பேச்சு:பஞ்சலட்சணத் திருமுகவிலாசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

'தமிழில் முதல் நையாண்டி இலக்கியம்'[தொகு]

===== பேராசிரியர் முனைவர் ம.பெ. சீனிவாசன் சிவகங்கை =====

ஒருவர்க்கொருவர் கேலிபேசிச் சிரித்தலும் நகையாடுதலும் கேட்போர் வயிறு குலுங்குமாறு நையாண்டி செய்தலும் மனித வாழ்க்கையில் அன்றாடம் நடக்கக் கூடிய நிகழ்ச்சிகளே. எங்கும் அவை நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இறுக்கமான சூழலையும் நகைச்சுவை, கலகலப்பாக மாற்றி விடுகிறது. இரயில் பயணத்தில், உணவு விடுதியில், பலர் கூடியிருக்கும் கூட்டத்தில் - முன்பின் அறியாத யாரோ ஒருவர் தம்முடைய நகைச்சுவைப் பேச்சால் நம்மைக் கவர்ந்து விடுகிறார். நம்மோடு நெடுங்காலம் பழகியவர் போல நம்மனத்துக்கு நெருக்கமாகி விடுகிறார். அவரைப் போல அந்தக் கலை நமக்குக் கைவராது இருக்கலாம். ஆனால் வாய் விட்டுச் சிரிப்பதற்கு மனம் வராமல் போகாது. சிரிப்பைத் தொலைத்து விட்டு ‘உம்மென்று’ இருப்பவர்களைக்கூட, நகைச்சுவை உதடு பிரியாமல் மெல்லச் சிரிக்கவைத்து விடுகிறது. அதன் ஆற்றல் அப்படி. ‘எதற்கும் ஒரு போதும் சிரிப்பதில்லை’ என்று வரம் வாங்கி வந்தவர்களும் இருக்கிறார்கள். அத்தகையவர்களுக்கு ஒளி மிகுந்த பகற்பொழுதும் கூடக் காரிருள் பரவிய இருட்டுத்தான் என்கிறார் திருவள்ளுவர். ‘நகையுணர்வு இல்லாவிட்டால் நான் என்றைக்கோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன்’ என்றார்; காந்தியடிகள். இப்படி அன்றாட வாழ்விலும் தெருக்கூத்து, நாடகம், திரைப்படம் போன்ற பல்வேறு கலை வடிவங்களிலும் தவறாமல் இடம் பிடித்துக் கொண்டிருக்கும் நகைச்சுவைக்குத் தமிழ் இலக்கியத்தில் அதிக இடமில்லாமல் போனது பெருவியப்பே. பாட்டு வடிவிலான பழைய தமிழ்நூல்களில் - காளமேகப் புலவர், ஆண்டான் கவிராயர் போன்றோரின் ஒரு சில பாடல்கள் சந்தர்ப்;பத்திற்கேற்ப வேடிக்கையாகவும் நையாண்டியாகவும் பாடப்பெற்றுள்ளன. இவற்றைத் தவிரத் தனி நகைச்சுவை நூல்களாக – முழுமையும் நையாண்டி இலக்கியங்களாகத் தமிழில் காணப்படுவன இரண்டு நூல்கள் (1899) மட்டுமே. ஒன்று, பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய, ‘பஞ்ச லட்சணத் திருமுக விலாசம்’ என்னும் நூல். மற்றொன்று இருபதாம் நூற்றாண்டில் பிறந்த, ‘நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழிமான்மியம்’. பாடியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. இவை இரண்டனையும் ‘நகைச்சுவைக்கான தீப ஸ்தம்பங்கள்’ என்று குறிப்பிடுகிறார் ரகுநாதன்.

இவற்றுள், ‘தமிழில் தோன்றிய முதல் நையாண்டி இலக்கியம்’ என்னும் பெருமைக்குரியது வில்லியப்பரின் திருமுக விலாசமே.

தாதுவருஷப் பஞ்சம்

1876 இல் நிகழ்ந்த தாது வருடப் பஞ்சத்தைப் பாடுபொருளாகக் கொண்டு இயற்றப் பெற்ற நூல் இது. நூலாசிரியரான வில்லியப்ப பிள்ளை, சிவகங்கைவட்டம் திருப்பூவணத்தை அடுத்துள்ள பிரமனூரைச் சேர்ந்தவர். அவ்வூர் மிராசுக்கணக்காகவும் சிவகங்கைத் துரைசிங்க மன்னரின் (1898–1941) ஆதரவு பெற்ற புலவராகவும் வாழ்ந்தவர்.

