உள்ளடக்கத்துக்குச் செல்

பெருங் கண்காட்சி, இலண்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெருங் கண்காட்சி, இலண்டன் எனப்படுவது, 1851 மே முதலாம் தேதி தொடக்கம் அக்டோபர் 11 வரை இலண்டனில் உள்ள ஐட் பார்க்கில் இடம்பெற்ற பன்னாட்டுக் கண்காட்சி ஆகும். இது நடைபெற்ற தற்காலிகக் கட்டிடத்தின் பெயரைத் தழுவி இதை கிறிஸ்டல் மாளிகைக் கண்காட்சி என்றும் குறிப்பிடுவது உணடு. 19ம் நூற்றாண்டில் புகழ்பெற்ற, பண்பாட்டுக்கும் தொழில் துறைக்குமான பன்னாட்டுக் கண்காட்சித் தொடரில் முதல் கண்காட்சி இதுவாகும். இக்கண்காட்சி என்றி கோல் என்பவராலும், ஆட்சியிலிருந்த அரசி விக்டோரியாவின் கணவர் இளவரசர் ஆல்பர்ட்டாலும் ஒழுங்குசெய்யப்பட்டது. இக்கண்காட்சியில் சார்லசு டார்வின், சாமுவேல் கோல்ட்டு, சார்லட் புரோன்ட்டே, சார்லசு டிக்கென்சு, லூயிசு கரல், ஜார்ச் எலியட்டு, ஆல்பிரெட் தெனிசன் ஆகியோர் உட்பட ஏராளமான அக்காலத்தில் புகழ் பெற்றவர்கள் கலந்துகொண்டனர்.

காட்சிப் பொருட்கள்

[தொகு]

இக்கண்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்ட படங்களுடன் கூடிய விபரக்கொத்தில், பிரித்தானியா முழுவதிலும் இருந்தும், அதன் குடியேற்ற நாடுகளில் இருந்தும், 44 ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் இருந்துமான காட்சிக்கு வைப்போர் பட்டியல் இடம்பெற்றிருந்தது. காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த 13,000 பொருட்களில் சக்கார்ட் தறி, கடித உறை எந்திரம், சமையலறைக் கருவிகள், எஃகுத் தயாரிப்பு விளக்கங்கள், ஐக்கிய அமெரிக்காவில்அ இருந்து அனுப்பப்பட்ட அறுவடை இயந்திரம் போன்றவை அடங்கியிருந்தன.[1]

இந்தியாவில் கிடைத்த உலகின் மிகப்பெரிய கோ-இ-நூர் வைரம், கிடைத்தற்கு அரிய மங்கலான இளம் சிவப்பு நிறம் கொண்ட டாரியா-இ-நூர் வைரம் என்பனவும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 8ம் நூற்றாண்டைச் சேர்ந்ததும் முந்திய ஆண்டு (1850) கண்டெடுக்கப்பட்டதுமான "தாரா ஆடையூசி" ஒன்றும் இருந்தது. அக்காலத்துப் பெயர்பெற்ற பூட்டுக்களின் போதாமை குறித்த விளக்கங்கள், இன்றைய தொலைநகல் எந்திரங்களுக்கு முன்னோடியான ஒரு எந்திரம் குறித்த விளக்கம் என்பவற்றுடன், உலகின் முதல் வாக்களிப்பு இயந்திரமும் பார்வைக்கு இருந்தது.[2]

நுழைவுக் கட்டணம்

[தொகு]

நுழைவுக் கட்டணம் நாட்களைப் பொறுத்து வேறுபட்டது. நாடாளுமன்ற அமர்வுகள் முடிவடையும் நாள் நெருங்கும்போது கட்டணங்களும் குறைந்து வந்தன. நாடாளுமன்ற அமர்வுகள் முடிந்ததும் செல்வந்தர்கள் இலண்டனைவிட்டுப் போய்விடுவது வழக்கம். பருவச் சீட்டுகள் 3 கினியாக்களுக்கு (2015ல் £311.05) விற்கப்பட்டன. பெண்கள் இதற்கு 2 கினியாக்கள் கொடுத்தாற் போதும். முதல் இரண்டு நாட்களும் ஒரு நாளுக்கு £1, பின்னர் மே 22 வரை ஒரு நாளுக்கு 5 சில்லிங்குகள்.[3] இதன் பின்னர் கட்டணம் மேலும் குறைக்கப்பட்டு நாளுக்கு ஒரு சில்லிங்கு (2015ல் £4.94) ஆனது. வெள்ளிக்கிழமைகளில் மட்டும் கட்டணம் 2 சில்லிங்குகளும் 6 பென்சுகளுமாக இருந்தது, சனிக்கிழமைகளில் 5 சில்லிங்குகள். தொழில் துறையினரிடையே ஒரு சில்லிங் சீட்டுக்கள் பெரிதும் வேண்டப்பட்டவையாக விளங்கின. இவ்வாறு நுழைவுக்கட்டணமாக நான்கரை மில்லியன் சில்லிங்குகள் (2015ல் £22,217,549) பெறப்பட்டது.[4] முதல்நாளில் அச்சிடப்பட்ட 2500 நுழைவுச் சீட்டுக்களும் விற்பனையாகிவிட்டன.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Great Exhibition at the Crystal Palace". Victorian Station. Retrieved 3 February 2009.
  2. "The Great Exhibition," Manchester Times, 24 May 1851.
  3. Leapman, Michael (2001). The World For A Shilling. pp. 72.
  4. "Entrance Costs to the Great Exhibition". Fashion Era. பார்க்கப்பட்ட நாள் 3 February 2009.
  5. Newth, A.M. (1967). Britain and the World: 1789-1901. New York: Penguin Books. p. 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-080304-1.