வசிட்டரும் அருந்ததியும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வசிட்டரும் அருந்ததியும் (Mizar and Alcor) சப்தரிசி மண்டலத்தின் ஒரு பகுதியான விண்மீன் குழுவாகும். சப்தரிசி மண்டலம் வடக்கு வானில் இரவு நேரத்தில் மிக எளிதாக அடையாளம் காணக்கூடிய நட்சத்திரக் கூட்டங்களில் ஒன்று. அதன் ஒரு பகுதியான வசிட்டர் விண்மீண் குடும்பத்தில் நான்கு விண்மீன்களும் அருந்ததி விண்மீன் குடும்பத்தில் இரண்டு விண்மீன்களும் உள்ளன.

புராணக் கதை[தொகு]

புராதன காலத்தில் பூமியில் வாழ்ந்ததாக கூறப்படும் மிகச் சிறந்த பிரம்மரிசிகள் (முனிவர்கள்) ஏழு பேரும் (சப்த ஏழு) வானில் நட்சத்திரங்களாக ஒளி வீசுகிறார்கள். அந்த பிரம்மரிசிகள் கிரது, புலஹ, புலஸ்த்ய, அத்திரி, அங்கிரஸ், வசிட்டர், மரீசி என்பனவாகும். இந்த சப்தரிசி மண்டலத்தில் ஏழு நட்சத்திரத்தில் ஒரு நட்சத்திரத்திற்கு அருகில் எட்டாவதாக இன்னும் ஒரு நட்சத்திரம் உண்டு. அந்த இரண்டு நட்சத்திரங்கள் வசிட்டரும் அவர் மனைவி அருந்ததியும் என்றும் ஐதீகம் உண்டு. ஏனைய ஆறு ரிசிகள் சபலத்தால் ரம்பா, மேனகை, ஊர்வசி போன்ற வான தேவதைகளிடம் நிலை தடுமாறியிருந்தவர்கள். இவர்களின் மனைவிமார்களும் இந்திரனைப் பார்த்து தன்னிலை மறந்தவர்கள். ஆனால் வசிட்டரும், அருந்ததியும் விதிவிலக்கானவர்கள். எனவே அவர்கள் எப்போதும் இணைந்தே இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து வாழ்க்கையில் இணைபிரியாது வாழவேண்டும் என்பதற்காய் திருமணங்களின் போது புதுமணத் தம்பதிகளுக்கு வானில் அருந்ததி பார்த்து ஆசி பெறும் விழுமிய நிகழ்வும் நடைபெறுகின்றது.

வானியல் சான்றுகள்[தொகு]

வானியலில் வசிட்டர் நட்சத்திரம் மிஸார் எனவும், அருந்ததி அல்கோர் எனவும் அழைக்கப்படுகிறது. வசிட்டரும், அருந்ததியும் இரட்டை நட்சத்திரங்கள் அல்ல. ஆனால் ஒவ்வொன்றும் தனித்தனியே இரட்டை நட்சத்திரங்கள். அதிலும் மிஸார் என அழைக்கப்படும் வசிஷ்ட நட்சத்திரம் தான் வானியல் வரலாற்றில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டை நட்சத்திரம். 35,000 மில்லியன் மைல்கள் இடைவெளியில் மிஸார் ஏ, மிஸார் பி என்ற இரு நட்சத்திரங்களும் ஒன்றை ஒன்று சுற்றிக் கொள்கின்றன.

சப்தரிசி மண்டலத்தில் உள்ள ஏழு நட்சத்திரங்களும் வெறுபட்ட தன்மையுடையன. துபே, அல்கெய்ட், மிஸார் மேராக், ஃபெக்டா, மெக்ரஸ் வரிசையில் ஒன்றைவிட ஒன்று மங்கலானது. துபே சற்று செம்மஞ்சள் நிறம் கொண்ட 5000 பாகை செல்சியஸ் வெப்ப நிலை கொண்டதாகும். மற்றவை வெண்மை நிறமுடைய 18,000 பாகைக்கும் மேலான வெப்ப நிலை உள்ளவை. சப்தரிசி மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரமும் வெற்வேறான திசைகளில் அதிவேகமாகப் பயணம் செய்கின்றன.

சப்தரிசி மண்டலத்தின் முதல் இரண்டு நட்சத்திரங்களான துபே, மெராக்சையும் இணைக்கும் கற்பனைக்கோடு தற்போதுள்ள துருவ நட்சத்திரமான போலாரிஸ்க்கை காட்டுவதனால் இவற்றை காட்டிகள் என அழைக்கப்படுகின்றது. பூமியின் சுழற்சி அச்சு இதனை நோக்கித் தான் அமைந்துள்ளது. இதனால் மற்ற நட்சத்திரங்கள் பூமியின் நகர்வுக்கு ஏற்ப இடம் மாறினாலும் துருவ நட்சத்திரம் ஒரே இடத்தில் தான் இருக்கும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]