‘பஞ்சத்தால் துன்புற்ற மக்கள் மதுரை சென்று சோமசுந்தரக்கடவுளிடம் முறையிடுகின்றனர்; மதுரைச் சொக்கரும் மக்களின் குறை தீர்க்கும் பொருட்டுச் சிவகங்கை அரசருக்குச் சிபாரிசுக் கடிதம் (அதாவது திருமுகம்) கொடுத்து அனுப்புகிறார். அக்கடிதத்துடன் சென்ற மகாஜனங்கள் அரசரைக் கண்டு அவரிடமிருந்து வேண்டுவன பெற்றுத் தத்தம் துன்பம் நீங்கி மகிழ்கின்றனர்’. இவ்வாறு கதையினை அமைத்து நூல் முழுக்கக் கிண்டலும், கேலியுமாக 2301 கண்ணிகளில் கலிவெண்பா யாப்பில் இதனைப் பாடியிருக்கிறார் புலவர். சிவகங்கை அரண்மனையில் துரைசிங்க மன்னர் முன்னிலையில் 1899 ஆம் ஆண்டில் ‘திருமுகவிலாசம்’ அரங்கேறியது. அடுத்த ஆண்டிலேயே (1900) சென்னையில், சூளை நிரஞ்சனிவிலாச அச்சியந்திர சாலையில், இந்நூல் அச்சிற் பதிக்கப்பெற்றுள்ளது. பதிப்பித்தவர், மதுரைப் புதுமண்டபம் புத்தகஷாப் இ.ராம.குருசாமிக்கோனார். இதன் மறுபதிப்பு மதுரையில் குருசாமிக்கோனார் அவர்கள் நிறுவிய ஸ்ரீ இராமச்சந்திர விலாசம் பிரஸில் 1932இல் பதிக்கப்பெற்றது. அதன் பின்னரும் இறுதியாக 1961 ஆம் ஆண்டில் இராமசாமிக்கோனார் என்பவரால் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.

நூற்பெயர்

எழுத்து,சொல்,பொருள்,யாப்பு,அணி ஆகிய ஐந்திலக்கணம் பற்றிய நூல்களைப் ‘பஞ்சலட்சணம்’ என வழங்குதல் மரபு, லட்சணம் என்பது இலக்கணத்தைக் குறிப்பதாகும். ‘பஞ்சலட்சண வினாவிடை’, ‘பஞ்சலட்சணமூலம்’ என்னும் பெயரில் தமிழில் நூல்கள் உண்டு. திருமணம் செல்வக்கேசவராய முதலியார் (1864 – 1921) ‘பஞ்சலட்சணம்’ என்னும் பெரில் உரைநடை நூல் ஒன்றும் எழுதியிருக்கிறார். ஆனால் வில்லியப்பர், இப்பொருளில் இத்தொடரை எழுத்தாளவில்லை. ‘பஞ்சத்தின் லட்சணம்’ என்னும் கேலிப் பொருளில் தான் இந்நூலுக்கு இவர் பெயர் சூட்டியிருக்கிறார். நூலின் தலைப்பாக வெளியில் மட்டுமே காணப்படும் பெயரீடு இது. நூலினிடையே ஓரிடத்திலேனும் ‘பஞ்ச லட்சணத்திருமுக விலாசம்’ என்னும் பெயரை அவர் பயன்படுத்தவே இல்லை. பஞ்சத்தின் கொடுமையால் தலைகீழாக மாறிப்போன சமூக அவலங்களை நையாண்டி செய்து நூல் முழுக்கப் பாடும் புலவன், ‘பஞ்சத்தின் லட்சணத்தைப் பாரீர்’ என்று எடுத்த எடுப்பில் (ழரவளநவ) உணர்த்துவதற்காகவே இவ்வாறு பெயரிட்டதாகத் தோன்றுகிறது. எதிர்மறை இலக்கணையாகவும் இகழ்ச்சிக் குறிப்பாகவும் வைக்கப்பட்ட பெயர் இது. நாகப்பக்கவுண்டர் என்பவர் கும்மிப் பாடல்களால் பஞ்சத்தைப் பற்றிப் பாடிய நூல் ஒன்று (1879) ‘பஞ்சக்கும்மி’ என்றே பெயர் பெற்றது. அதைப் போல வில்லியப்பரும் இதற்குப் ‘பஞ்சத்திருமுக விலாசம்’ என்று பெயர் சூட்டியிருந்தால் அவர் கருதிய நையாண்டியும் (ளஉழகக) கேலிக் குறிப்பும் தோன்றுவதற்கு இடமில்லாமலே போயிருக்கும். நையாண்டிக்கு இடம்

கொடுமையான பஞ்சம் பற்றிய நூலில் நையாண்டிக்கும் நகைச் சுவைக்கும் ஏது இடம்? மக்களின் சொல்லொணாத்துயரங்கள் அல்லவோ அதிற் பேசப்பட்டிருக்க வேண்டும்? அதைவிடுத்து நகையாடுவதும் கேலிபேசுவதும் எப்படிச் சாத்தியமாகும்? பக்கத்திருப்பவர் துன்பம் கண்டு மனம் இரங்குவதும் கருணைகாட்டுவதும் தானே மனித இயல்பு!

