மேளகர்த்தா இராகங்களின் அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கருநாடக இசையில் 72 மேளகர்த்தாச் சக்கரத்தின் அமைப்பு முக்கியமானது. இந்த அமைப்பைக் கொண்டு எந்தவொரு இலக்கம் உள்ள மேளகர்த்தா இராகத்தின் அடையாளப் பண்பையும் (இராக லட்சணத்தையும்) எளிதில் அறிந்து கொள்ளலாம். இந்த 72 மேளகர்த்தாச் சக்கரம் கர்நாடக சங்கீதத்திற்கு மகுடம் போன்றது என்பர். இம் முறையை வேங்கடமகி தாம் இயற்றிய சதுர்த்தண்டிப்பிரகாசிகை என்னும் நூலில் விளக்கியுள்ளார்.

ஒரு கட்டையில் (ஸ்தாயியிலுள்ள) 12 சுரங்கள் உள்ளன என்பது பல நாட்டு இசைக்கும் பொதுவானது. இந்த 12 சுரங்களைக் கொண்டு பின்னி விரிவாக்கப்பட்டிருக்கும் (பிரஸ்தரிக்கப் பட்டிருக்கும்) 72 மேளகர்த்தாக்கள், பிற நாட்டு இசை இலட்சண, இலட்சிய கலைஞர்களும் போற்றும் ஒன்று.

விவரம்[தொகு]

72 மேளகர்த்தாச் சக்கரம் 2 சரிசமமான பாகங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. முதல் பாகத்தில் வரும் 36 மேளகர்த்தாக்களுக்கு பூர்வ மேளகர்த்தாக்கள் என்றும் இரண்டாம் பாகத்தில் வரும் 36 மேளகர்த்தாக்களுக்கு உத்தர மேளகர்த்தாக்கள் என்றும் பெயர். 1-36 மேளகர்த்தாக்களில் சுத்த மத்திம சுரமும், 37- 72 மேளகர்த்தாக்களில் பிரதி மத்திம சுரமும் வருவதால் பூர்வ மேளகர்த்தாக்களை சுத்த மத்திம மேளகர்த்தாக்கள் என்றும், உத்தர மேளகர்த்தாக்களை பிரதி மத்திம மேளகர்த்தாக்கள் என்றும் அழைப்பர். பூர்வ பாகத்திலும், உத்தர பாகத்திலும் மேளகர்த்தா இராகங்கள் ஒரே விதமான வரிசை முறைப்படி வருகிறன.

72 மேளகர்த்தாக்களும் 12 சிறிய சக்கரங்களின் கீழ் வகுக்கப் பட்டிருக்கின்றது. அவையாவன:

 1. இந்து - சந்திரனுக்கு இந்து மறு பெயர். ஒரே ஒரு சந்திரன் இருக்கயில், முதல் சக்கரத்தின் பெயர் இந்து.
 2. நேத்ர - நேத்ர என்பது கண்களை குறிக்கும். அதிகமான விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கண்கள் இரண்டு. ஆதலால் இரண்டாம் சக்கரத்திற்கு இந்த பெயர் சூட்டபட்டிருக்கிறது.
 3. அக்னி - மூன்று வகை அக்னிகளைக் குறித்து மூன்றாம் சக்கரத்திற்கு அக்னி என்று பெயர்.
 4. வேத - 4வது சக்கரம் நான்கு வேதங்களை குறித்து வேத என்றழைக்கபடுகிறது.
 5. பாண - பஞ்ச பாணங்களை குறித்து பாண என்று 5வது சக்கரத்தை அழைக்கிறோம்.
 6. ருது - வருடத்தில் ஆறு காலங்களை குறித்து ருது என்று 6வது சக்கரத்தை அழைக்கிறோம்.
 7. ரிஷி - மாமுணிவர்கள் ஏழு. ஆதலால் 7வது சக்கரத்தை ரிஷி என்றழைக்கப்படுகிறது.
 8. வசு - வசுக்கள் எட்டு. அதன் அடிப்படையில் 8வது சக்கரத்திற்கு வசு என்று பெயர்.
 9. பிரம்ம - ஒன்பது பிரம்மாக்களை குறித்து 8வது சக்கரத்திற்கு பிரம்ம என்று பெயர்.
 10. திசி - ஆகாசம் மற்றும் பாதாளத்துடன் பத்து திசைகள். ஆதலால் 10வது சக்கரத்திற்கு பெயர் திசி.
 11. ருத்ர - 11 ருத்ர வகைகளையொட்டி 11வது சக்கரத்திற்கு பெயர் ருத்ர என்று சூட்டபட்டிருக்கிறது.
 12. ஆதித்ய - 12 ஆதித்யர்களை குறித்து 12வது சக்கரத்திற்கு ஆதித்ய என்று பெயர்.

சுரங்கள் வேறுபாடு[தொகு]

"ரி" , "க" சுரங்கள் சக்கரத்திற்கு சக்கரம் வேறுபடும்.

1, 7 சக்கரங்களில் சுத்த ரிஷபம் சுத்த காந்தாரம்
2, 8 சக்கரங்களில் சுத்த ரிஷபம் சாதாரண காந்தாரம்
3, 9 சக்கரங்களில் சுத்த ரிஷபம் அந்தர காந்தாரம்
4, 10 சக்கரங்களில் சதுஸ்ருதி ரிஷபம் சாதாரண காந்தாரம்
5, 11 சக்கரங்களில் சதுஸ்ருதி ரிஷபம் அந்தர காந்தாரம்
6, 12 சக்கரங்களில் ஷட்சுருதி ரிஷபம் அந்தர காந்தாரம்

தைவத நிஷாத சுரங்கள் கர்த்தாவுக்கு கர்த்தா வேறுபடும்.

1வது கர்த்தா இராகத்தில் சுத்த தைவதம் சுத்த நிஷாதம்
2வது கர்த்தா இராகத்தில் சுத்த தைவதம் கைசிகி நிஷாதம்
3வது கர்த்தா இராகத்தில் சுத்த தைவதம் காகலி நிஷாதம்
4வது கர்த்தா இராகத்தில் சதுஸ்ருதி தைவதம் கைசிகி நிஷாதம்
5வது கர்த்தா இராகத்தில் சதுஸ்ருதி தைவதம் காகலி நிஷாதம்
6வது கர்த்தா இராகத்தில் ஷட்சுருதி தைவதம் காகலி நிஷாதம்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]