பிளாட்டே ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளாட்டே ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்மிசோரி ஆறு - லே பிளாட்டோ
 ⁃ உயர ஏற்றம்
942 அடி
நீளம்310 மைல்கள்

பிளாட்டே ஆறு நெப்ராசுக்கா மாநிலத்தின் முதன்மையான ஆறாகும். 310 மைல் நீளமுடைய இது இதன் துணை ஆறான வடக்கு பிளாட்டே ஆற்றின் நீளத்துடன் சேர்த்தால் தோராயமாக 910 மைல் நீளமுடையதாகிறது. இது ஒமாகாவுக்கு அருகில் மிசௌரி ஆற்றுடன் கலக்கிறது. பிளாட்டே பெரும்பாலும் சேரும் சகதியுமாகவும் ஆழம் குறைந்தும் பல அடிக்கடி மாறும் வண்டல் தீவுகளை உடையதாகவும் இருப்பதால் இது படகு போக்குவரத்திற்கு பயன்படுவதில்லை. இதன் நடு பெரும் சமவெளி வடிகாலும் கொலராடோவின் கிழக்கு புற ராக்கியின் வடிகாலும் மிசௌரிக்கு வடிகாலாக திகழ்கிறது. மேற்கு அமெரிக்காவிற்கு கிழக்கிலிருந்து குடிப்பெயர்ச்சி செய்தவர்களுக்கு பிளாட்டே முதன்மையான தடமாக விளங்கியது. ஆரகன் கலிபோர்னியா மோர்மன் போன்ற பல தடங்கள் இதிலிருந்து மேற்கிற்கு சென்றன. பிரெஞ்சு காரர்களே இவ்வாற்றை முதலில் கண்ட ஐரோப்பியர்களாவர். அவர்கள் முதலில் இந்த ஆறை நெப்ராசுக்கிர் என அழைத்தனர். அப்பகுதியில் வாழ்ந்த ஒடோ தொல்குடிகளின் அழைத்த பெயரிலிருந்து மொழி மாற்றம் செய்ததில் பிளாட்டே என்ற பெயர் வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

புவியியல்[தொகு]

வடக்கு பிளாட்டே ஆறும் தெற்கு பிளாட்டே ஆறும் கூடும் மேற்கு நெப்ராசுக்காவிலுள்ள வடக்கு பிளாட்டே நகரில் இருந்து பிளாட்டே ஆறு தொடங்குகிறது.

கொலராடோவின் 12,000 அடி உயரமுடைய மலைகள் இருக்கும் வடக்கிலுள்ள ராக்கி மலைத்தொடரில் வடக்கு பிளாட்டே ஆறு தொடங்குகிறது. இப்பகுதியில் 11,000 அடி உயரமுடைய எட்டு முகடுகள் உள்ளன. இப்பகுதியிலிருந்து 200 மைல் வயோமிங்கில் வடக்காக பயணித்து பின் 350 மைல் கிழக்கு, தென் கிழக்காக பயணித்து வடக்கு பிளாட்டே நகரை அடைகிறது. கொலராடோலிலும் வயோமிங்கிலும் இது அகலம் குறைவானதாகும். வடக்கு பிளாட்டே ஆற்றில் எட்டு அணைகள் விவசாயத்திற்கு நீர் எடுப்பதற்காக வயோமிங்கில் கட்டப்பட்டுள்ளன.

கொலராடோவின் நடு தென்பகுதியில் பேர்பிளே நகருக்கு தென்கிழக்கில் 15 மைல் தொலைவில் நடுகிளை தெற்கு பிளாட்டேவும் தென்கிளை தெற்கு பிளேட்டேவும் கூடி தெற்கு பிளாட்டே ஆறு தொடங்குகிறது. கொலராடோவின் வடகிழக்குக்கும் வயோமிங்கின் செயேனே நகரை ஒட்டிய பகுதியும், நெப்ராசுக்காவின் தென் கிழக்கு ஓரத்தின் சிறு பகுதியும் இதன் 28,000 சதுர மைல்கள் பரப்புள்ள வடிநிலமாக உள்ளது. லெவன்மைல் நீர்த்தேக்கத்தை அடைந்து அங்கிருந்து வெளியேறி 90 பாகை திரும்பி கிழக்கு, வடகிழக்காக டென்வர், கிரிலே வழியாக பயணிக்கிறது. கிரிலேவில் கிழக்கு பக்கம் திரும்பி பயணித்து வடக்கு பிளேட்டேவை அடைகிறது.