ஆனால் வில்லியப்பர் பாடிய இந்த நூல், “நகைச் சுவையின் பொக்கிஷமாகவே உள்ளது” என்று பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளையும், “நையாண்டி இலக்கியம் என்னும் துறையில் பஞ்சலட்சணம் தான் முதற்பெருநூலாகவும் முன்னோடியாகவும் விளங்குகிறது” என்று தொ.மு.சி. ரகுநாதனும், “1899 இல் அரங்கேறிய இந்த நூலுக்கு இணையான நகைச்சுவை நூல் உலக இலக்கியத்திலேயே கிடையாது” என்று கு.அழகிரிசாமியும் இந்த நூலைப் பாராட்டிச் சொல்லியிருக்கிறார்களே, அதற்கு என்ன காரணம்?

நூல் அரங்கேற்றத்தின் போது வில்லியப்பரின் நகைச்சுவையைக் கேட்டுப் பூமியைச் சுமக்கும் ஆதிசேடனும் தலைகுலுக்கிச் சிரித்தானாம். அதனால் பூமிநடுங்கிற்றாம். அதைக்கண்டு அஞ்சி ஓடிய இளவஞ்சிக்கொடியான உமையம்மையும் சிவபிரானைத் தழுவிக்கொண்டு என்ன இது? என்று வினவினாளாம். பரமனும் பார்வதியைப் பார்த்து, ‘மலைமகளே! வில்லியப்பன் திருமுக விலாசமதைப் பாட ஆதிசேடனும் அதைக் கேட்டுத் தலையசைத்தான்; அதனால் உலகம் யாவையும் அதிர்ந்தன’ என்றானாம். இந்நூலில் உள்ள சாற்றுகவி ஒன்று,(10) வில்லியப்பரின் நகைச்சுவை குறித்து இப்படித் தான் கொண்டாடுகின்றது.

உடலெங்கும் கரந்து பரந்திருக்கும் உயிரைப் போல இந்நூல் முழுக்க நகைச்சுவை நிறைந்திருப்பதற்கான காரணம் என்ன?

பஞ்சம் நிகழ்ந்த தாது வருஷத்திலோ (1876) அதன் தாக்கம் நீடித்த அடுத்த சில ஆண்டுகளிலோ புலவன் இந்த நூலைப் பாடவில்லை. பஞ்சம் நடந்து முடிந்த 23 ஆண்டுகளுக்குப் பிறகு பாடப்பெற்ற நூல் இது; 1899 இல் இந்நூல் அரங்கேறியது என்பதை முன்னரே குறித்தோம். பஞ்சகாலத்தில் வாழ்ந்தவன் புலவன். பஞ்சத்தில் அகப்பட்டும், அடிபட்டும் தானும் ஒர் அங்கமாக இருந்த அனுபவம் புலவனுக்கும் உண்டு. நகையுணர்ச்சியும் நையாண்டியும் புலவனோடு ஒட்டிப் பிறந்தவை. எனவே நடந்து முடிந்த பஞ்சத்தைப் பின்னோக்கிப் பார்க்கையில் அந்நாளில் பட்ட துன்பங்கள் யாவும் விழுந்து விழுந்து சிரிக்கும் வேடிக்கைக் கதைகளாகத் தான் புலவரின் கண் முன்னே விரிகின்றன. அவற்றையே என்றும் அழியாத பதிவுகளாக்கிப் ‘பஞ்ச லட்சணத்தை’க் கேலியும் கிண்டலுமாகப் பாடிமுடிக்கிறார் வில்லியப்பர். பஞ்சத்தால் நிலைகெட்டுப் போன மனிதர்களுள் - தாம் பார்த்துப் பழகிய சிலரையும் தம்முள்; பாதிப்புண்டாக்கிய பலரையும் வேடிக்கை மனிதர்களாக்கி உயிர்த்துடிப்புள்ள பாத்திரங்களாக நம்முன் உலவ விடுகிறார். எளியவர்கள் பட்ட பாட்டையும் ஏமாற்றுக்- காரர்களால் அவர்கள் மோசடிகளுக்குள்ளானதையும் கேட்போர் வயிறு குலுங்கச் சிரிக்கும் படி வருணிக்கிறார். நகைச்சுவைக்கிடையில் பஞ்சத்தை முன்னிறுத்திப் பாடிய அவரின் சமூகப் பொறுப்புணர்ச்சிக்கு இந்நூல் சாட்சியமாக நிற்கிறது. சிவகங்கை மன்னரைச் சிறப்பித்துப் பாடியபோதிலும் அவர்காலத்துப் புலவர்களைப் போல இதனைக் காமச்சுவை மிகுத்துக் ‘காதல் பிரபந்த’மாகப் படைக்கவில்லை; ‘சிற்றின்பச் சுவைத்’ திரட்டாகவும் செய்யவில்லை.

புலவரின் நையாண்டி

இனிப் பஞ்சகாலத்து நிகழ்வுகள் பலவும். இவர் பார்வையில் நையாண்டிக்கு இடமாவதைப் பார்க்கலாம்.

