உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் எழுத்துக்கள் 247, அவற்றுள் கிரந்தம் அடங்கா. எனினும் தமிழின் நெருங்கிய சமசுகிருத தொடர்பு காரணமாக இடைக் காலத்தில் மணிப்பிரவாள நடையும் சமசுகிருத சொற்களும் தமிழில் செல்வாக்கு செலுத்தியது. மணிப்பிரவாள நடையினர் கையாண்ட எழுத்துமுறையே கிரந்தம் ஆகும். தற்காலத்தில் நல்ல தமிழ் நடை மீட்டெடுக்கப்பட்டுள்ளது எனலாம். கடந்த நூற்றாண்டில் கிரந்த எழுத்துமுறையின் பயன்பாடு ஒருவாறு வழக்கு குன்றியுள்ளது. சமசுகிருத சொற்களை எழுதவும், சில வேற்று மொழி ஒலிப்புக்களைச் தமிழில் குறிக்கவும் சில கிரந்த எழுத்துக்கள் வழக்கில் உள்ளன. அவற்றில் முக்கிய எழுத்துக்கள் ஸ, ஹ, ஜ, ஷ ஆகும். இவை தவிர கூட்டெழுத்துகளாகிய ஸ்ரீ, க்ஷ எழுத்துக்களும் பயன்பாட்டில் உள்ளன. தமிழ் விக்கிப்பீடியாவில் இயன்றவரை தமிழ் ஒலிப்புமுறைக்கு ஏற்ப தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தி எழுத பரிந்துரைக்கப்படுகிறது.

  • ஸ் - கடைசி எழுத்தாக இருந்தால் சு என்று குறிக்கலாம். சில இடங்களில் குழப்பம் தரலாம், ஆனால் அது எல்லா மொழிகளிலும் உள்ளதே. தமிழில் புலி, புளி, புழி, அலகு, அழகு, அளகு என்பனவற்றை ஆங்கிலத்தில் வேறுபடுத்திக்காட்ட இயலாதது போலவே. கடைசி ஸ் - எ.கா சாக்ரட்டீசு, போசு (Bose).
    • சில இடங்களில் -ks அல்லது -x என்னும் ஒலிப்போடு முடியும் - அவ்விடங்களில் ஃசு என்று எழுதலாம். Linux = லினக்சு அல்லது லினஃசு அல்லது லினக்ஃசு.
  • இடையே ஸ் வந்தால் சி, சு முதலான எழுத்துக்களில் குறிப்பிடலாம். அரிசுட்டாட்டில் அல்லது அரிசிட்டாட்டில். பாசிட்டன் அல்லது பாசுட்டன் (Boston). விஸ்வநாதன் என்பது தமிழில் விசுவநாதன் என்று எழுதுவது வழக்கம். சில இடங்களில் அவ்வொலியை விலக்கி அடுத்து வரும் மெய்யெழுத்தை இரட்டிக்கலாம். சாஸ்திரம் என்பதை சாத்திரம் என்றும், அஸ்திரம் என்பதை அத்திரம் என்றும், புஸ்தகம் என்பது புத்தகம் என்றும் தமிழ்ப்படுத்துவதுபோல செய்யலாம்.
    • சில இடங்களில் இடையே -x- அல்லது -ks- போன்ற ஒலிப்புகள் வரக்கூடும். அங்கெல்லாம் ஃசு என்பதையும் பயன்படுத்தலாம். மாக்சுமுல்லர் எனலாம் அல்லது மாக்ஃசுமுல்லர் எனலாம். ஆக்சுபோர்டு எனலாம் அல்லது ஆக்ஃசுபோர்டு எனலாம்.
  • முதலில் ஸ் வந்தால் முன்னே பொருத்தமான ஓர் உயிரெழுத்தைச் சேர்க்கலாம். எ.கா: இகரம், அகரம் உகரம், எகரம் சேர்க்கலாம். எசுப்பானிய மொழியில் Strontium என்பதை Estroncio என்றும். Scandium என்பதை Escandio என்றும் எழுதுகிறார்கள். அதுபோலவே, தமிழில் எசுட்ரான்சியம், எசுக்காண்டியம் என்று கூறலாம். முன்னே ஓர் உயிரெழுத்தைச் சேர்த்தால் ஸ் ஒலி தானே வந்து விடும். எ.கா: ஏசு, ஆசு, இசு; உயிர்மெய் எழுத்து வந்தாலும் காற்றொலி சகரம் வரும்: பசி, காசு, ஏசு, தூசு ஆகிய சொற்களைப் பார்க்கலாம். ஒலிப்பில் சிறு மாற்றம் இருக்கலாம், ஆனால் அது ஏற்புடையதே. இசுவீடன், இசுக்காண்டினேவியா என்பது போல. ஸ்நேகம் என்பதை சினேகம் என்று எழுதுவதைப் போலவும் எழுதலாம். சில நேரங்களில் ஸ் என்னும் எழுத்து முதலாவதாக வந்தால் முற்றிலுமாக விட்டு விட்டும் எழுதலாம். எடுத்துக்காட்டாக ஸ்தலம் என்பதைத் தமிழில் தலம் என்று எழுதுவதை போல. ஸ்தூலம் என்பதை தூலம் என்பது போல. ஸ்தாபனம் -> தாபனம்.

