உள்ளடக்கத்துக்குச் செல்

மிரபல் சகோதரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிரபல் சகோதரிகள்

மிரபல் சகோதரிகள் (Mirabal sisters) என்பவர்கள் டொமினிக் நாட்டைசைச் சேர்ந்த நான்கு பேர்களாவர். அவர்களின் பெயர் பேட்ரியா மெர்சிடிஸ் மிரபல் (Patria Mercedes Mirabal), பெல்ஜிகா அடேலா "டிடே" மிரபல் ரேய்ஸ் (Bélgica Adela "Dedé" Mirabal-Reyes), மரியா அர்ஜென்டினா மினர்வா மிரபல் (María Argentina Minerva Mirabal), அன்டனியோ மரியா தெரசா மிரபல் ( Antonia María Teresa Mirabal) ஆகும். இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த இவர்கள் நால்வரும் ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர்கள். இவர்களில் மூன்று சகோதரிகள் (பெல்ஜிகா அடேலா "டிடே" மிரபல்-ரேய்ஸ் தவிர்த்து) அந்த நாட்டின் சர்வாதிகாரியான டுரூஜில்லோவிற்கு எதிரான இயக்கம் நடத்தியதற்காக சிறையிலடைக்கப்பட்டுப் பின்னர் நவம்பர் 25, 1960 இல் படுகொலை செய்யப்பட்டனர்.[1]

1999இல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை இவர்களை அங்கீகரித்து, நவம்பர் 25 - ஆம் நாளை "உலக பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு நாள்" என்று அறிவித்து இவர்களை சிறப்பித்தது.

சகோதரிகள்

[தொகு]
பெயர் பொதுப்பெயர் பிறந்த நாள் இறந்த நாள்
பேட்ரியா மெர்சிடிஸ் மிரபல் பேட்ரியா 27 ஃபிப்ரவரி 1924 25 நவம்பர்1960
பெல்ஜிகா அடேலா "டிடே" மிரபல் ரேய்ஸ் "டிடே" 29 ஃபிப்ரவரி 1925 1 நவம்பர் 2014
மரியா அர்ஜென்டினா மினர்வா மிரபல் மினர்வா 12 மார்ச் 1926 25 நவம்பர்1960
அன்டனியோ மரியா தெரசா மிராபல் மரியா தெரசா 15 அக்டோபர் 1935 25 நவம்பர் 1960

வரலாறு

[தொகு]

இளமைக் கால வாழ்க்கை

[தொகு]
கடைசி பத்து மாதங்கள் மிரபல் சகோதரிகள் வசித்த இல்லம். சால்சிடோ, டொமினிகன் குடியரசு.

மிரபலின் குடும்பம் சிபாலோ பகுதியைச் சேர்ந்த ஒரு நடுத்தர விவசாயக் குடும்பமாகும். என்ரிக் மிராபல் ஃபெர்னான்டஸ் குடும்பத்தலைவர், மெர்சிடைஸ் ரெய்ஸ் கமிலோ தலைவியாவார். பெல்ஜிகா அடேலா "டிடே" மிராபல் ரேய்ஸ் மட்டும் மற்ற சகோதரிகளைப் போல கல்வி கற்காமல், வீட்டு வேலைகள் செய்தும், பண்ணை வேலை, விவசாய வேலைகள் செய்தும் தமது குடும்பத்தை நடத்த உதவி வந்தார். [2]

சர்வாதிகாரி ட்ரூஜில்லோ

[தொகு]

சர்வாதிகாரிகளை வரலாற்றிற்கு அள்ளி வழங்கிய இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிக் குடியரசில் 26 ஆண்டுகள் ஆண்டவர்தான் ரஃபேல் லியோனிடாஸ் ட்ரூஜில்லோ மோலினா (Rafael Leonidas Trujillo Molina). இவர் 1930 - 1938 வரையிலும், பின்பு 1942 - 1961 வரையிலும் நாட்டை ஆண்டார். நாட்டின் தலைநகருக்குத் தனது பெயரைச் சூட்டினார். தனக்குத்தானே பல பட்டங்களையும், விருதுகளையும் ( உதாரணமாக "நாட்டின் மிகச் சிறந்த வள்ளல்" (Great benefactor of the nation) , "புதிய டொமினிக்கின் தந்தை" (Father of the new Dominion)) கொடுத்துக் கொண்டார். மிராபெல் சகோதரிகளைப் பற்றிய ஒரு புதினம் "வண்ணத்துப்பூச்சிகளின் காலத்தில்" (In the time of the Butterflies). அதில் ட்ரூஜில்லோ தனது படத்தையும் யேசுவின் படத்தையும் அடுத்தடுத்து வைத்துக் கொள்வதாகச் சித்தரித்திருப்பார் அதன் ஆசிரியரான ஜூலியா அல்வரேஸ்.