பசிக்கொடுமை தாங்காத சிலர் வெட்கத்தைவிட்டுப் பக்கத்து வீடுகளுக்குள் நுழைந்து சோற்றுப்பானையிலிருந்து திருடி உண்டனராம்(210); வேறு சிலரோ மனைவி மக்களைத் துறந்து, பஞ்சத்துக்கு ஆண்டியாகிப் பரதேசம் போனார்களாம்(213); சிலர் மனைவிக்கு மாரியாத்தாள் வேடமிட்டு ஆடச்செய்து, தாம் பறையடித்து, ‘இவளே கைகண்ட தேவி’ எனக் காட்டிப் பிழைப்பு நடத்தினார்களாம்(214-15); இன்னும் சிலரோ, அயலானோடு மனைவி ஒப்பிச்சிரித்து உறவாடக் கண்டும், ‘எப்படியோ காரியமாகட்டும்; பசிதீரும்’ என்று மகிழ்ந்திருந்தார்களாம்(216); பட்டும் பகட்டுமாகச் சொகுசான வாழ்க்கை நடத்தியவர்கள் எல்லாம் ‘குண்டித் துணியும் குடிக்கத் தெளிவுமின்றி’ (220-221)க்கண்டிக்கு ஓடினார்களாம். இருப்பதையெல்லாம் விற்றும் பஞ்சம் தீராமல் அங்கங்கே யாசகத்துக்கு ஓடி அலைந்தனராம் சிலர்(242-43). வாழைக்கிழங்கை மாவாக்கிக் கிண்டி அதன் கூழைக் குடித்ததனால் சிலர் பேழையெனக் குடல் பெருத்துப் போனார்களாம். அதன் விளைவாக இறந்தோர் எண்ணிக்கை கணக்கில் அடங்காது என்கிறார் புலவர்.

“கால்முகமும் வீங்கிக் கடுங்கழிச்ச லாய்க்கழிந்து மேல்உலகம் சென்றார் வெகுபேர்கள்” (245)

என்று மேலும் தொடர்கிறது இந்த வருணனை.

ஒவ்வாத உணவுகளால் வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாமல் வாந்தி பேதி உண்டானதைக்கூட நையாண்டியாகவே வருணிக்கிறார் வில்லியப்பர். ஒரு காலத்தில் அன்ன தாதா (செந்நெல் சோறு) கொலுவிருந்த சத்திரத்தில் (இரைப்பை) கூழேந்த்ரன் (கூழ் உணவு) புகவும் அவனை ஏற்காத வயித்தியய்யன்(வயிறு) ‘காற்றவராயன் சேர்வை’யோடு (வாயுத் தொல்லை) சேர்ந்து கலகம் செய்யவும் சத்திரத்தின் கீழ்க்கதவை (எருவாய்) உடைத்துக்கொண்டு அதன்வழியே வெளியேறிவிட்டானாம் கூழேந்திரன். உண்டது ஒன்றும் உடலில் தங்காமல் வாந்தி பேதி வந்து வருத்தியதால் பஞ்சாயத்தாரும்(ஐம்பொறிகள்) பலமிழந்து, சீவகன்(உயிர்) இமனேஸ்வரத்துக்குப் பயணப்பட வேண்டிய நேரம் வந்து விட்டதாம். அப்படித் துன்புற்றவர்களையெல்லாம் மருத்துவரிடம் காட்டி வைத்தியம் பார்த்து வாழச் செய்தார்களாம். கடைசி வரை ‘உருவக’ மாகவே இந்த வருணனையை அமைக்கிறார் வில்லியப்பர். கடைசியில் உயிரைக் காப்பாற்றிய செயலைக் குறிப்பிடுகையில், ‘சீவகனை மீண்டும் காயாபுரிக்கு (அதாவது உடம்புக்கு)த் தலைவனாக ‘முடிசூட்டி’ப்(பிழைக்க) வைத்தார்கள் என்று முடிக்கிறார். என்றாலும் கூழேந்திரன் மீது வயித்தியய்யன் கொண்ட கோபம் குறையாமல் எந்நேரமும் மொறு மொறுப்பாய்; (ப்பல்லைக்கடித்துப் பழிவாங்கும் நோக்கத்தில்) இருந்தானாம்.

வில்லியப்பர் வாழ்ந்த பஞ்ச காலத்தில் வாழ்ந்து – அவர் வருணிப்பது போலவே வயிற்றுக்கழிச்சலில் துன்பப்பட்டுத் தப்பிப் பிழைத்தவர்களும் கூட, புலவரின் இந்தக் கேலியான வருணனையைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்திருப்பார்கள் என்று நம்பலாம். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றார் வள்ளுவர். இடுக்கண் ஒன்றுமின்றி வசதியாக வாழும் போதும், முன்னொரு காலத்தில் தாம்பட்ட பாடுகளைச் சொல்லி நகுவதும் கூட மனித இயல்புதான். அவ்வியல்புக்குப் பொருந்துமாறு அமைந்த வருணனைகள் இவை.

