உள்ளடக்கத்துக்குச் செல்

பிராடுவே அரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூ அம்சுட்டர்டாம் அரங்கில் த லயன் கிங், 2003

சுருக்கமாக பிராடுவே எனவும் அழைக்கப்படும் பிராடுவே அரங்கு என்பது, நியூயார்க் நகரத்தின் மன்ஹாட்டனின் பிராடுவே சாலையை அண்டியும், லிங்கன் மையத்திலும் உள்ள அரங்கப் பகுதியில் அமைந்துள்ளனவும், 500க்கு மேற்பட்ட இருக்கைகளைக் கொண்டுள்ளனவுமான 40க்கு மேற்பட்ட நாடக அரங்கங்களில் நிகழும் அரங்கியல் நிகழ்ச்சிகளுள் ஒன்றைக் குறிக்கும். இலண்டனில் உள்ள வெசுட்டு என்ட் அரங்குடன் சேர்த்து பிராடுவே அரங்கும் ஆங்கிலம் பேசும் உலகின் உயர் மட்ட வணிக அரங்காகக் கருதப்படுகிறது.

பிராடுவே அரங்குப் பகுதி நியூயார்க்குக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விரும்பிப் பார்க்கும் இடங்களில் ஒன்றாக விளங்குகிறது. 2011 ஆம் ