ந்து கொள்வதுடன் தமிழ்நாடு முழுக்க உள்ள அரசு நிறுவனங்கள் மூலம் ஆதரவினைப் பெற்றுத் தரவும் முனையும்.

விக்கிமீடியா அறக்கட்டளை வணிகமுத்திரைகள் யாவும் விக்கிமீடியா அறக்கட்டளைக்கு உரித்தானவை. அவர்களின் வணிகப் பெயர்கள், வணிக முத்திரைகள், சேவை முத்திரைகள், சின்னங்கள் அல்லது இணையத்தளப் பெயர்களைப் பயன்படுத்தும் போது, https://wikimediafoundation.org/wiki/Trademark_policy என்ற முகவரியில் தெரிவித்துள்ளபடி, அவர்களின் பயன்பாட்டு விதிகளுக்கும் வணிகமுத்திரைக் கொள்கைக்கும் ஏற்ப அமைய வேண்டும்.

இக்கூட்டு முயற்சியைப் பொருத்தவரை நிறுவன நோக்கில் விக்கிமீடியா இந்தியா பெயரையே சுட்ட வேண்டும். விக்கிமீடியா அறக்கட்டளையையோ அவர்கள் திட்டங்களையோ நேரடியாகச் சுட்டக் கூடாது.

இந்த நடப்பு ஒப்பந்தமானது, கையெழுத்திட்ட தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். ஒரு மாத காலம் முன்பு அறிவித்துவிட்டு, ஒப்பந்தக்காரர்களில் எவரொருவரும் ஒப்பந்தத்தை இரத்து செய்யலாம். இவ்வொப்பந்தத்தில் எத்தகைய மாற்றத்தை நடைமுறைப்படுத்துவது எனினும் அதனை எழுத்து வடிவில் அனைத்துத் தரப்பிலும் உறுதி செய்ய வேண்டும்.

ஒப்பந்தக்காரர்கள், பின்வரும் சாட்சிகளின் முன்னிலையில், இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்:

சென்னை தேதி: ** திசம்பர் 2015