உள்ளடக்கத்துக்குச் செல்

மின்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிஃபு மாவட்டத்தின் சிரக்காவா என்னும் ஊரில் உள்ள ஒரு காசோ-சுக்கூரி-பாணி மின்கா வீடு

மின்கா என்பது, சப்பானிய மொழியில், ஏதாவதொரு மரபுவழிச் சப்பானியக் கட்டிடப் பாணியில் கட்டப்பட்ட நாட்டார் வீடுகளைக் குறிக்கும். மின்கா, சப்பானியச் சமூகத்தின் நான்கு பிரிவுகளுள் அடங்கும் விவசாயிகள், கைவினைஞர், வணிகர் ஆகிய சமுராய் அல்லாத சாதிப் பிரிவினருக்கான வீடுகளையே முன்னர் குறித்தது. ஆனால், தற்போது இச்சொல் இந்தப் பொருளில் பயன்படுவதில்லை. தற்காலத்தில், மரபுவழிச் சப்பானியப் பாணியில் அமைந்தனவும், பொருத்தமான காலப்பகுதியைச் சேர்ந்தனவுமான வீடுகள் எல்லாமே மின்கா என்னும் சொல்லால் குறிக்கப்படுகின்றன.

மின்காக்களை, அவற்றின் அடிப்படைக் கட்டுமான அமைப்பு, கூரையமைப்பு, கூரை வடிவம், என்பவற்றைக் கொண்டு அடையாளப்படுத்துகின்றனர். மிக நீண்ட காலமாக வளர்ச்சியடைந்து வந்த மின்காக்களின் தனித்துவமான பாணிகள் ஏடோ காலப் பகுதியில் உருவாகின.

மின்கா வகைகள்[தொகு]

காசோ-பாணிக் கூரை
காசோ-சுக்குரி திருத்தப்படுகிறது

மின்கா என்னும் சொல்லுக்கு நேரடிப் பொருள் "மக்களுடைய வீடு" என்பதாகும். இது, விவசாயிகள், ஊர்த் தலைவர், வணிகர், கீழ்த்தட்டு சமுராய்கள் போன்ற பலதரப்பட்ட மக்களின் வீடுகளை உள்ளடக்குகிறது.[1] மின்காக்கள் பல்வேறு பாணிகளிலும் அளவுகளிலும் காணப்படுகின்றன. இவ்வேறுபாடுகள் பெரும்பாலும், வேறுபட்ட புவியியல் மற்றும் தட்பவெப்பநிலைகளாலும், அவற்றில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை வேறுபாடுகளினாலும், ஏற்படுகின்றன. எனினும் இவையனைத்தும் பண்ணை வீடுகள் (நோக்கா), நகரவீடுகள் (மாச்சியா), மீனவர் வீடுகள் (கியோக்கா), மலைவீடுகள் (சங்கா) என்னும் நான்கு வகைகளுக்குள் அடங்குகின்றன.[2]

சுக்கியா போன்ற பிற சப்பானியக் கட்டிடக்கலை வடிவங்களைப் போலன்றி மின்கா வகைக்குத் தள அமைப்பைவிடக் கட்டுமான அமைப்பே முக்கியமானது. மின்காக்களில் முதன்மைத் தூண்கள் அடிப்படைச் சட்டகமாக அமைவதுடன், கட்டிடத்தின் சுமையையும் தாங்குகின்றன. துணைத் தூண்கள் தளத்தின் செயற்பாட்டு ஒழுங்கமைவுக்கு ஏற்ப ஒழுங்குபடுத்தப்படுகின்றன.