குடிநீர் தேவைக்காகவும் விவசாயத்திற்காகவும் தெற்கு பிளாட்டேவில் 20 அணைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் துணையாறுகளிலும் இதனுடன் சேரும் ஓடைகளிலும் குறைந்தது ஒரு சிறிய அணை இருப்பதால் இதன் வடிநிலம் 1,000இக்கும் மேற்பட்ட அணைகளை கொண்டுள்ளது. வறண்ட கிழக்கு கொலராடோவின் முதன்மையான குடிநீர் வழங்கும் மூலமாக இது விளங்குகிறது. தெற்கு பிளாட்டே டென்வருக்கு அமெரிக்க கிழக்கிலிருந்து குடிபெயர்பவர்களின் தடமாக விளங்கியது.

பிளாட்டேவுக்கு அதிக நீரை இதுவே கொண்டுவருகிறது.

வடக்கு பிளாட்டே ஆறும் தெற்கு பிளாட்டே ஆறும் கூடும் வடக்கு பிளாட்டே நகரில் இருந்து பிளாட்டே ஆறு தொடங்குகிறது. பெரும்பகுதி பிளாட்டே சேரும் சகதியுமாக கலங்கிய நீருடனும் ஆழம் குறைந்தும் பல அடிக்கடி இடமாறும் வண்டல் தீவுகளை உடையதாகவும் இருப்பதால் இது படகு போக்குவரத்திற்கு பயன்படுவதில்லை, சிறிய கனோ வகை படகுகள் செல்லவும் ஏற்றதாக இல்லை.

பிளாட்டே வடக்கு பிளாட்டேவிலிருந்து கொலம்பசு வரை பெரிய வில் போல் வளைந்து செல்கிறது, கீர்னி நகர் வரை கிழக்கு-தென்கிழக்காவும் கீர்னியிலிருந்து கிழக்கு வடகிழக்காவும் செல்கிறது. கொலம்பசு நகருக்கு தென்கிழக்கில் 70 மைல் நீளமுடைய லூப் ஆறு இதனுடன் இணைகிறது. அங்கிருந்து கிழக்காக பயணித்து பிரிமாண்டை அடைகிறது. பிரிமாண்டிலிருந்து தெற்கு நோக்கி பாய்ந்து சௌத் பெண்ட் என்ற இடத்திலிருந்து கிழக்கு நோக்கி பாய்ந்து லா பிளாட்டேவில் மிசௌரியுடன் கலக்கிறது. சௌத் பெண்டுக்கு 11 மைல் முன்பு கிரண்டாவுக்கு அருகில் 290 மைல் நீளமுடைய எல்க்கார்ன் ஆறு இதனுடன் கலக்கிறது. குடிப்பெயர்ச்சியின் முன்னோடிகள் ஒமாகாவுக்கு வந்து பின் பிளாட்டே ஆற்றின் வடகரை தடமான மோர்மன் தடத்தை பயன்படுத்தி அமெரிக்க மேற்கிற்கு சென்றார்கள்.

வடக்கு பிளாட்டோவையும் சேர்த்து பிளாட்டோவின் வடிநிலப்பரப்பு 90,000 சதுர மைல்களாகும். ஆண்டுக்கு சராசரியாக விநாடிக்கு 3,240 கன அடி நீர் இதில் செல்கிறது. பெரும் சமவெளியில் மிகவும் வறண்ட இப்பகுதிக்கு பிளாட்டோ பாய்கிறது. வட அமெரிக்காவில் ஒத்த நீளமுடைய ஆறுகளை விட இதில் குறைவான நீரே செல்கிறது. முன்னோடிகள் காலத்தில் 19ஆம் நூற்றாண்டில் நகைச்சுவையாக மைல் அகலமும் ஆறு அங்குல ஆழமும் உள்ள ஆறு என்று இதனை கூறுவார்கள். வறண்ட மேற்கு நெப்ராசுக்காவில் பிளாட்டேவின் கரைகள் பசுமை சோலைகளை உருவாக்கின. ஆண்டு தோறும் வலசை போகும் கொக்கு நாரை போன்ற பறவைகளுக்கு வழியில் தங்குமிடமாக பிளாட்டே கரை திகழ்ந்தது. பிளாட்டே கரையில் கிடைத்த 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட புதைபடிமம் இது வலசை போகும் நாரைகளின் தங்குமிடமாக இருந்ததை காட்டுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாட்டே_ஆறு&oldid=3845420" இலிருந்து மீள்விக்கப்பட்டது