நூல் முழுக்க நையாண்டி

இத்துடன் அமையாமல் காசுக்கடைக்காரர், தட்டான், ஜவுளிக்கடைக்காரர், வட்டிக்குக் கடன் கொடுப்போர், பொய் வழக்காடுவோர் என அக்காலத்து ஏமாற்றிப் பிழைத்தவர்களின் ‘சரித்திர’த்தையும் நமக்குச் சொல்லுகிறார் புலவர். பஞ்சம் பிழைப்பதற்காக உடலுழைப்பை நாடாமல் - புற்றீசல் போலப் புறப்பட்ட போலிச் சாமியார்கள், வைத்தியர்கள், சோதிடர்கள், போலிப்புலவர்கள் என நாடெங்கிலும் எத்திப் பிழைத்தவர்களும் இவரது ‘பாட்டு’வலையில் அகப்பட்டுக்கொள்கின்றனர். விலை மாதர்களும் கோடங்கி அடித்துக் குறி சொல்லுவோரும் கூட வில்லியப்பரின் கேலிக்குத் தப்பவில்லை. அக்காலத்திய நீதிமன்ற நடைமுறைகள், வாதிபிரதிவாதிகளின் தந்திரங்கள், பிரதிவாதி கோர்ட்டு சேவகனை ஏமாற்றிவிட்டுத் தப்பியோடுதல், அவன் சொன்ன விருந்து வளப்பத்தைக் கேட்டு வாயூறி நின்றதால் ஏமாந்த சேவகன் - வாயார அவனைத் திட்டித் தீர்த்தல் முதலான நிகழ்வுகள் (இங்குக் காட்டியவை சிலவே) யாவும் நகைச்சுவைக் காட்சிகளாகவே இந்நூலில் விரிகின்றன. எந்த ஒரு நிகழ்வையும் கதைமாந்தரையும் ஆசிரியர் நையாண்டியாகவே சித்திரிக்கிறார். நூலில் ஓரிடத்திலும் பஞ்சம் பற்றிய ஒப்பாரிக்கோ அழுமூஞ்சித்தனத்துக்கோ இடமில்லை. நையாண்டியின் உச்சகட்டம்

பஞ்சத்தால் விலை மகளிரை விரும்பி வருவோர் ஒருவரும் இல்லையாம். அதனால் அவர்களும் பாதிக்கப்பட்டனர்; பசித்துக் கிடந்தனர் - என்று தான் புலவர் பாடியிருக்க வேண்டும். ஆனால் நையாண்டிக்குப் பேர் போன வில்லியப்பர் அவர்களை அவ்வளவு எளிதில் விட்டுவிடுவாரா என்ன?

“விப சாரத் தொழில்புரிந்து சந்தமும் தேடியுண்ட சோர ஸ்திரிகள்தனைத் துய்ப்பவர்கள் - ஆருமிலார் ஆதலினா லன்றோ அரியவட மீன்நிகர்ப்ப மேதகைய கற்புடைமை மேவினரால்” (251-53)

என்று பாடுகிறார். தம்மை நாடி எவரும் வராத காரணத்தால் விலை மகளிர் அனைவரும் கற்பிற் சிறந்த அருந்ததி(வடமீன்) போலவே விளங்கினார்களாம்.

பொதுமகளிர் நிலை தான் இப்படி! அன்றைய பொதுமக்களுள் இளந் தம்பதிகளாய் வாழ்ந்தவர்கள் நிலை என்ன?

பஞ்சம் அவர்களையும் பாதித்ததா? காலநேரம் பார்க்காத அந்த இளம் பருவத்தில், ‘தாரும் மாலையும் மயங்கக்’ கூடி மகிழ்ந்தார்களா? இல்லை அடங்கிக் கிடந்தார்களா? அந்த இளவட்டங்களைப் பற்றி வில்லியப்பர் என்ன சொல்லுகிறார்? அவர்களும் கூட அவரின் கண்வட்டத்திலிருந்து – கேலிப்பார்வையிலிருந்து தப்ப முடியவில்லை.

பஞ்சத்தாலும் பல நாள் பட்டினியாலும் உடல் நலிந்தும் மெலிந்தும் வருந்தியவர்கள் அவர்கள். வயிறார உண்டு பசி தீந்;தவனுக்குத் தானே காமப்பசி எடுக்கும்! தொடர்பட்டினியால் சத்துவிட்டவன் தேனின் கசிவந்த சொல்லியர் மேற் காமுறுதல் சாத்தியமா? நடக்கக்கூடிய காரியமா அது? இருந்தாலும் இந்த மன்மதப் பயல் சும்மா இருப்பானா? அவனால் அந்த இளங்காதலர்களுக்கு நேர்ந்தது என்ன? அந்த வெட்கக்கேட்டை வில்லியப்பரே விவரிக்கக் கேட்போம்.

“வெற்றிமதன் கோடியவிற் பூட்டிக் குறித்துமலர்ச் சாயகத்தை ஈடுகட்டிக் கூடியமட்டு எய்திலும் - ஆடவர்கள் மங்கையரைத் தேடுதற்கும் மங்கையர்கள் ஆடவரின் சங்கமத்தை நாடுதற்கும் சத்துவிட்டுப் - பொங்கியெழும் காமயநாயக்கர் கனகுதிப் பெல்லாம் ஒடுங்கி ஆமையப்பர் போலாய் அடங்கினரே” (348-51)

என்பதில் தான் எத்தனை எள்ளல்! எத்தனை நையாண்டி!

பாலுணர்வுத் தூண்டலென்பது மனிதர்களுக்கு மட்டுமன்றி உயிர்களுக்கெல்லாம் பொதுவானது.

