முன்முடுகு வெண்பா
முன்முடுகு வெண்பா என்பது பிற்கால யாப்பு முறைகளில் ஒன்று. இதனைக் கடிகைமுத்துப் புலவர் பாடல்களில் காணலாம். கடிகைமுத்துப் புலவர் பாடல்களில் ஆறு பாடல்கள் மட்டும் முன்முடுகு வெண்பா என்னும் தலைப்பிட்டு அதன் கீழ்த் தரப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. [1] இந்தப் பாடல்கள் வெண்பாவுக்கு உரிய வெண்டளை தட்டுப்பட்டுச் செப்பலோசை குன்றியனவாக அமைந்துள்ளன. செப்பலோசை குன்றி முடுகிசை கொண்டு வெண்பாவைப் போல அமைந்த பாடல்களை முடுகு வெண்பா எனப் பெயரிட்டு வழங்கியுள்ளனர்.
எடுத்துக்காட்டு
[தொகு]கன்னிமுக நன்னிலவு கன்னலித ழின்னிலவு
பன்னுநகை வன்னமுலை பன்னிருகை - மன்னவநின்
மின்னயிலை யன்னவிழி மின்னலிடை பின்னுசடை
அன்னநடை யின்னவறி வாய். [2]
இந்த வெண்பா செப்பலோசை குன்றாமல் வெண்பாவின் முன்பகுதியும் பின்பகுதியும் முடுகி வந்துள்ளன.
முடுகிசை
[தொகு]கன்னிமுக நன்னிலவு கன்னலித ழின்னிலவு
பன்னுநகை வன்னமுலை பன்னிருகை - மன்னவநின்
மின்னயிலை யன்னவிழி மின்னலிடை பின்னுசடை
அன்னநடை யின்னவறி வாய்.
முடுகிசை என்பது நெடிலெழுத்து வராமல் முடுகி நடப்பது. இந்தப் பாடலில் தடித்த எழுத்துகளில் காட்டப்பட்டுள்ளவை முடுகு ஓசை கொண்டவை. ஏனைய பாடல்களில் முன்னிரண்டு அடிகளில் மட்டும் முடுகிசை உள்ளதையும், வெண்பாவுக்கு உரிய செப்பலோசை குன்றி வருவதையும் விக்கி மூலத்தில் உள்ள பாடல்களில் காணலாம்.
பாடலின் பொருள்
[தொகு]வெங்கடேசு ரெட்டன் என்னும் தலைவன்மீது காதல் கொண்ட தலைவி ஒருத்தி பாடுகிறாள். அவனுக்குத் தன் அழகு இப்பட்டது என்று சொல்லிக்காட்டுகிறாள். இப்படிப்பட்ட என்னை நீ அடைவதற்கு என்ன தயக்கம் என்பது உட்பொருள். என் நெற்றி நல்ல நிலாவின் கன்னிமுகமாக, இளநிலா முகமாக, பிறைநிலா முகமாக இருப்பதைப் பார். என் இதழ் கன்னல் (கரும்பு) நிலவாக இருப்பதைப் பார். நான் பன்னுகின்ற புன்னகையைப் பார். அழகிய வன்னம் கொண்டு என் முலையைப் பார். நீ பன்னிரண்டு கைகளை உடைய முருக மன்னவனாகவே இருக்கிறாயே. உன் கையில் மின்னும் அயில் (வேல்) இருக்கிறது என்கிறாயா? அந்த வேல் போன்ற கண் என்னிடம் இருக்கிறதே. மின்னல் போல் ஒசியும் இடை இருக்கிறதே. பின்னிய சடை இருக்கிறதே. அன்னம் போன்ற நடை இருக்கிறதே. இன்ன பல என்னிடம் இருப்பதை நீ அறிவாயே. – என்கிறாள்.
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ தனிப்பாடல் திரட்டு கடிகைமுத்துப் புலவர் தனிப்பாடல்கள், பக்கம் 159 முதல் 196, பாடல் எண் 191 முதல் 196
- ↑ வெண்பா எண் 132