அரசியல் இயக்கம்

[தொகு]

மிரபலின் சகோதரிகளின் தந்தை வெற்றிகரமான தொழிலதிபராக இருந்தார். அவர்கள் நால்வருக்குமே திருமணமாகியிருந்தது. ட்ருஜில்லோ அதிபரானதும் நாட்டின் வளங்களைக் கையகப்படுத்தினார். இதனால் மிரபல் குடும்பத்தின் பெரும்பாலான உடைமகள் பறிக்கப்பட்டன. நான்கு சகோதரிகளில் ஒருவரான மினர்வா மட்டும் ட்ரூஜில்லோவின் அரசினைக் கவிழ்ப்பதில் மிகவும் முனைப்புடன் இருந்தார். அவர் சட்டம் படித்து வழக்கறிஞரானவர். இருப்பினும் அவர் வழக்கறிஞராகப் பணியாற்ற உரிமம் வழங்கப்படவில்லை.

ட்ருஜில்லோவிற்கு எதிராக மிராபல் சகோதரிகள், அவர்களது கணவர்கள் இணைந்து தலைமறைவு இயக்கத்தை தோற்றுவித்தனர். அதன் பெயர் ஜூன்14 இயக்கம். இந்த இயக்கம் உருவாக முன்னோடியாக இருந்தது டொமினிக் விடுதலை இயக்கமாகும் (Dominican Liberation Movement). இது ஃபிடல் காஸ்ட்ரோவின் உதவியுடன் ட்ரூஜில்லோவின் அரசை தூக்கியெறியும் புரட்சியில் ஈடுபட்டது. அது தோல்வியில் முடிந்தாலும் பலரை ட்ரூஜில்லோவிற்கு எதிரான இயக்கத்தில் இணைவதற்கு வழிசெய்தது. மிராபல் சகோதரிகள் இயக்கத்திற்குள் "வண்ணத்துப்பூச்சிகள்" என்ற அடைமொழியுடன் அறியப்பட்டனர். அதுவே பிற்காலத்திலும் அடையாளமாயிற்று. இருப்பினும் மிக விரைவாகவே இயக்கத்தவர்கள் கைது செய்யப்பட்டனர். மிராபல் சகோதரிகளும், அவர்களது கணவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது கைதை கத்தோலிக்கத் திருச்சபையும் கண்டித்தது. சிறையில் அடைக்கப்பட்ட மிராபல் சகோதரிகள் பலமுறை சித்ரவதைகளுக்கும், வன்கலவிக்கும் ஆளாக்கப்பட்டனர்.

படுகொலை

[தொகு]

இவ்வாறு பலமுறை சிறையிலடைக்கப்பட்டும் அவர்கள் ட்ரூஜிலோவிற்கு எதிராக தீவிரமாக இருந்தனர். அவர்கள் உடைமைகளனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டாலும் அவர்களது செல்வாக்கு அதிகமாக இருந்தது. 1960 நவம்பர் 25 இல் கனமழையுடன் கூடிய இரவில் ஒரு ஊர்தியில் சிறையிலிருந்த தமது கணவன்மாரைப் பார்த்துவிட்டுத் திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத நபர்களால் மறிக்கப்பட்டு, அருகிலிருந்த கரும்புத்தோட்டத்திற்குள் தனித்தனியாகக் கொண்டு செல்லப்பட்டு அடித்தே கொல்லப்பட்டனர், அவர்களது ஊர்தி ஓட்டுநரும் கொல்லப்பட்டார். அவர்களது உடல்கள் அவர்கள் வந்த ஊர்தியில் (Jeep) வைத்து மலைமுகட்டிலிருந்து தள்ளிவிடப்பட்டு, மோசமான மழையினால் ஊர்தி விபத்து ஏற்பட்டது போன்று சித்தரிக்கப்பட்டது. இது சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் ட்ரூஜில்லோவால் செய்யப்பட்டது என்றே நம்பப்படுகிறது.

இரண்டாவது சகோதரியான பெல்ஜிகா அடேலா "டிடே" மிராபல்-ரேய்ஸ் மட்டும் இந்த இயக்கத்தில் ஈடுபடாததால், நீண்ட காலம் உயிருடன் இருந்தார். கொல்லப்பட்ட தனது சகோதரிகளின் ஆறு குழந்தைகளின் தாயாக இருந்து வளர்த்தார். பல்வேறு இடங்களுக்குச் சென்று தனது சகோதரிகளின் வரலாறு குறித்துப் பேசி வந்தார். 1992 -ஆம் ஆண்டு மிரபல் சகோதரிகள் அறக்கட்டளையைத் தொடங்கினார். தற்போது பிரபலமான சுற்றுலாத் தளமாக இருக்கும் மிரபல் சகோதரிகள் அருங்காட்சியகமும் 1994 ஆம் ஆண்டில் சால்சிடோ நகரில் இவரால் உருவாக்கப்பட்டது. தனது சகோதரிகளின் கதையை சொல்வதற்கே தான் நீண்ட காலம் உயிருடன் இருந்ததாகக் கூறுவார். தனது 88 ஆம் வயதில் 2014 ஃபிப்ரவரி 1 ஆம் நாள் இவர் இறந்தார்.

மிரபல் சகோதரிகள் தமது கலகத்திற்காக டொமினிக் குடியரசின் தேசிய நாயகிகளாகப் போற்றப்படுகின்றனர். உலக அளவில் பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பின் சின்னமாகவும் "மறக்கமுடியாத வண்ணத்துப்பூச்சிகள் (Unforgettable Butterflies)" என்று முன்னிறுத்தப்படுகின்றனர்

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிரபல்_சகோதரிகள்&oldid=4056587" இலிருந்து மீள்விக்கப்பட்டது