“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தான்அமர்ந்து வரூஉம் மேவற் றாகும்”

என்கிறது தொல்காப்பியம்.

“காதல் அடைதல் உயிர்இயற்கை – அது கட்டில் அகப்படும் தன்மையதோ?”

என்று கேட்பார் பாவேந்தரும்.

இப்படி உயிர்களிடத்து இயல்பாக ஊற்றெடுக்கும் காதல் உணர்வு கடும் பஞ்சமாகிய கட்டில் அகப்பட்டு வற்றிப் போனதைப் புலவன் கேலியுடன் எடுத்துரைக்கும் தனித்தன்மையை எளிதில் மறக்கவியலாது.

புலவன் சரித்திரம்

பன்முகம் கொண்ட இந்த நகைச்சுவை தீபத்தின் - ஒளிச்சுடரில் கற்போரைக் கவரும் ஒரு சுடராகத் – திகழ்வது ‘புலவன் சரித்திரம்’ என்னும் பகுதியாகும்.

போலிப்புலவன் ஒருவன் பஞ்சம் பிழைப்பதற்கான வழிதேடித் தான் அவ்வப்போது மனப்பாடம் செய்துவைத்திருந்த – பொன்னுச்சாமித்தேவர் அவர்களின் - தனிப்பாடல் திரட்டுத்தந்த தைரியத்தில் - ஏடும் கையுமாகக் கற்றுச் சொல்லியையும் உடனழைத்துக் கொண்டு, பரிசில் வேட்டைக்குப் புறப்பட்டுப் போகிறான். அப்போது அவன் கொண்ட ‘புலவர் வேட’த்தை முதலில் வருணிக்கிறார் வில்லியப்பர்.

“காதில் தரிப்புக் கடுக்கன் ஒளியிலங்கச் சோதிமுலாம் பூசித் துலக்கியஓர் மோதிரத்தைக் கைவிரலில் பூண்டு, கனவல்ல வாட்டுடனே ஒய்யாரமான உடை உடுத்தி.... கண்ணாடி பார்த்துக் கவின்திலகம் தீட்டி மகிழ்ந்து அண்ணாந்து காலை அகட்டி நடந்து – ஒண்ணார்ந்த கையில் குடை பிடித்துக் கால்சோடு மாட்டி ஒரு பையல் கற்றுச் சொல்லி தன்பின் பற்றிவர” (873-74, 876-77)

புலவனின் பவனி தொடங்குகிறது. ஊர் ஊராய்ச் சென்றும் ஒன்றும் கிடைக்காமல், கடைசியில் பெண்டாட்டி தாசனாய் உள்ள ஒரு ‘புரவல’னைக் கண்டு, ‘அஷ்டாவதானம்’ சரவணப்பெருமாள் கவிராயர் பாடிய பாடல்கள் சிலவற்றைத் தான் பாடியது போலத் தடதடவென்று ஒப்பித்து, ஆசையால் அவன் முகம் பார்த்துப் பரிசிலுக்காகத் தாழ்ந்து நின்றான். ‘புரவல’னோ, ‘நாளை, பிறகு’ என்று சொல்லிப் பார்த்தும் உடும்புப் பிடியாய் நின்ற புலவனிடமிருந்து தப்பமுடியாமல், தயங்கித் தயங்கி மனைவியிடம் சென்று, “நல்லாய்! நம்மைப்பற்றிப் பாட்டெழுதி வந்திருக்கிறார் புலவர் ஒருவர். ‘அதில் உன் பேரை முந்திவைத்து என்பேரை முகனை வைத்து’ப் பாடியிருக்கிறார். அவருக்கு நாம் மரியாதை செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் நம் ஐஸ்வர்யம் எல்லாம் அழிந்து விடும்; வசை பாடிவிடுவார்” என்றானாம். அதைக் கேட்டதுமே கோபமென்னும் குன்றேறி நின்றாள் அந்தக் கோதை. அந்தக்கோபத்தில் - வந்த புலவன் வசைபாடு முன்னே, ‘கூதறையே’ என்று தன் கணவனை விளித்தாள்.

“நீட்ட முடக்கறியாய் நீ கெட்ட கேட்டுக்குப் பாட்டொன்றோ! என்ன பகுமானம்?” (924)

என்று வசைப்பாட்டுப் பாடினாள். ‘வெளியிற் போ! போ’ என்று புருஷனை ஆக்ரமித்துப் பேசி அதட்டினாள்; எனினும் அவன் அசையவில்லை. தலைகுனிந்து அவள் தாள் பணிந்து, ‘புலவனுக்குச் சற்றே மனம் இரங்குவாய்’ என்றான். கடைசியில் கணவனின் கெஞ்சலுக்கு இரங்கி அவளும் சால நெடுநேரம் தனித்திருந்து யோசித்துக் ‘காசு கைவிட்டுக் போகிறதே’ என்ற கவலையுடன், ‘காலணா ஈந்தாள்; கடுகடுப்பாய்’. புலவன் நகைச்சுவையின் உச்சத்தைத் தொடும் இடம் இது.

