வணி
வணி என்பது இந்தியாவின் மகாராட்டிராவின் யவத்மாள் மாவட்டத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும்.[1]
வரலாறு[தொகு]
முன்னைய காலங்களில் வணி நகரமானது 'வுன்' என்று அழைக்கப்பட்டது. பிரித்தானிய ஆட்சியின் போது பெரி மாகாணத்தின் மாவட்ட தலைமையகமாக வணி காணப்பட்டது. பின்னர் யவத்மாள் மாவட்டத்தின் மாவட்ட தலைமையகமான யவத்மாளின் தாலுகாவாக மாற்றம் பெற்றது. தற்போது வணி அபிவிருத்தியடைந்து வரும் நகரமாகும்.
புவியியல்[தொகு]
வணி நகரிற்கும், யவத்மாள் மாவட்ட தலைமையகமான யவத்மாள் நகரிற்கும் இடையிலான தூரம் சுமார் 113 கிமீ (70 மைல்) ஆகும். மகாராட்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரத்தில் இருந்து 132 கிமீ (82 மைல்) தொலைவிலும், அருகிலுள்ள சந்திரபூர் மாவட்டத்தின் தலைமையகமான சந்திரபூர் நகரில் இருந்து 51 கி.மீ (32 மைல்) தொலைவிலும் உள்ளது.
புள்ளிவிபரங்கள்[தொகு]
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி வணி நகரம் அதன் வெளிப்புற பகுதிகளை தவிர்த்து 58,840 மக்கட் தொகையைக் கொண்டிருந்தது. கணேஷ்பூர், சிக்கல்கான், வாக்தாரா, லால்குடா போன்ற கிராமங்கள் நகர எல்லைகளில் காணப்படுகின்றன. ஆனால் நகர மக்கட் தொகையில் அவை சேர்க்கப்படவில்லை. அந்த கிராமங்களின் மக்கட் தொகைகளை இணைப்பதால் வணியின் மக்கட்தொகை ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கு அருகில் அதிகரிக்கிறது. மக்கட் தொகையில் 51% வீதமானோர் ஆண்களும், 49% வீதமானோர் பெண்களும் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு விகிதம் 74% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 80% வீதமும், பெண் கல்வியறிவு 68% வீதமும் ஆகும். 2011 ஆம் ஆண்டின் வணியின் மக்கட் தொகையில் 13% வீதமானோர் 6 வயதுக்குட்பட்டவர்கள்.[2]
இந்தி, சிந்தி, மார்வாடி, பஞ்சாபி, தெலுங்கு, உருது உள்ளிட்ட மொழிகள் பேசப்படுகின்றன. மராத்தி மொழி அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
பொருளாதாரம்[தொகு]
கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் நிலக்கரிச் சுரங்கப் பகுதியை வணி நகரத்தின் சுற்றுப் புறங்களில் கொண்டுள்ளது. உக்னி, பிம்பல்கான், ஜுனாட், கோலர்பிம்ப்ரி, ராஜூர், கும்பர்கனி, கோன்சா போன்ற நிலக்கரி சுரங்கங்கள் காணப்படுகின்றன. மேலும் நகரத்திற்கு அருகில் சில புதிய சுரங்கத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
நகரத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றியுள்ள பகுதிகளின் விவசாயம் மற்றும் சுரங்க வணிகங்களை சார்ந்துள்ளது.
மிகப்பெரிய நிலக்கரி வைப்பு மற்றும் அருகிலுள்ள பகுதியில் பல நிலக்கரி சுரங்கங்கள் இருப்பதால் இந்த நகரம் கருப்பு வைர நகரம் (பிளாக் டயமண்ட் சிட்டி) என்ற பெயரைப் பெற்றது. இப்பகுதியில் சுண்ணாம்புக் கரடுகளும் காணப்படுகின்றன.
இப்பகுதியில் விளையும் முதன்மைப் பயிர்கள் பருத்தி மற்றும் சோயா அவரை என்பனவாகும்.
நகரம் அதன் சந்தைகளுக்காகவும் அறியப்படுகிறது. இப்பகுதியில் வர்த்தகம் வளர்ந்து வருகிறது.
போக்குவரத்து[தொகு]
வணி பேருந்து நிலையம்[தொகு]
வணி பேருந்து நிலையம் மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் எம்.எஸ்.ஆர்.டி.சியின் கீழ் செயற்படுகின்றது.
வணி நகரமானது யவத்மால் , நாக்பூர் , புனே, அவுரங்காபாத், ஆதிலாபாத், அகோலா, அமராவதி, சந்திரபூர் , புசாத் , வாஷிம் , கட்சிரோலி , தர்வா , டிக்ராஸ் , நேர்போன்ற முக்கிய நகரங்களுடன் எம்.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் பேருந்துகள் மூலம் அருகிலுள்ள நகரங்களான மரேகான் , பண்டர்காவ்டா , கோர்பானா மற்றும் பல கிராமங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டிகள் நகரத்தினுள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படுகின்றன.
வணி தொடருந்து சேவை[தொகு]
மத்திய ரயில்வேயின் நாக்பூர் பிரிவின் கீழ் வணி தொடருந்து நிலையம் செயற்படுகின்றது.
நாக்பூர், மும்பை, ஹிங்காங்கட், வர்தா, நந்தேத் மற்றும் பிற நகரங்களுக்கு தினசரி தொடருந்து சேவை உண்டு.
தொடருந்துகளில் அதிக அளவில் நிலக்கரி மற்றும் பிற பொருட்கள் ஏற்றப்படுகின்றன.
சான்றுகள்[தொகு]
- ↑ "NGA GeoNames Additional Attributes". geonames.nga.mil. 2019-11-25 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Maharastra, Yavatmal, Wani Subdistrict, Wani (M Cl)".