உள்ளடக்கத்துக்குச் செல்

மலையாள இலக்கியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலையாள இலக்கியங்கள் திராவிட மொழிகளுள் ஒன்றான மலையாளம் கி.பி. 9ம் நூற்றாண்டு அல்லது 10ம் நூற்றாண்டு வாக்கில்தான் தனியொரு மொழியாக வளர்ந்ததாக கருதப்படுகிறது. தமிழ்மொழியின் கிளை மொழியாக இருந்ததாக மொழி அறிஞர்களால் கூறப்படும் மலையாளமானது காலப்போக்கியல் புதிய உருவங்கள் மற்றும் மாற்றங்களையும் பெற்று தனக்கென மொழியுலகில் பெருமையுடையதாக விளங்குகிறது.

கல்வெட்டுச் சான்றுகள்[தொகு]

ஸ்தாணு ரவி கோட்டயச் செப்பேடுகள் முதல் முதலில் மலையாளச் சொற்களைக் கொண்டுள்ளதாக காணப்படுகின்றன. இதில் காணப்படும் மொழிநிலை மேற்கக் கரையார பேச்சு மொழியை அடிப்படையாகவும் இச் செப்பேட்டைத் தொடர்ந்து ஏராளமான கல்வெட்டுகளும் செப்பேடுகளும் தோன்றியது எனலாம். மலையாள இலக்கிய வரலாறு மூன்று காலங்களாகப் பிரிக்கப்படுகிறது. 1) முற்காலம் - கி.பி. 9ம் நூற்றாண்டு முதல் கி.பி. 13 வரை 2) இடைக்காலம் - கி.பி. 13ம் நூற்றாண்டு முதல் கி.பி.16 வரை 3) தற்காலம் - கி.பி. 16க்குப் பிறகு

ஆயினும் மலையாள மொழி ஆய்வாளர் கே.எம். ஜார்ஜ் கி.பி. 15ம் நூற்றாண்டு வரை பழங்காலம் எனவும் அதற்குப் பின் உள்ள பகுதியைத் தற்காலம் எனவும் குறிப்பிடுகிறார்.

மலையாள இலக்கியங்கள்[தொகு]

திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆட்சி செய்த வீரரவிவர்மாவினால் எழுதப்பட்ட மலையாளத்தின் முதல் இலக்கியமான இராம சரிதம் கி.பி.12ம் நூற்றாண்டில் வெளிவந்தது. இதில் தமிழ்மொழியின் செல்வாக்கு மிகுந்துள்ளது. தமிழ்மொயோடு மட்டுமல்லாது சமஸ்கிருத மொழியின் ஆளுமையையும் மலையாள இலக்கியங்களில் காண முடியும். கி.பி.14ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட முதல் இலக்கண நூல் லீலாதிலகம் என்பதாகும். இதில் சமஸ்கிருத வினைச்சொற்களைப் போல் மலையாள வினைச்சொற்களும் மிகுதி பெற்றுள்ளன.

கி.பி.1315ல் எழுதப்பட்ட ‘உண்ணுநிலி சந்தேசம்’ இந்நூல் நாடு, நகரம், இயற்கைக்காட்சிகளை வர்ணித்துக் கூறும் தூது நூல் ஆகும். மலையாளதில் வரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்கள் ‘சம்பு இலக்கியங்கள்’ என்றழைக்கப்படுகின்றன. இவற்றுள் குறிப்பிடத்தக்கவை பாரதம், செல்லூர் மகாத்மியம், பாஷா நிஷாடதம் ஆகியவையாகும். கண்ணேசன் பாட்டுக்கள் 14, 15ம் நூற்றாண்டில் தோன்றிய குறிப்பிடத்தக்க இலக்கியங்கள் மேலும் மலையாள மொழியில் திருப்பு முனையாகக் கருதப்படும் முக்கியமான நூல் கிருஷ்ண காதை ஆகும். செருசேரி நம்பூதிரியால் எழுதப்பட்ட நூல் மலையாள மொழியின் வளத்தை எளிமையாகவும் இனிமையாகவும் எடுத்துக்காட்டுகிறது. கிருஷ்ணகாதை எவ்வித மொழிக் கலப்பும் இன்றி மலையாளத் தனித்தன்மையுடன் விளங்கியதாகும்.

கி.பி. 15 அல்லது 17ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கூறப்படும் எழுத்தச்சன் மலையாள மொழியின் தந்தை என்று போற்றப்படுகிறார். இவர் ராமாயணம் மகாபாரதத்தை தழுவிய நூல்களையும் கிளிப்பாட்டுக்கள் என்ற பாடல்களையும் அற்புதமாக எழுதியவர்.

கி.பி.18ம் நூற்றாண்டில்தான் துள்ளல் மற்றும் கதகளி இலக்கியங்கள் தோன்றின. இவ்வகை இலக்கியங்களில் கீதாகோவிந்தா முதல் நூலாகக் கருதப்படுகிறது. ஜையதேவர் என்பவரது காலத்தில் சாக்கையர் என்று அழைக்கப்படுபவர்களால் பாடப்பட்டதாகும். மேலும் கதகளிக்கு தம்புரான், உண்ணாவாரியார் ஆகியோர் பெரும்பங்காற்றினர். ஆயினும் இலக்கிய அந்தஸ்தை பெற்றுத்தந்த பெருமை கோட்டயத்துத் தம்பிரானைச் சேரும்.

கி.பி.18ம் நூற்றாண்டில் கதகளி சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் விளங்கிய மக்களிடையே பிரபலமாக இருந்த நிலை மாறி துள்ளல் இலக்கியங்கள் சாதாரண மக்களையும் கவர்ந்தது ‘குஞ்சன் நம்பியார்’ என்ற கவிஞர் துள்ளல் இலக்கிய வகையைப் பிரபலமாக்கினார்.

மேற்கோள் நூல்[தொகு]

1) திராவிட மொழிகள் - டாக்டர் ச அகத்தியலிங்கம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலையாள_இலக்கியங்கள்&oldid=3602482" இலிருந்து மீள்விக்கப்பட்டது