யோ. பெனடிக்ற் பாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோ. பெனடிக்ற் பாலன்
பிறப்பு1939
இறப்பு1997 (அகவை 57–58)
தேசியம்இலங்கைத் தமிழர்
கல்விமுதுகலை (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
பணிஆசிரியர்
அறியப்படுவதுஎழுத்தாளர்

யோ. பெனடிக்ற் பாலன் (1939 – 1997) ஈழத்து எழுத்தாளர் ஆவார். இவர் பல சிறுகதைகளையும், புதினங்களையும், நாடகங்களையும், கல்வியியல் சார் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது 'விபச்சாரம் செய்யாதிருப்பாயாக' என்ற சிறுகதைத் தொகுதிக்கு 1995 இல் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

பெனடிக்ற் பாலன் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், அரசறிவியலில் சிறப்புப் பட்டமும் பெற்றவர்.[2] யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் லெனினது கல்விச் சிந்தனைகளை ஆய்வு செய்து முதுகலைப் பட்டம் பெற்றார்.[3] கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பத்திராதிபராகப் பணியாற்றிய இவர் பயிற்றப்பட்ட ஆசிரியராக பதுளை, கந்தேகெதரைத் தமிழ் மகா வித்தியாலயத்தில் 1964 முதல் ஐந்து ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.[2] உளவியல் விரிவுரையாளராகக் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் 1984 முதல் 8 ஆண்டுகள் பணியாற்றிப் பின்னர் பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றினார்.[4]

எழுத்துப் பணி[தொகு]

யாழ் இளம் எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்து, அதன் வெளியீடான "மலர்" என்னும் சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றினார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க யாழ் கிளையின் தீவிர செயற்பாட்டாளராகவும் விளங்கினார்.[4] தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, ஈழநாடு, முரசொலி ஆகிய பத்திரிகைகளிலும் தாமரை, தாயகம், வசந்தம், குமரன், சிரித்திரன் ஆகிய இதழ்களிலும் இவரது கதைகள் பிரசுரமாகின.[4] மலையகம் குறித்த பல சிறுகதைகளை எழுதியுள்ளார். வசந்தம் இதழில் தொடராக வெளிவந்து நூலுருப் பெற்ற இவரது "சொந்தக்காரன்" என்ற புதினம்[2] மலையக மக்களின் வீடில்லாப் பிரச்சினையை மையமாகக் கொண்டது.[4] இந்நூல் இவருக்கு இலக்கிய உலகில் ஒரு நிரந்தர இடத்தைப் பெற்றுக் கொடுத்தது. இவரது நீயொரு பெக்கோ என்ற நாடகம் நன்கறியப்பட்டதாகும்.

வெளியான நூல்கள்[தொகு]

  • குட்டி (குறுநாவல் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், 1963
  • தனிச்சொத்து (குட்டிக் கதைகள், கண்டி கலாசாரக் குழு, 1975)
  • சொந்தக்காரன் (புதினம், பாரி நிலையம், சென்னை, 1968)
  • விபசாரம் செய்யாதிருப்பாயாக.. (பதினெட்டுச் சிறுகதைகள்)
  • கல்வி உளவியல் அடிப்படைகள் (பூபாலசிங்கம் புத்தகசாலை - பதிப்பகம், 1996)
  • பலஸ்தீனம் என்னை அழைக்கிறது (குறும் புதினம்)
  • தலைவிதியைப் பறிகொடுத்தோர்
  • தேவி (த. கனகரத்தினத்துடன் இணைந்து எழுதியது, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1981)

மேற்கோள்கள்[தொகு]

தளத்தில்
யோ. பெனடிக்ற் பாலன் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோ._பெனடிக்ற்_பாலன்&oldid=3432417" இலிருந்து மீள்விக்கப்பட்டது