அதற்குப் பிறகு என்ன தான் நடந்தது? அந்தக் காலணாவை (காலணா-முக்கால் துட்டு; அந்நாளைய ஒரு ரூபாயில் 64 இல் ஒரு பங்கு) வெளியில் தெரியாதாவாறு கையால் இறுகமூடிக் கொண்டு புலவனிடம் வந்தான் ‘புரவலன்’. ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த புலவனை நோக்கி,

“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரிவார்”

என்று இனிதாகச் சொல்லி அந்தக் காலணாவை அவன் கையில் வைத்தானாம். முக்கால் துட்டைப்; பார்த்த புலவனுக்கு மூக்குக்கு மேல் கடுங்கோபம்; சொல்லொணாத ஏமாற்றம்! இருந்தாலும் சற்றே அடக்கிக் கொண்டு, அந்தப் ‘புரவல’னைப் பார்த்து, ‘எவ்வளவு பெரிய செல்வத்தைத் தானமாகத் தந்து விட்டீர்! ப்ரபுவே! இந் மெய்க் கொடைக்கு முன்னால் மூவேழு வள்ளல்களும் உமக்கு ஒப்பாவாரோ?’

“செல்லும் வழி மார்க்கம் திருடர்பய முண்டு, கண்டீர்! நல்லதுணை கூட்டி நமைஅனுப்பும்” (942)

என்று நையாண்டி பேசுகிறான்.

கோபம் கொண்ட அந்தப் ‘புரவல’னுக்கும் புலவனுக்குமிடையே வாக்குவாதம் முற்ற, ‘இனி உனக்குத் தடிக்கம்பு ப்ரசண்டு செய்வேன்’ என்று மோதும் முடிவோடு அவன் முன்னேறி வரவும், புலவனும் கற்றுச் சொல்லியும் ‘நான் முந்தி நீமுந்தி’ என்று ஒடத் தொடங்கினார்களாம்.

“கா உலவும் மான் ஓட்டம் மெத்த வலியில்லை; வந்தகல்வி மான் ஓட்டம் மெத்தவலி உளதே” (962-63)

என்று புலவன் விரைந்து ஓடிய ஓட்டத்தைக் கேலி செய்கிறார் வில்லியப்பர். “வஞ்சகர்பால் நடந்தலைந்த காலிற் புண்ணும் வாசல்தொறும் முட்டுண்ட தலையிற் புண்ணு”

மாக அல்லற்பட்ட புலவர்களை அறிந்த நமக்கு வில்லியப்பரின் ‘புலவன் சரித்திர’த்தில் வரும் - புலவன் உள்ளிட்ட நால்வரும் (ஏனையோர் - கற்றுச் சொல்லி, ‘புரவலன்’; அவன் மனைவி) நெஞ்சகலாத கதை மாந்தராய் நிலைத்து விடுகிறார்கள். இவர்களே அன்றி இந்நூலில் வரும் அனைவரும் உயிர் பெற்று உலவுகிறார்கள். பிரமனூரில் வாழ்ந்த வில்லிப்பன் என்னும் பிரமனின் படைப்பாற்றல் செய்த விந்தை இது.

சமூக ஆவணம்

பத்தொன்பதாம்; நூற்றாண்டுத் தமிழ்ச்சமூகம் பற்றிய ஓர் ஆவணமாகவும் இந்த நூல் விளங்குகிறது.

பேச்சு மொழியும் (உழடடழஙரயைட யனெ னயைடநஉவ) மரபுத் தொடர்களும் (ஐனழைஅள யனெ Phசயளநள) நாட்டார் சொலவடைகளும் (ளுயலiபெ) சில கொச்சையான சொற்களும் (ளடயபெ) கூட வில்லியப்பரின் கவிதைச் சிங்காதனத்தில் ஒய்யாரமாகக் கொலு வீற்றிருக்கின்றன. ‘மக்களின் மொழி’யை ஏற்றுக் கொண்டு புலவன் அச்சொற்களுக்கும் ‘சரியாசனம்’ கொடுத்ததன் அடையாளம் இது. அத்தகைய சொற்களை, ‘இழி(சினர்)’ சொற்களாகக் கருதி நீக்க வேண்டடியதில்லை. அப்படிச் சிலர் தவறாகக் கருதி நீக்கியதையும் இந்த நூலின் பிந்திய பதிப்புகளில் பார்க்கிறோம்.

காட்டாக ஒன்று: சமன் (ளரஅஅழn) சார்பு செய்ய வந்த நீதிமன்றப் பணியாளனிடமிருந்து அதைப் பெற்றுக்கொள்ளாமல் - அவனுக்குப் பெரியதொரு விருந்து வைப்பதாகச் சொல்லி அவனை ஏமாற்றிவிட்டு சமனை வாங்காமலேயே தப்பித்துச் செல்கிறான் பிரதிவாதி. என்னென்னவோ உணவு வகைகள்; எத்தனை எத்தனையோ பலகார வர்க்கங்கள் - அத்தனையையும் அடுக்கிச் சொல்லித் தன்னை அவன் மயக்கியதைப் பின்னோட்ட உத்தியில் நினைத்துப் பார்க்கிறான் சேவகன். நினைக்க நினைக்க அவனுக்கு ஆத்திரம் பொங்குகிறது. அந்த ஆத்திரத்தை எந்தத் தயக்கமுமின்றிப் ‘பச்சை’யாகவே வெளியிடுகிறான்.