பார்க்கவும்: விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு17#ஹ என்னும் எழுத்தின் பயன்பாடு

  • ஒரு சொல்லின் முதல் எழுத்து, ஹ வரிசையில் தொடங்குவதாக இருந்தால், அதில் உள்ள உயிரெழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டு எழுதுதல் வேண்டும். எ.க: ஹனுமன் => அனுமன்; ஹரன் => அரன்; ஹிந்து => இந்து; ஹோமர் (Homer)= ஓமர்; Herodotus = எரோடோட்டசு.
    • ஒலிப்புத்துல்லியம் கூடுதலாக இருக்க வேண்டும் எனில் ஆ, கா, இ கி என்று எழுதலாம். Hitler = இட்லர், ஆனால் கிட்லர் என்றோ இட்லர் என்றோ எழுதலாம்.
  • ஹ சொல்லின் இடையில் வரும் போது மட்டுமே க ஆகும். எடுத்துக்காட்டுக்கு, மஹாத்மா - > மகாத்மா, மோஹன் - மோகன். சொல்லின் முதலில் ஹகரத்தோடு ஒட்டி வரும் உயிர் ஒலியை மட்டும் பயன்படுத்த வேண்டும். ஹோட்டல் -> ஓட்டல், ஹல்வா - > அல்வா, ஹிந்து - > இந்து.
  • இடையே வரும் பொழுதும் Magaathmaa, Mogan என்றுதான் வரும், ஆனால் அந்த மெலிந்த ககரத்தில் மிகச்சிறிதளவு காற்றொலி வரும் (பேச்சு வழக்கில்), ஆனால் அது ஹ ஆகாது. காகம், பாகம் என்னும் சொற்களை kaagam, paagam என்றுதான் ஒலித்தல் வேண்டும். உற்று நோக்கினால் மிகச்சிறிதளவு காற்றொலி வருவதைக் காணலாம். kaaham, paaham என்று முழு காற்றொலியாகக் கூறுவது கொச்சை ஒலிப்பு.
  • சில இடங்களில், தேவை இருப்பின் ஆய்த எழுத்தைப் பயன்படுத்தலாம். ரஹ்மான் என்பதைப் பொதுவாக ரகுமான் என்று எழுதுவது வழக்கம். ஆனால் ரஃமான் என்றும் ரஃகுமான் என்றும் எழுதலாம். Uhuru என்பதை உகுரு என்றும் உஃகுரு என்றும் எழுதலாம்.
  • ஷ என்னும் எழுத்தை தமிழில் வழக்கமாக ட வாக பயன்படுத்துவது முறை. புஷ்பம் = புட்பம், விஷயம் = விடயம், விபீஷ்ணன் = விபீடணன், கிருஷ்ணன் = கிருட்டினன். ரிஷி அல்லது ருஷி என்னும் சொல்லைத் தமிழில் இருடி என்று கூறுவது தொல் வழக்கம். மாற்று முறை வேண்டுமென்றால், ஓரளவிற்குத் தமிழ் முறையை மீறி வருவது ஆனால் தமிழ் எழுத்துக்களால் வருவது ஷ் = ழ்ச். எ.கா. உஷா = உழ்சா, விபீஷ்ணன் = விபீழ்சணன் , ருஷி = ருழ்சி அல்லது இருழ்சி. போஷாக்கு = போழ்சாக்கு (போசாக்கு). ஒலிப்பு நெருக்கம் காட்டவே ழ்ச் என்னும் முறை காட்டப்பட்டுள்ளது, எல்லா இடத்திலும் பரிந்துரைக்க அல்ல.
