வக்ஃபு
வக்ஃபு (waqf) என்பதன் பொருள் (அறக்கொடையை) நிலைநாட்டுதல் ஆகும். ஒரு சொத்தை வக்ஃபு செய்வதன் மூலம் அந்தச் சொத்தின் உரிமையை இறைவனுக்கு அர்ப்பணித்து, அதன் வருமானத்தையும், பலனையும் மக்களின் நலனுக்காக செலவிடுவதே நோக்கமாகும். வக்ஃப் அளிப்பவரை வாகிஃப் என்பர். இசுலாமிய சமயம் தொடர்பாக பள்ளிவாசல், கல்வி நிலையம் அல்லது தொண்டு நிறுவனம் அமைக்கும் நோக்கத்திற்காக ஒரு முஸ்லீம் இறைவன் பெயரால் வழங்கிய அறக்கொடை ஆகும். ஒருவர் தன்னுடைய சொத்துக்களை வக்ஃபு என்ற அறம் செய்து விட்ட பிறகு அவரோ, அவருடைய வழித்தோன்றல்களோ அந்தச் சொத்துக்களின் நிர்வாகிகளாக இருக்க முடியுமே தவிர, உரிமையாளர்களாக இருக்க முடியாது.
வக்ஃபின் வகைகள்
[தொகு]பொதுவாக வக்ஃபு சொத்துக்கள் பொது வக்ஃபு தனி வக்ஃபு, பாதி பொது, தனி வக்ஃபு என மூவகைப்படும். பாலம், கிணறு, சாலை போன்ற அறக்கொடைகள் பொது வக்ஃப் என்பர். வக்ஃபு அளிப்பவரின் குடும்ப நலனுக்கும், உறவினருக்கும் மட்டுமே நன்மை அளிப்பது தனி வக்ஃபு ஆகும். குடும்ப நலனுக்காகப் பாதியும், பொது நலனுக்காகப் பாதியும் அர்ப்பணிக்கப்படும் போது பாதி பொது வக்ஃப், பாதி தனி வக்ஃபு ஆகும்.
இந்தியாவில் வக்ஃப் சட்டம்
[தொகு]பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக்காலத்தில் முதன்முதலாக வக்பு சொத்துக்கள் தொடர்பாக 1923-ஆம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டது. [1]1954-ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசு இயற்றிய 1923-ஆம் ஆண்டின் வக்ஃபு சட்டத்தை நீக்கி விட்டு, 1954-ஆம் ஆண்டி புதிய வக்பு சட்டம் இயற்றப்பட்டது.[2] இச்சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் வக்ஃபு சொத்துக்களை நிர்வகிக்க தமிழ்நாடு வக்பு வாரியம் போன்று வக்பு வாரியங்கள் நிறுவப்பட்டது. பின்னர் 1995-ஆம் ஆண்டில் புதிய வக்பு சட்டம் இயற்றப்பட்டு, 1954-ஆம் ஆண்டு வக்பு சட்டம் நீக்கப்பட்டது.[3]
வக்ஃபு சொத்துக்களின் நிர்வாகம்
[தொகு]வக்ஃபு சொத்துக்களை நிர்வகிப்பவர்களை முத்தவல்லி என்பர். வக்ஃபு சொத்துகளான பள்ளிவாசல்கள், தர்காக்கள், சமயக் கல்வி நிலையங்களான (மதராசாகள்), பொதுக் கல்வி நிறுவனங்களான பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் போன்றவைகளை நிர்வகிப்பதற்கு, அவைகளை கொடையாக கொடுத்தவர்களையே அல்லது அவரது வழித்தோன்றல்களை முத்தவல்லிகளாக வக்ஃபு வாரியம் நியமனம் செய்யும். கொடையாளர்களின் வாரிசுகள் இல்லாது போனால், வக்ஃபு வாரியம் பொறுப்பானவர்களை முத்தவல்லியாக நியமிக்கலாம். முத்தவல்லி நியமனத்தில் சர்ச்சைகள் ஏற்பட்டால் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் முடிவு எடுக்கும்.