“நல்ல விருந்தாம்; வீட்டில் நானாழிப் பால்உளதாம்; அல்லவும் நெய்ச் சாடி அளவிலையாம்; வெல்லமிட்ட கூட்டுக் கறியாம்; குழை கறியாம்; வக்காளைப் போட்டுக் கிடந்த புளிக் கறியாம்; மூட்டுகின்ற பச்சடியாம்; நெய்யாம்; பருப்பாம்; அதிரசமாம்; கிச்சடியாம் வைச்சடிச்சுக்; கிண்ணுவனாம்” (1874-76)

என்னும் கண்ணிகளில் வசைமொழியும் தீராக் கோபமும் கைகோத்து நிற்பது காண்க. இவற்றின் இடையில் உள்ள இரண்டாம் கண்ணி (1875) பிரதிவாதி தன்னை ஏமாற்றியதால் உண்டான ஆத்திரத்தை அப்படியே எந்த வெளிப்பூச்சுமின்றிக் கொச்சையாகவே வெளியிடுகிறது; அப்போதைய மனநிலைக்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்றவாறு அவன் வாயில் தானாகவே வந்து போன ‘வார்த்தை’ இது. புலவர் இவ்வாறு பாடியது இடத்திற்குப் பொருத்தமானது என்றே வாசகனை இது நினைக்கச் செய்யும். எனவே தான் முதற்பதிப்பில்(1900) இந்தக் கண்ணி இங்குக் குறித்தவாறே, பதிப்பிக்கப் பெற்றுள்ளது. ஆயினும் இதனை ‘இடக்கரடக்கல்’ என்று கருதி 1900-த்துக்குப் பின் வந்த பதிப்புகளில்,

“கூட்டுக் கறியாம்; குளக்கறியாம்; நற்பாகைப் போட்டுச் சமைத்த புளிக்கறியாம்” (1875)

என்று மாற்றப்பட்டுள்ளது. இம்மாற்றத்தால் முந்திய கண்ணியிலிருந்த கோபக்கனல் இருந்தவிடம் தெரியாமலேயே மறைந்து விட்டது. சென்னை ரோஜா முத்தையா நூலகம், புதுக்கோட்டை ‘ஞானாலயா’ ஆகியவற்றில் பார்த்த முந்திய பதிப்புகளால் இதனை உறுதி செய்ய முடிகிறது. இப்படி அவரவர் விருப்பம் போல் மாற்றம் செய்வது, மூலநூலாசிரியனுக்குச் செய்யும் துரோகமாகும். வேதநாயகரின் முதல் நாவலில் இடம்பெற்ற வடசொற்களை நீக்கித் ‘தமிழ்ப்படுத்தி’ வெளியிட்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகத்தின் ‘சதிச் செய’லுக்கு ஒப்பானது தான் இதுவும். எனினும் அண்மையில் வெளியான இந்நூலின் புதிய பதிப்பில் (ஆகஸ்ட் 2014, கவிதா வெளியீடு, சென்னை) முதற்பதிப்பில் உள்ளவாறே இங்குக் குறிப்பிட்ட கண்ணி எந்த மாற்றமும் இன்றிப் பதிப்பிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியதாகும்.

முடிவுரை

தொ.மு.சி. ரகுநாதன் போன்றவர்களால் ‘சமுதாய இலக்கிய’மாகப் பார்க்கப்பட்ட நூல் இது. தமிழின் ‘முதல் நையாண்டி இலக்கிய’மாகவும் இதனை அவரே அடையாளம் காட்டியிருக்கிறார். எனவே இந்நூல் பற்றிய பரவலான அறிமுகம் இந்தக் கட்டுரையாலும் சமீபத்தில் வெளிவந்துள்ள புதிய பதிப்பினாலும் தமிழ் வாசகர்களைச் சென்றடையுமென்று நாம் எதிர்பார்க்கலாம். உதவிய நூல்கள்

பஞ்சலட்சணத்திருமுகவிலாசம், இ.ராம. குருசாமிக் கோனார் பதிப்பு, 1900, சென்னை. பஞ்சலட்சணத்திருமுகவிலாசம், இ.ராம. குருசாமிக் கோனார் பதிப்பு, 1932, மதுரை. பஞ்சலட்சணத்திருமுகவிலாசம், பதிப்பாசிரியர் ம.பெ. சீனிவாசன், கவிதா வெளியீடு 2014, சென்னை. சமுதாய இலக்கியம் தொ.மு.சி. ரகுநாதன், மீனாட்சி புத்தகநிலையம், 1980, மதுரை.


தொடர்புக்கு:

முனைவர் ம.பெ. சீனிவாசன், எஸ் 2, வரதா டீலக்ஸ், வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மதுரை 625003, பேசி: 98424 36640.