வருடு ஊடுருவு நுண்ணோக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வருடு ஊடுருவு நுண்ணோக்கி அல்லது வாருதல்வகை புரையூடுருவு நுண்ணோக்கி (Scanning Tunneling Microscope) என்பது ஒரு பொருளின் மேற்பரப்பினை மிகவும் துல்லியத்துடன் மிக அணுகிப் பார்க்கக்கூடிய ஒரு நுண்ணோக்கி ஆகும். அதாவது அதிக பகுதிறனுடன் (பிரித்தறியும் திறனுடன்) பார்க்கமுடியும். இதன் மூலம் தனித்தனி அணுக்களையும் அறிய முடியும்.

வேலை செய்யும் விதம்[தொகு]

ஒரு வாருதல்வகை புரையூடுருவு மின்னோட்ட நுண்ணோக்கி என்பது ஓர் ஊசி யையும் உடன் ஒரு கணினியையும் முதன்மையாய்க் கொண்டிருக்கும். ஆய்விற்கெடுத்துக்கொள்ளப்பட்ட பொருள் ஊசிமுனை கொண்டு வருடப்படும். காற்றிலோ வெற்றிடத்திலோ மின்னோட்டம் பாயாது என்றாலும், மீக்குறைவான மின்னழுத்த வேறுபாடு ஊசிமுனைக்கும் அப்பரப்பிற்கும் இடையில் ஏற்படுத்தப்படின், அவை நெருக்கமாகக் கொணரப்படுகையில் அவற்றிற்கிடையில் மின்னோட்டம் பாயும்.
ஊசிமுனையின் அணுக்களைப் பரப்பின் எலக்ட்ரான் மேகம் சூழ்ந்திருக்கும்போதோ அல்லது ஊசிமுனை பரப்பின் மீது பட்டுக்கொண்டிருக்கும்போதோ மட்டுமே மின்னோட்டம் பாயும். அதுவும் அவற்றிற்கிடைப்பட்ட தொலைவு அணுப்பரிமாணத்தில் இருக்கும்போது மட்டுமே இது நிகழும். அதற்கும் மேற்பட்ட தொலைவில் இப்புரையூடுருவு விளைவு புறக்கணிக்கத்தக்கதாகும்.
வருடு ஊடுருவு நுண்ணோக்கியை ஒத்த பல நுண்ணோக்கிகள் தற்போது இருந்தாலும் அதிகமாக புழக்கத்தில் இருப்பது அணுப்புற விசை நுண்ணோக்கியே ஆகும்.