மின்கா பல வகைகளாக இருந்தாலும், அவற்றின் அமைப்பையொட்டி அவற்றை எட்டு அடிப்படை வடிவங்களாகப் பிரிக்கலாம். முதலாவது தலைகீழ் "ப" வகை. இது இரண்டு தூண்களையும் அவற்றின் மேல் தாங்கப்பட்ட வளை ஒன்றையும் உள்ளடக்கியது. இந்த அலகுகளை பக்க வளைகளால் ஒன்றிணைக்க முடியும். தூண்கள் மீதுள்ள வளை அவற்றின் மீது வெறுமனே தாங்கப்படலாம் அல்லது பொருத்தமுளை காடி இணைப்பினால் பொருத்தப்படலாம். சிக்கோக்கு தீவில் காணப்படும் மின்காக்களில் இரண்டாவதாகச் சொல்லப்பட்ட முறை பயன்பாட்டில் உள்ளது. ஏணி வகை அமைப்பில் பல தூண்-வளை அலகுகள் பெரிய கிடை வளைகளால் இணைக்கப்பட்டிருக்கும். மேற்படி வளைகள் அத்திவார மட்டம்வரை காணப்படும். இவ்வகை, ஏடோ காலப்பகுதியின் நகர வீடுகளில் உருவானது. இதில் தூண்கள் சமமற்ற இடைவெளிகளில் அமையலாம் என்பதால், தள அமைப்பில் கூடுதல் நெகிழ்தன்மை கிடைக்கின்றது. குடை வகையில் தூண் ஒன்றிலிருந்து விரிந்து செல்லும் நான்கு வளைகள் பொருத்தப்பட்டிருக்கும். இத்தூண்கள் சதுரத்தின் மூலைகளில் அமையாமல், அதன் பக்கங்களின் நடுவில் நிறுத்தப்படுகின்றன. இவ்வகை மின்காக்கள் சிகா மாவட்டத்தில் காணப்படுகின்றன. சிலுவை வகை ஒரு சதுரத்தின் பக்கங்களின் நடுவில் அமையும் நான்கு தூண்களையும் அவற்றில் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும்படி தாங்கப்படும் இரண்டு வளைகளையும் கொண்ட அமைப்பு. இது வேறு தூண்கள் தேவைப்படாத சிறிய மின்காக்களில் அல்லது பெரிய மின்காக்களின் மண் தரைப் பகுதிகளில் பயன்படுகின்றது. இவ்வகை சிகா, புகுயி ஆகிய மாவட்டங்களில் பயன்பாட்டில் உள்ளன. இணைச் சிலுவை வகை இரட்டித்த சிலுவை அமைப்பு ஆகும். இதில் நான்கு வளைகளும் எட்டுத் தூண்களும் இருக்கும். சிசுவோக்கா மாவட்டத்தில் காணப்படும் இவ்வகை 5 மீட்டர் x 10 மீட்டர் பரப்பளவை மூடக்கூடியது. பெட்டி வகை அமைப்பில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட தூண்-வளை அலகுகள் பெட்டி வடிவில் ஒன்றாக இணைக்கப்படுகின்றன. ஏடோ காலப்பகுதியில் உருவான இது தொயாவா, இசிக்காமா ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன. இணைந்த பெட்டி வகை அமைப்பு, கியோட்டோ, ஒசாக்கா ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன. இறுதியாக உயரும் வளை அமைப்பு என்பதில் ஒரு முனை தூணில் தாங்கப்பட மறு முனை முகட்டு வளை ஒன்றில் தாங்கப்படுகிறது. இது இரண்டாவது மாடியைச் சிறப்பாகப் பயன்படுத்த உதவுகின்றது. புல் வேய்ந்த கூரைகளைக் கொண்ட பண்ணை வீடுகளில் காணப்படும் உயரும் வளை அமைப்பை நான்கு துணைப்பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவற்றுள் யோசிரோ-குமி, வகோயா என்னும் வகைகள் இரண்டும் மிக அரிதாகவே காணப்படுகின்றன. ஆனாலும் இரண்டாம் வகை அமைப்பு மாச்சியாக்களில் பயன்படுவதைக் காணமுடியும். சாசு, ஒடாச்சி வகைகள் பொதுவாகக் காணப்படும் வகைகள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Nishi & Hozumi (1996), p82
  2. "minka". JAANUS. பார்க்கப்பட்ட நாள் 2013-11-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்கா&oldid=1976906" இலிருந்து மீள்விக்கப்பட்டது