உள்ளடக்கத்துக்குச் செல்

மூளை தண்டுவட திரவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூளையின் வெண்ட்ரிகிள்கள், உப சிலந்தி வலையுருப் பிரதேசம் மற்றும் தண்டுவட மையக் குழியினுள்ளும் நிரம்பியுள்ள நிறமற்ற, தெளிவான திரவம் மூளைத் தண்டுவடத் திரவம் (Cerebro-spinal fluid) அல்லது மூளைய முண்ணாண் பாய்பொருள் ஆகும். மூளையின் வெண்ட்ரிகிள்களில் (மூளைய அறைகள்) உள்ள தோலுருப் பின்னல் (choroid plexus) சுரப்புக் கலங்களான எப்பண்டைமல் கலங்களால் மூளைத் தண்டுவடத் திரவத்தைச் சுரக்கப்படுகின்றது. சராசரியாக,ஒரு மனிதனில் உள்ள இத்திரவத்தின் அளவு 150 மில்லி லிட்டர். ஒரு நாளில்,550 மில்லி லிட்டர்த் திரவம் சுரக்கப்படுகிறது.இத்திரவத்தின் பணிகளானவை: தலை அசையும் பொழுது, அல்லது மத்திய நரம்பு மண்டலம் அதிர்ச்சிக்குள்ளாகும் போது இத்திரவம் அதிர்வு தாங்கியாகச் செயல்படுகிறது. மத்திய நரம்பு மண்டலத்தின் பாதுகாப்பு உறையாகவும், மூளையின் மிதவை இயல்பையும் சரிசெய்கிறது. மூளை மற்றும் தண்டுவடத்திற்கு தேவையான ஹார்மோன்களையும்,உணவுப் பொருட்களையும் இது சேமித்து வைக்கிறது.இது இயக்கத் தாங்கி (Mechanical Buffer) ஆக இயங்குகிறது. மத்திய நரம்பு மண்டலத்தின் உள்ளும் புறமும் அமைந்து இயக்க அழுத்தத்தைச் சரி செய்கிறது. மண்டையோட்டுக் குழியின் உள்ளழுத்தம் இத்திரவத்தை வெளியேற்றுகிறது. இவ்வழுத்தம் குறையும் போது இத்திரவம் வெளிச்செல்வது நிறுத்திக் கொள்ளப்படுகிறது.

உற்பத்தியும் கூறுகளும்

[தொகு]

மைய நரம்புத் தொகுதிக்குள் நிணநீர்த் தொகுதி இருப்பதில்லை. அத்தொகுதியின் பாய்பொருளான நிணநீரைப் போன்ற தொழிலையும் கட்டமைப்பையும் மூளைய முண்ணான் பாய்பொருள் கொண்டுள்ளது. அது குருதிக்கும் மூளைக்கலங்களுக்கும் இடையில் போசணைக் கூறுகளுக்கும், ஒக்சிசனுக்கும், நீருக்கும் ஒரு கடத்தும் பாதையாகவும் உள்ளது. இது குருதி முதலுருவிலிருந்து உருவாக்கப்படுகின்றது. இது தொடர்ச்சியாகச் சுரக்கப்பட்டும் மீளுறிஞ்சப்பட்டும் உள்ளதால் எப்போதும் புத்துருவத்துடன் பேணப்படுகின்றது. எனினும் மூளைய முண்ணான் பாய்பொருளில் புரத உள்ளடக்கம் பெருமளவு குறைவாகும். உடல் உள்ள நிலைக்கேற்ப இதன் அமுக்கம் மாறுபடும். படுத்திருக்கும் போது 8-15 mmHg அமுக்கமும், நிமிர்ந்து இருக்கும் போது 16-24 mmHg அமுக்கமாகவும் இருக்கும்.

மூளைய முண்ணான் பாய்பொருளினதும் (CSF) குருதி முதலுருக் கூறுகளினதும் செறிவுகளின் ஒப்பீடு [1]
கூறு CSF முதலுரு
நீர் (%) 99 93
புரதம் (mg/dL) 35 7000
குளுக்கோசு (mg/dL) 60 90
பிராசரண அமுக்கம் (mOsm/L) 295 295
சோடியம் (mEq/L) 138 138
பொட்டாசியம் (mEq/L) 2.8 4.5
கல்சியம் (mEq/L) 2.1 4.8
மக்னீசியம் (mEq/L) 0.3 1.7
குளோரைட் (mEq/L) 119 102
pH 7.33 7.41

தொழில்கள்

[தொகு]
  1. மிதவை: மனித மூளை கிட்டத்தட்ட 1400 கிராம் நிறையுடையது. ஆனால் மூளைய முண்ணாண் பாய்பொருளின் அடர்த்தி மூளையின் அடர்த்திக்குக் கிட்டத்தட்ட சமனாக உள்ளதால் மூளையின் அடிப்பாகம் வெறும் 25 கிராம் நிறையையே அனுபவிக்கும். இதனால் கீழுள்ள குருதிக் கலன்கள் நசுக்கப்படாது குருதி விநியோகம் பேணப்பட முடிகின்றது.
  2. பாதுகாப்பு: சிறிய அதிர்வுகள், மோதல்கள் ஏற்படும் போது அதிர்ச்சி உறிஞ்சியாகத் தொழிற்பட்டு மூளையைப் பாதுகாக்கும்.
  3. இரசாயன ஓர்சீர்த்திடநிலை': நரம்புக் கலங்களால் உருவாக்கப்படும் அனுசேபக் கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்களிப்பு வகிக்கின்றது.
  4. குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும்': மூளையில் குருதி விநியோகம் குறையும் போது, மூளைய முண்ணாண் பாய்பொருள் தன் அமுக்கத்தைக் குறைத்து குருதி விநியோகம் சீரடைவதை உறுதி செய்யும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kandel (1985). Principles of Neuroscience.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூளை_தண்டுவட_திரவம்&oldid=3580890" இலிருந்து மீள்விக்கப்பட்டது