பெக்கலோங்கன் பாடிக் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெக்கலோங்கன் பாடிக் அருங்காட்சியகம்
Map

பெக்கலோங்கன் பாடிக் அருங்காட்சியகம் (Pekalongan Batik Museum) இந்தோனேசியாவின் மத்திய ஜாவா பகுதியில் பெக்கலோங்கன் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு பாடிக் அருங்காட்சியகம் ஆகும். பாடிக் என்பது துணியில் மெழுகு எதிர்ப்புத்தன்மை கொண்ட சாயத்தைக் கொண்டு உருவாக்கப்படுகின்ற ஒரு வகையான கலையாகும்.

வரலாறு[தொகு]

இந்த அருங்காட்சியகத்தின் கட்டிடம் முன்னர் சிட்டி ஹால் ஆஃப் பெக்கலோங்கன் (1906), நகர மையத்தில் அமைந்து இருந்தது. இப்பகுதியில் தேவாலயம் மற்றும் தபால் அலுவலகம் போன்ற முக்கியமான காலனித்துவ கட்டிடங்கள் அமைந்துள்ளன. ஜூலை 12, 1972 ஆம் நாள் அன்று மத்திய ஜாவாவின் கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகத்தால் இந்த அருங்காட்சியகம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இந்தோனேசிய பாடிக் பண்பாட்டைப் பாதுகாத்தல், பாடிக் சேகரிப்புகளை பாதுகாத்து வைத்தல், மக்களுக்கு இந்தோனேசிய பாடிக் பண்பாடு தொடர்பாக பயிற்றுவித்தல் போன்றவை இந்த பெக்கலோங்கன் பாடிக் அருங்காட்சியகத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

சேகரிப்பு[தொகு]

இந்த அருங்காட்சியகத்தில் பெக்கலோங்கன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த பரந்த அளவிலான பாடிக் கலை மற்றும் வடிவமைப்பினைக் கொண்ட சேகரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. அத்துடன் டச்சு காலம்‘ தொடங்கி இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் செல்வாக்கு வரையிலான பாடிக் கலையின் வளர்ச்சி பற்றிய தகவல்களும் அதன் ஹோகோகாய் ஜாவானீய கலைப்படைப்புகளும் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் அலுவலக இடம், பாடிக் கலைப்பொருள்கள் விற்கின்ற கடை, நூலகம் மற்றும் கருத்தரங்கு அறைகள் உள்ளன. பாடிக் தயாரிப்புகளை செயல்முறையில் விளக்கும் வகையில் ஒரு பட்டறையும் அமைக்கப்பட்டு உள்ளது.

யுனெஸ்கோ அங்கீகாரம்[தொகு]

யுனெஸ்கோ பெக்கலோங்கன் பாடிக் அருங்காட்சியகத்தை உலகின் புலனாகாப் பாரம்பரியம் (World Intangible Heritage) என்று 2009 ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது. இந்த அருங்காட்சியகம் பாடிக் பண்பாட்டைக் காப்பதோடு, பாடிக் கலை சேகரிப்புகளை பாதுகாத்து வைப்பதில் முக்கியத்துவம் செலுத்துகிறது. அத்துடன் இந்த கலை தொடர்பான விழிப்புணர்வினை உண்டாக்கும் வகையில் பயிற்றுவிப்பு, பட்டறை நடத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் 1,200க்கும் மேலான பாடிக் துணி வகைகள் பார்வையாளர்களுக்காகக் காட்சிப்படுத்தப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளவற்றில் பல பொருள்கள் கோட்பாட்டு அடிப்படையில் உள்ளன. அவை பொதுமக்களிடம் அந்த கலையின் ஆரம்பம் தொடங்கி வரலாறு, வளர்ச்சி நிலை, அதைப் பேணிப் பாதுகாத்தல் என்பதை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளன. பாடிக் அருங்காட்சியகம் பாடிக் கலையினைப் பாதுகாத்துக் கொண்டுவருகின்ற நிலையில், பழக்க வழக்கங்களைப் பாதுகாத்தல் என்ற அடிப்படையில் இந்தோனேசியாவின் ஒரே அருங்காட்சியகம் என்ற பெருமையினை யுனெஸ்கோ மூலமாகப் பெற்றுள்ளது. பாடிக் கலையினைப் பயிற்றுவிப்பதற்கான பயிற்சிப் பட்டறைகள் அருங்காட்சியக வளாகத்தில் மட்டுமே நடத்தப்படுவதில்லை. அனைவரையும் சென்றடையவேண்டும் என்ற நன்னோக்கில் பொது இடங்களிலும்கூட அவை நடத்தப்படுகின்றன.[1]

பார்வை நேரம்[தொகு]

இயற்கை மற்றும் செயற்கைத் துணிவகைகளைக் கொண்ட பாடிக் கலை அருங்காட்சியகம் Jl. ஜடாயு எண் 3, பஞ்சாங் வேடன், பெக்கலோங்கன் உட்டாரா, கோட்டா பெக்கலோங்கன், ஜாவா தெங்கா 51141, இந்தோனேஷியா என்ற முகவரியில் அமைந்துள்ளது. பார்வையாளர்கள் இந்த அருங்காட்சியகத்தினை காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை அனைத்து நாள்களிலும் பார்வையிடலாம். இந்த அருங்காட்சியக்ததிற்கு விடுமுறை நாள் எதுவுமில்லை. அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்வையிடுவதற்கு குறைந்தது நான்கு மணி நேரம் பரிந்துரைக்கப்படுகிறது.[2]

குறிப்புகள்[தொகு]