ரென்சோ பியானோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாழ்நாள் செனட்டர்
ரென்சோ பியானோ
OMRI OMCA
Piano, Renzo.png
தனிப்பட்ட விவரங்கள்
நாட்டினம்இத்தாலியன்
பிறப்பு14 செப்டம்பர் 1937 (1937-09-14) (அகவை 84)
செனோவா, இத்தாலி
பாடசாலைமிலானோ தொழில்நுட்ப நிறுவனம்
பணி
கட்டிடங்கள்கன்சாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்
ஜார்ஜ் பொம்பிடூ மையம்
பார்க்கோ டெல்லா மியூசிக்கா
சார்ட் இலண்டன் பாலம்
நியூயார்க் டைம்ஸ் கட்டிடம்
அமெரிக்கக் கலைக்கான விட்னி அருங்காட்சியகம்
லாஸ் ஏன்சல்ஸ் கவுன்டி கலை அருங்காட்சியகம்
விருதுகள்பிரிட்ஸ்கர் கட்டிடக்கலைப் பரிசு
ஆர்.ஐ.பி.ஏ தங்கப் பதக்கம்
சோனிங் பரிசு
ஏ.ஐ.ஏ தங்கப்பதக்கம்
கியோட்டோ பரிசு

ரென்சோ பியானோ ஒரு இத்தாலியக் கட்டிடக்கலைஞரும் பொறியாளரும் ஆவார். பாரிசில் உள்ள ஜார்ச் பொம்பிடோ மையம் (1977), இலண்டனில் உள்ள “த சார்ட்” (2012), நியூயார்க் நகரத்தில் உள்ள அமெரிக்கக் கலைக்கான விட்னி அருங்காட்சியகம் (2015) என்பன இவர் வடிவமைத்த கட்டிடங்களுள் அடங்கும். 1998 ஆம் ஆண்டுக்கான கட்டிடக்கலைக்கான பிரிட்ஸ்கர் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

இளமைக் காலமும் தொடக்கக் கட்டிடங்களும்[தொகு]

பியானோ இத்தாலியின் செனோவா நகரில்,[1] கட்டுமானத் தொழில் சார்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். பியானோவின் பாட்டனார் ஒரு கற்கட்டுமானத் தொழிலைத் தொடங்கி நடத்தி வந்தார், அதை பியானோவின் தந்தை கார்லோ பியானோவும் பாட்டனாரின் மூன்று உடன்பிறந்தோரும் இணைந்து விரிவாக்கினர். தந்தையார் ஓய்வுபெற்ற பின்னர், ரென்சோவின் மூத்த தமையன் எர்மானோ தொழிலைப் பொறுப்பேற்றார். எர்மானோ செனோவாப் பல்கலைக் கழகத்தில் பொறியல் கல்வி கற்றவர். ரென்சோ மிலான் பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை பயின்றார். ‘’கியுசெப்பே கிரிபினி’’ என்பவரின் கீழ் மட்டு ஒருங்கிணைப்பு (modular coordination) பற்றிய ஆய்வுடன், 1964 இல் பட்டம் பெற்றார்.[2] பின்னர், இவர் இலகு கட்டமைப்புகள், அடிப்படைக் கட்டிடங்கள் தொடர்பான சோதனைகளில் ஈடுபட்டார்.[3]

1965 முதல் 1968 வரை ரென்சோ பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கற்பிப்பதில் ஈடுபட்டிருந்தார். பின்னர் இவர் இரண்டு பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்ததன் மூலம் தனது நோக்குகளையும், தொழில்நுட்பத் திறமைகளையும் விரிவாக்கிக்கொண்டார். இவற்றுள் ஒரு நிறுவனம் பிலடெல்பியாவில் இருந்த, நவீனத்துவக் கட்டிடக்கலைஞர் லூயிஸ் கான் என்பவருடையது. மற்றது, இலண்டனில் இருந்த போலந்துப் பொறியாளர் சிக்மண்ட் இசுட்டனிசுலோ மாக்காவோவ்சுக்கி என்பவருடையது. இவரது முதல் கட்டிடமான, ஜெனோவா ஐ.பி.ஈ தொழிற்சாலை 1968 இல் கட்டிமுடிக்கப்பட்டது. இக்கட்டிடத்தின் கூரை எஃகு (உருக்கு), வலிதக்கப்பட்ட நெகிழி ஆகியவற்றைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டிருந்தது. 1970 இல், இவரது முதல் பன்னாட்டு வேலையான சப்பானின் ஒசாக்காவில் இடம்பெற்ற எக்ஸ்போ 70 க்கான இத்தாலியத் தொழிற்றுறை அரங்கின் வடிவமைப்புப் பணி இவருக்குக் கிடைத்தது. இவர் தனது தமையனான எர்மானோவுடனும், குடும்ப நிறுவனத்துடனும் இணைந்து இவ்வேலையை முன்னெடுத்தார். இவரது குடும்ப நிறுவனமே கட்டிடத்துக்கான கட்டமைப்புக்களை உற்பத்தி செய்தது. இது இலகுவான அமைப்பாகவும், எஃகு, வலிதாக்கப்பட்ட பாலியெஸ்டர் ஆகியவற்றைப் படன்படுத்திச் செய்யப்பட்டதாகவும் இருந்ததுடன், கலைத்துவம் தொண்டதாக இருந்த அதேவேளை தொழிற்றுறைக்கான தோற்றத்தையும் கொண்டிருந்தது.[4]

1970 ஆம் ஆண்டின் ஒசாக்கா அமைப்பு பிரித்தானியக் கட்டிடக்கலைஞரான “ரிச்சார்ட் ரோஜர்சு” என்பவரால் பாராட்டப்பட்டது. 1971 இல் ரோஜர்சும், பியானோவும் சேர்ந்து “பியானோ அன்ட் ரோஜர்சு” என்னும் நிறுவனத்தை உருவாக்கி 1971 இலிருந்து 1977 வரை ஒன்றாகப் பணியாற்றினர். இந்த நிறுவனம் ஈடுபட்ட முதல் திட்டம், இத்தாலியத் தளவாட நிறுவனம் பி & பி இத்தாலியாவுக்காக இத்தாலியின் கோமோவில் உள்ள நோவேட்ரேட் என்னும் இடத்தில் கட்டிய கட்டிடம் ஆகும். இக்கட்டிடம் தொங்க விடப்பட்ட கொள்கலனையும், திறந்த தாங்கும் கட்டமைப்பையும் கொண்டிருந்தது. கட்டிடத்தின் வெளிப் பகுதியில் இருந்த வெப்பமாக்குவதற்கும், நீர் வழங்குவதற்குமான குழாய்களுக்குப் பிரகாசமான நிறங்கள் (நீலம், சிவப்பு, மஞ்சள்) பூசப்பட்டிருந்தன.[5] இந்த வழமைக்கு மாறான அம்சங்கள் கட்டிடக்கலை உலகில் பெருமளவு கவனத்துக்கு உள்ளானதுடன், பொம்பிடூ மையத்தை வடிவமைப்பதற்கான போட்டியில் பியானோ & ரோஜர்சு நிறுவனம் தெரிவு செய்யப்படுவதில் நடுவர்கள் மத்தியில் செல்வாக்கும் செலுத்தியிருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரென்சோ_பியானோ&oldid=2693136" இருந்து மீள்விக்கப்பட்டது