லூர்தம்மாள் சைமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

லூர்தம்மாள் சைமனின் இயற்பெயர் மரிய லூர்தம்மாள். இவர் கி.பி. 1911 செப்டம்பர் 26-இல் கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடி மீனவர் கிராமத்தில் பிறந்தார். இவர் முக்குவர் சமூகத்தைச் சார்ந்தவர். இவருடைய தகப்பனார் பெயர் அலெக்சாண்டர். இவருடைய தாயார் வாவத்துறை மீனவர் கிராமத்தைச் சார்ந்தவர். இவருடைய தகப்பனார் இலங்கையில் கொழும்புத் துறைமுகத்தில் கருவாட்டு ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். லூர்தம்மாள், பத்தாம் வகுப்பு வரை நாகர்கோவில் புனித யோசப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயின்றார். தனது படிப்பினை முடித்தபிறகு அதே பள்ளியில் சிலகாலம் ஊதியம் பெறாத ஆசிரியராகப் பணி புரிந்தார்.

மரிய லூர்தமாளுக்கும் குளச்சலை சார்ந்த அலெக்சாண்டர் மேனுவேல் சைமனுக்கும் மேலமணக்குடி ஆலயத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் வளைகுடா நாட்டில் சில வருடங்கள் வாழ்ந்து வந்தனர். அப்பொழுது லூர்தம்மாளின் கணவர் ஈரான் எண்ணெய் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். இவர்களுக்கு ரால்ஃப் சைமன், ஜாண் எட்மண்ட் சைமன் பிறந்தனர். இரண்டு குழுந்தைகள் பிறந்தவுடன் தாயகம் திரும்பினர். நாகர்கோவிலில் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கினர். அதன்பின்பாக ஜஸ்டின் ஆஸ்கர் சைமன், கியூபர்ட் டோமினிக் சைமன், பீட்டர் வில்பிரட் சைமன் ஆகியோர் பிறந்தனர்.

லூர்தம்மாளின் கணவர் அலெக்சாண்டர் மேனுவேல் சைமன் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசில் இணைந்தார். அப்பொழுது கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் இருந்தது. 1951 விளவங்கோடு தொகுதியிலும், 1954 கொல்லங்கோடு தொகுதியிலும் வெற்றிபெற்று கேரளாவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1956 கன்னியாகுமரி மாவட்டமானது சென்னையுடன் இணைக்கப்பட்டது. 1957-இல் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக லூர்தம்மாள் சைமன், குளச்சல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்[1]. 1957-62ல் காமராஜரின் இரண்டாவது அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் மீன்வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்[2].

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=லூர்தம்மாள்_சைமன்&oldid=2513279" இருந்து மீள்விக்கப்பட்டது