பொத்தியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொத்தியார் சங்ககாலப் புலவர். இவரது ஐந்து பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அவை: புறநானூறு 217, 220, 221, 222, 223 ஆகியவை.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

மருட்கை உடைத்து[தொகு]

கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தானைக் கண்டு பாடியது.
இவன் துணிவு வியப்பைத் தருகிறது. அதனினும் வியப்பு, பாண்டிநாட்டிலிருக்கும் தன் நண்பன் வந்து தன்னுடன் வடக்கிருப்பான் என்று இவன் சொன்னபடி பிசிராந்தையார் வந்து இவனுடன் வடக்கிருப்பது. புறநானூறு 217

வெளில் பாழ்நிலை[தொகு]

  • தேர்வண் கிள்ளி = கோப்பெருஞ்சோழன்
வடக்கிருந்தானைப் பார்த்துவிட்டு மீண்டுவந்து உறையூரைப் பார்க்கும் புலவர் சொல்கிறார்.
பல ஆண்டுகள் தனக்குப் பெருஞ்சோறு அளித்துப் பேணிய களிறு மாண்டதால் வெற்றிடமாகக் கிடக்கும் வெளில் போல எனக்கு உறையூர் காணப்படுகிறது. யானையை இழந்த பாகன் போல நான் கலங்குகிறேன். - புறநானூறு 220

நடுகல் ஆயினன்[தொகு]

பாடுநர்க்கும், ஆடுநர்க்கும் அளித்தவன். அறவோராலும், திறவோராலும் புகழப்பட்டவன். மகளிர்க்கு நிழல். மைந்தர்க்கு மைந்து(வலிமை). இப்படிப்பட்டவன் நடுகல் ஆயினான். அரந்தையில் தள்ளாடும் உலகமே வருக! புலவர்களின் இசைமலர்களைச் சூடிக்கொண்டு நடுகல் ஆகிவிட்டதைக் காணுங்கள்! - புறநானூறு 221

புதல்வன் பிறந்தபின் வா[தொகு]

அன்பிலாள! நீ வடக்கிருக்கிருக்கிறாய். என்னை மட்டும் "உன் புதல்வன் பிறந்தபின் வா" என்கிறாய். நான் என்ன செய்வேன்! - இவ்வாறு சொல்லிப் புலவர் கதறுகிறார். - புறநானூறு 222

கல்லாகியும் இடம் கொடுத்தான்[தொகு]

கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தபோது அவனது நண்பர் பொத்தியாரும் வடக்கிருக்க அமர்ந்தார். கோப்பெருஞ்சோழன் ஒப்பவில்லை. "புதல்வன் பிறந்தபின் வா" என்று சொல்லிப் பொத்தியாரை அனுப்பிவிட்டார். இல்லம் திரும்பிய புலவர் பொத்தியார் தனக்குப் புதல்வன் பிறந்தபின் கோப்பெருஞ்சோழனின் நடுகல்லிடம் வந்தார். அங்குப் பொத்தியாருக்கென்று ஓரிடம் ஒதுக்கப்பட்டது கண்டு வியந்து 'கல்லாகியும் காப்பவன்' என்று பாராட்டிவிட்டு, அங்கு அமர்ந்து அவனைப் போலவே வடக்கிருந்து உயிர் நீத்தார். - புறநானூறு 223

பொத்தி ஆண்ட பெருஞ்சோழன்[தொகு]

பொத்தியார் சொன்னபடியெல்லாம் கோப்பெருஞ்சோழன் நடந்துகொண்டான். கோப்பெருஞ்சோழன் சொன்னபடியெல்லாம் பொத்தியார் நடந்துகொண்டார். இந்தக் கோப்பெருஞ்சோழனை இளஞ்சேரல் இரும்பொறை போரில் வென்றான். பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்தவர் பாடிச் சேர்த்த பதிற்றுப்பத்து பதிகம் 9
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொத்தியார்&oldid=3198778" இலிருந்து மீள்விக்கப்பட்டது