கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதுகுநாண் என்பது கரு நிலையில் எல்லா முதுகுநாணி விலங்குகளிலும் காணப்படும் வளையக்கூடிய தண்டு அல்லது உருளையான குச்சி போன்ற உடல் அமைப்பு. இம் முதுகுநாண் உடலின் அச்சு போன்று, தலை போன்ற பகுதியில் இருந்து வால் போன்ற பகுதிவரை வரை நீண்டிருக்கும். இம் முதுகுநாண், கரு உருவாகும் முதல்நிலைகளில் தோன்றும் மேசோடெர்ம் (mesoderm) எனப்படும் கருநிலைப் படலமாகிய அமைப்பில் இருந்து பெறும் செல்களால் (கண்ணறைகளால்) உருவாகின்றது. உடலமைப்பு எளிமையான முதுகெலும்பி விலங்குகளில் இந்த முதுகுநாண் வாழ்நாள் முழுவதும் அவற்றின் உடல் அச்சாக நிலைத்து இருக்கும். உயர்நிலை முதுகெலும்பிகளில், இந்த முதுகுநாண் மறைந்து, முதுகெலும்பாக மாற்றப்படும். முதுகுநாண், நரம்புக் குழாய்க்கு (neural tube) கீழே (அடிப்புறம்) அமைந்திருக்கும்.
இந்த முதுகுநாண், முதுகெலும்பு போன்ற உடல் அச்சாகத் தோன்றிய முதல் வடிவம் எனக் கொள்ளலாம். முதுகெலும்பு இல்லாத முதுகுநாணி விலங்குகளில், உடலுக்கு உறுதி தரும் அமைப்பாக இது உள்ளது. முதுகெலும்புள்ள விலங்குகளிலும், கரு வளர்ச்சியுறும் முதல்நிலைகளில் இந்த முதுகுநாண் உள்ளது.