  • ஜ, ஜு என்பன கட்டாயம் ச, சூ என எழுதலாம். ஜனவரி என்பதை சனவரி என்று எழுதுவது பெரு வழக்கு. ஜூன், ஜூலை = சூன், சூலை (ஒலிப்பு choon, choolai). ஜெயராமன் = செயராமன் (cheyaraaman). ஜெயஸ்ரீ = செயசிரீ. இடையிலும் கடைசியிலும் வருவது: பங்கஜம் = பங்கயம், பங்கசம்; ராஜம் = ராசம் (ராசு என்று அழைப்பது பெரு வழக்கம்). ரோசா, ராசா, செல்வராசு, தங்கராசு, ராசாத்தி.
    • சில இடத்தில் ஜ = ய அல்லது ய்ச்ச அல்லது ச்ச என்று எழுத்தம் தந்து எழுதலாம். இராஜஸ்தான் என்பதை இராயசுத்தான், இராச்சசுத்தான், இராய்ச்சசுத்தான் எனலாம். விஜயலட்சுமி என்பதை விசயலட்சுமி என்று எழுதுவது வழக்கம். ஆனால் விஜி என பெயர் இருந்தால் கடினம். விசி என்று எழுதலாம் ஆனால் அழுத்தம் தேவை இருந்தால் விச்யி, விய்ச்சி அல்லது விச்சி எனலாம். இராஜாஜி = இராசாசி என்று எழுதுவது வழக்கம், இராச்யாச்சி, இராச்யாச்யி, இராச்சாச்சி, இராச்சாய்ச்சி. இராச்சாசி. இராஜேந்திரன் என்பதை இராச்யேந்திரன் என்று குறிக்கலாம். தாச்மகால் அல்லது தாச்யிமகால் என்றும் எழுதலாம். Hajj என்னும் புனிதப் பயணத்தை இடாய்ச்சு மொழியர் Haddsch என்று எழுதுகின்றனர். தமிழில் ஃகச், ஃகய்ச், ஃகச்யி, ஃகச்யு, அய்ச்யு என்றோ குறிக்கலாம்.

தற்கால வழக்கத்தில் கிரந்த எழுத்துக்கள்

[தொகு]
  • தமிழில் ஸ்-s, ஹ-ha, ju-ஜு போன்ற பிற மொழி ஒலிகளைக் குறிக்க கிரந்த எழுத்துக்களைச் சிலரோ பலரோ பயன்படுத்தப்படுகின்றனர். ஜூன், ஜூலை, இஸ்லாம், கிறிஸ்தவம், ஹரப்பா நாகரிகம் போன்ற சொற்களில் இப்பயன்பாட்டை காணலாம். இவற்றை சூன், சூலை, இசுலாம், கிறித்தவம், அரப்பா என்று எழுதும் வழக்கமும் உள்ளது.
  • சமய ஆக்கங்களில் கிரந்த எழுத்துக்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும் கம்பன் ஆக்கிய இலக்கியத்திலும் தேவாரம் திருவாசகம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் போன்ற பற்பல சமய இலக்கியங்களிலும், 25,000+ பாடல்களிலும், கிரந்த எழுத்துகள் பயன்படுத்தப்படவில்லை.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • http://www.pulveli.com/ - கிரந்தச் சொற்களுக்கான மாற்றுச் சொற்கள்.