வாசுத்து சூத்திர உபநிடதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாசுத்து சூத்திர உபநிடதம் என்பது இந்திய மரபுவழிச் சிற்பக்கலை குறித்த ஒரு பழங்கால நூல் ஆகும். 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்நூல் சமசுக்கிருத மொழியில் எழுதப்பட்டது. இதை எழுதியவர் பிப்பிலாடர் என்பவர். பிப்பிலாடர் நான்கு மாணவர்களின் சிற்பநூல் பற்றிய கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பது போன்ற வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்நூல் இதன் காலத்துக்குச் சற்று முன்னும் பின்னும் எழுந்த சிற்பநூல்களிலிருந்து மாறுபட்டதாக அமைந்துள்ளது. மற்ற நூல்கள் சிற்பம் தொடர்பிலான செயல் முறைகளை விரிவாக விளக்குவனவாக அமைந்துள்ளன. ஆனால் வாசுத்து சூத்திர உபநிடதமோ சிற்பக்கலையைக் கோட்பாட்டு அடிப்படையில் விளக்குகின்றது.

சிற்ப சாத்திரம் அதர்வ வேதத்தின் ஒரு பகுதி என்னும் கருத்தைப் பல இடைக்காலச் சமசுக்கிருத நூல்கள் கூறுகின்றன. அதர்வ வேதத்தில், சிற்ப சாத்திரம் குறித்த தகவல்கள் அதிகம் இல்லை. அதர்வ வேதம் கிறித்துவுக்கு முந்திய காலப்பகுதியைச் சேர்ந்தது. முறையான சிற்ப நூல்களின் காலம் கிபி ஏழாம் எட்டாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதே. எனவே இந்தப் பல நூற்றாண்டுக் கால இடைவெளியை நிரப்பும் வகையிலான சிற்ப நூல்கள் எதுவும் கிடைத்தில. வாசுத்து சூத்திர உபநிடதம் இத்தகைய ஒரு நூலாக இருக்கலாம் என்ற கருத்தை இந் நூலை முதன்முதலாகப் பதிப்பித்தவர்கள் கொண்டிருந்தனர். எனினும், இந்நூலின் உட்சான்றுகளும் வெளிச் சான்றுகளும் இந்தக் கருத்தை உறுதி செய்வதாக இல்லை எனச் சில அறிஞர்கள் கருதுகின்றனர்.