ரத்தினநாயகர் அண்ட் சன்ஸ் பதிப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரத்தினநாயகர் அண்ட் சன்ஸ் பதிப்பகம் என்பது ஒரு தமிழ்ப் பதிப்பகம் ஆகும். இப்பதிப்பகம் 1920 ஆம் ஆண்டு பி. ரத்தின நாயகர் என்பவரால் சென்னை, கொண்டித்தோப்பு வெங்கட் ராம தெருவில் துவக்கப்பட்டு தற்போதுவரை இயங்கிவருகிறது.

வரலாறு[தொகு]

துவக்கத்தில் புத்தகக் கடை வைத்திருந்த ரத்தின நாயக்கர் 1920 இல் புத்தகங்களைப் பதிப்பித்து வெளியிடத் துவங்கினார். இவரது மரணத்திற்குப்பின் இவரது மகன் ரங்கசாமி நாயகர் பதிப்புத் தொழிலைத் தொடர்ந்தார். இவர் பதிப்பித்த முதல் நூல் ஆத்திச்சூடி. அதன்பிறகு, 15 சித்தர்களின் 'ஞானக் கோவை' எனும் 800 பக்க புத்தகத்தைப் பதிப்பித்தார். இன்றுவரை இந்த நூல் விற்பனையில் சாதனை படைத்துவருகிறது. அக்காலத்தில் புத்தகங்களில் இருக்கிற எழுத்துகள் மிகவும் சிறியதாக இருந்ததாலும் மின்வசதி இல்லாத காரணத்தால் படிக்க சிரமப்பட்டவர்களின் வசதிக்காக பெரிய எழுத்து கருட புராணம், பெரிய எழுத்து மகாபாரதம் என்று அட்டைகளில் அச்சிடப்பட்ட 'பெரிய எழுத்து' புத்தகங்களை வெளியிட்டனர் இந்த உத்தியைப் பின்னாட்களில் இதர பதிப்பாளர் களும் பின்பற்றத் துவங்கினர். இவர்களின் வெளியீடும், வைத்திய வித்துவான் மணி சி. கண்ணுசாமிப் பிள்ளை எழுதிய சித்த மருத்துவம் தொடர்பான ஏழு புத்தகங்களும் சித்த மருத்துவக் கல்லூரிகளில் பாட நூல்களாகவும் இருக்கின்றன. அதேபோல கர்ண மோட்சம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட தெருக்கூத்து நாடகப் பிரதிகளும் ஆய்வுகளுக்காகப் பல்வேறு பல்கலைக்கழக மாணவர்களால் விரும்பி வாங்கப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "அது ஒரு 'பெரிய எழுத்து' வரலாறு!". கட்டுரை. தி இந்து. 8 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 அக்டோபர் 2016.