மீனாட்சிசுந்தரம் பிள்ளை
மீனாட்சிசுந்தரம் பிள்ளை | |
---|---|
பிறப்பு | திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு இந்தியா | ஏப்ரல் 6, 1815
இறப்பு | பெப்ரவரி 1, 1876 | (அகவை 60)
தலைப்புகள்/விருதுகள் | தமிழ்ப் புலவர் |
தத்துவம் | சைவ சமயம் |
மீனாட்சிசுந்தரம் பிள்ளை (ஏப்ரல் 6, 1815 - பிப்ரவரி 1, 1876; திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு) சிறந்த தமிழறிஞர். உ. வே. சாமிநாதையரின் ஆசிரியர். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு ‘மகாவித்வான்’ என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார். திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராகத் திகழ்ந்தார். சீர்காழியில் முன்சீபாகப் பணியாற்றிய தமிழில் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். அவர் மீது வைத்திருந்த பெருமதிப்பின் காரணமாக, அவரைப் பாராட்டிக் ‘குளத்துக்கோவை’ என்னும் நூலை இயற்றினார்.
வாழ்க்கையும் கல்வியும்
[தொகு]இவர் திருச்சியில் உள்ள எண்ணெயூரில் தற்போதைய (தென்னூரில்) 1815-இல் பங்குனி மாதம் துவாதசியன்று மகர லக்கினத்தில் வியாழக்கிழமையில் பிறந்தார். இவரின் பெற்றோர் சிதம்பரம் பிள்ளை -அன்னத்தாச்சி ஆகியோர் ஆவர். தமிழ்ப் புலவரான தனது தந்தையிடமே தமிழ் கற்றார். சென்னை சென்று காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார், அம்பலவாண தேசிகர் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களிடம் கல்வி பயின்று புலமை பெற்றார். அற நூல்கள், காப்பியங்கள், சித்தாந்த சாத்திரங்கள், பேருரைகள், சிற்றிலக்கியங்கள் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். இவர் அபார நினைவாற்றல் கொண்டவராகத் திகழ்ந்தார். பாடல்களைப் படித்த வேகத்தில் மனத்தில் பதிய வைத்துக்கொண்டுவிடுவார். சிறு வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றிருந்தார்.
இலக்கியப் பணிகள்
[தொகு]சிற்றிலக்கியக் காலம் என்று அழைக்கப்படும் காலத்தில் வாழ்ந்த இவர், திருத்தலங்களின் வரலாற்றை விவரித்து ஏராளமான தல புராணங்கள் பாடினார். 19-ம் நூற்றாண்டில் தமிழில் அதிக நூல்களை இயற்றியவர் இவர்தான். புராணங்கள், காப்பியங்கள், பிள்ளைத் தமிழ் நூல்கள், அந்தாதி, கலம்பகங்கள், கோவைகள், எண்ணற்ற தனிப் புராணங்களை இயற்றியுள்ளார். பிள்ளைத்தமிழ் நூல்களை அதிகமாகப் பாடியதால் ‘பிள்ளைத் தமிழ் மீனாட்சி சுந்தரம் பிள்ளை’ என்று புகழப்பட்டார்.
பெரியபுராணச் சொற்பொழிவு செய்வதில் வல்லவர். இவரது படைப்புகள் அனைத்துமே செய்யுள் வடிவில் அமைந்துள்ளன. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இவர் இயற்றியதாக அறிய முடிகின்றது. [1]இதுவரை அச்சில் வெளிவந்த இவரது நூல்களின் எண்ணிக்கை 75 ஆகும்.
கல்விப் பணி
[தொகு]மயிலாடுதுறையில் பலகாலம் தங்கியிருந்த இவரது புலமையை அறிந்து நாடிவந்த பல மாணவர்களுக்குப் பொருள் எதிர்பாராமல் தமிழ் கற்பித்தார். பணம் பெற்றுக்கொண்டு பாடம் சொல்லிக் கொடுக்கும் பழக்கம் இவரிடம் இல்லை. தன்னிடம் கல்வி பயில வரும் ஏழை மாணவர்களைச் சொந்தப் பிள்ளைகளைப் போலக் கருதி உணவும் இடமும் அளித்துக் குருகுல முறையில் பாரபட்சமின்றிக் கல்வி புகட்டினார். கவிதைகள் பாடிச் சன்மானமாகப் பெற்ற செல்வத்தைக் கொண்டே இவர் தனக்கும் தன் மாணாக்கர்க்கும் செலவழித்தார். இவரிடம் பயின்ற மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் உ.வே.சாமிநாத ஐயர், சோடசாவதானம் தி.க. சுப்பராய செட்டியார், குலாம் காதர், நாவலர், சவுரிராயலு நாயக்கர், வல்லூர் தேவராசப்பிள்ளை ஆகியோர் ஆவர்.
'தாயைவிட என் மீது அதிக அன்பு கொண்டிருந்தவர் என் ஆசான்’ என்று உ.வே.சா. இவரைக் குறிப்பிட்டுள்ளார். இவரது படைப்புகள் 42-ஐ ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு என்னும் பெயரால் இரு தொகுதிகளாக உ.வே.சா. வெளியிட்டுள்ளார். திரிசிபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் என்ற பெயரில் இவரது வாழ்க்கை வரலாற்றை உ.வே.சா இரு பாகங்களாக விரிவாக எழுதி வெளியிட்டார். இந்நூலே இவரைப்பற்றி அறிந்து கொள்ள உறுதுணையாக உள்ளது.
மறைவு
[தொகு]தமிழ் மொழிக்கு ஒப்பற்ற தொண்டாற்றிய தமிழ் அறிஞர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை 1876-இல் தமது 61-ஆவது வயதில் மறைந்தார்.
எழுதிய நூல்கள்
[தொகு]இவர் 65 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கன.
- திருவாரூர்த் தியாகராசலீலை
- திருவானைக்காத் திருவந்தாதி
- திரிசிராமலை யமகவந்தாதி
- தில்லையமக அந்தாதி
- துறைசையமக அந்தாதி
- திருவேரகத்து யமக அந்தாதி
- திருக்குடந்தை திருபந்தாதி
- சீர்காழிக்கோவை
- குளத்தூக்கோவை
- வியாசக்கோவை
- அகிலாண்டநாயகி மாலை
- சிதம்பரேசர் மாலை
- சேக்கிழார் பிள்ளைத் தமிழ்
- திருநாகைக்காரோண புராணம்
- பூவாளூர்ப்பதிற்றுப்பத்தந்தாதி
- காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்
- பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்
- திருவிடைக்கழிமுருகர் பிள்ளைத்தமிழ்
- ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்
- வாட்போக்கிக் கலம்பகம்
- திருவாவடுதுறை ஆதீனத்துக் குருபரம்பரையகவல்
- ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம்
- சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடு தூது
- குசேலோபாக்கியானம்[2]
- கோவிலூர் புராணம்
ஆதாரம்
[தொகு]- தமிழ்ப்பிரியன். 2005. இரு நூற்றாண்டுகளும் 50 தமிழ் அறிஞர்களும். சென்னை: நர்மதா பதிப்பகம்.
- ↑ தினமணி, சாலப்பெரிய ஆசிரியர் பிரான், கட்டுரை, ம.வே.பசுபதி. 6.4.2015
- ↑ பாலூர் கண்ணப்ப முதலியார் எழுதிய, தமிழ் இலக்கிய அகராதி, பக்கம் 476, பதிப்பு: 1957, சென்ட்ரல் பதிப்பகம், சென்னை.