மடகாசுக்கரின் வரலாறு
மிகப் பழைய காலத்திலேயே ஆப்பிரிக்காவும் இந்தியாவும் இணைந்த கண்டத்தில் இருந்து தனியாக ஒரு நிலத்திணிவாக இருந்ததாலும், பிற்காலத்திலேயே கிமு 200 முதல் கிபி 500 வரையான காலப்பகுதியில் சிறு படகுகளில் சுண்டாத் தீவுகளில் இருந்து குடியேறியதாலும் மடகாசுக்கரின் வரலாறு தனித்துவமானதாக உள்ளது. இவ்விரு காரணிகளும் இத்தீவில் இப்பகுதிக்கே உரிய தாவர, விலங்கு இனங்கள் உருவாகி நிலைத்திருக்க உதவின. இவைகளுட் சில தற்போது மக்கள்தொகை அதிகரிப்பினால் அழிந்துவிட்டன அல்லது அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. கடந்த 2000 ஆண்டுகளில் ஆசுத்திரோனீசிய, பான்டு, அரபி, தென்னாசிய, சீன, ஐரோப்பிய மூலங்களைக் கொண்டோர் பல்வேறு அலைகளாக வந்து இத்தீவில் குடியேறியுள்ளனர். இன்றைய மடகாசுக்கரில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ஆசுத்திரோனீசிய, பான்டு, அரபி, வட இந்திய, சோமாலிக் குடியேறிகளின் கலப்பு ஆவர்.[1] பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்த கலப்பு மணங்களினால் மலகாசி மக்கள் உருவாயினர். இவர்கள், பான்டு, மலாய், அரபி, பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளின் செல்வாக்குகளுடன் கூடிய ஒரு ஆசுத்திரேனிய மொழியைப் பேசுகின்றனர். சராசரி மலகாசி ஒருவரின் மரபியல் அமைப்பு, சிறப்பாகக் கரையோரப் பகுதிகளில், ஆசுத்திரோனீசிய, பான்டு செல்வாக்குகளின் சம அளவான கலப்பு ஆகும்.[2] பிற மக்கள் பெரும்பாலும் வரையறுக்கப்பட்ட அளவுக்கே ஏற்கெனவே இருப்போருடன் கலந்துள்ளனர். இவர்கள் பெரும்பான்மை மலகாசி மக்களுக்குப் புறம்பாகத் தனியான சமூகமாக இருக்கவே விரும்புகின்றனர்.
ஐரோப்பிய மத்திய காலத்தை அண்டி, பன்னிரண்டுக்கும் மேற்பட்ட முக்கியமான இன அடையாளங்கள் இத்தீவில் உருவாகின. இவை உள்ளூர் தலைவர்களினால் ஆளப்பட்டன. சக்கலவா, மெரினா, பெட்சிமிசராக்கா போன்ற சில சமூகங்களில், தலைவர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திச் சமூகங்களை இணைத்து உண்மையான இராச்சியங்களைத் தமது தலைமையில் உருவாக்கினர். இவ்விராச்சியங்கள், சட்டப்படியான அல்லது கடற் கொள்ளையர் என்ற வேற்பாடுகள் இன்றி, ஐரோப்பிய. அரேபிய, மற்றும் பிற கலடோடி வணிகர்களுடன் பரிமாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு தம்முடைய செல்வத்தையும், அதிகாரத்தையும் அதிகரித்துக்கொண்டன. 16 க்கும் 18 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் மடகாசுக்கரின் கரையோரப் பகுதிகளில் கடற்கொள்ளைகள் அதிகமாக இருந்தன. பிரபலமான கடற்கொள்ளைக் குடியேற்றமான லிபேர்ட்டாலியா, முன்னர் மலகாசி மக்கள் வாழ்ந்த செயின்ட் மேரி தீவில் நிறுவப்பட்டிருந்தது. சக்கலாவா, மெரீனா இராச்சியங்கள் ஐரோப்பிய வணிகத்தைப் பயன்படுத்திக்கொண்டு, ஐரோப்பியச் சுடுகலன்களுக்கும் பிற பொருட்களுக்கும் மலகாசி அடிமைகளைப் பரிமாற்றம் செய்து, தமது அதிகாரத்தை வலுப்படுத்தின. இக்காலம் முழுதும், இந்துப் பெருங்கடற் பகுதியில் செயற்பட்ட ஐரோப்பிய, அரேபியக் கடலோடிகள் கரையோரச் சமூகங்களுடன் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். இத்தீவில் தமது குடியேற்றங்களை நிறுவுவதற்கு ஐரோப்பியர் எடுத்த பல முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. 19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் பிரித்தானிய, பிரெஞ்சுக் குடியேற்றவாதப் பேரரசுகள் இத்தீவின் மீது செல்வாக்குச் செலுத்துவதற்காகப் போரிட்டன.
19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், ஆன்ட்ரியனிம்பொயின்மெரினா, மத்திய உயர் நிலப்பகுதியில் அமைந்திருந்ததும், அன்டனானரிவோவைத் தலைநகரமாகக் கொண்டதுமான, அதிக மக்கள்தொகையைக் கொண்டிருந்த இமெரீனா இராச்சியத்தை ஒன்றிணைத்தார். இவரது மகன் முதலாம் ரடாமா தீவிலிருந்த பிற சமூகங்களின் மீதும் தனது அதிகாரத்தை விரிவாக்கினார். வெளிநாட்டு வல்லரசு ஒன்றினால் பெரிய மெரீனாவின் அரசர் என ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் மலகாசி அரசர் இவரே. 19 ஆம் நூற்றாண்டில், மெரீனா அரசர்கள் பிரித்தானியருடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணியதன் மூலம் நவீனமயப்படுத்தலில் ஈடுபட்டனர். இதன் மூலம், ஐரோப்பியப் பாணிப் பள்ளிகளும், அரச நிறுவனங்களும், உட்கட்டமைப்பு வசதிகளும் உருவாகின. அரசி இரண்டாம் ரணவலோனா, செல்வாக்குள்ள அரசியற் தலைவரும் முதலமைச்சருமான ரைனிலையாரிவோனி ஆகியோரின் கீழ் இலண்டன் மதப் பிரசாரச் சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட கிறித்தவம் அரச மதம் ஆக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ames, Glenn Joseph; Love, Ronald S. (2003). Distant Lands and Diverse Cultures: The French Experience in Asia, 1600-1700. Greenwood Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-30864-2.
{{cite book}}
: Invalid|ref=harv
(help), p. 101. - ↑ Sanger Institute (May 4, 2005). "The cryptic past of Madagascar: Human inhabitants of Madagascar are genetically unique". Archived from the original on March 20, 2011. பார்க்கப்பட்ட நாள் April 30, 2006.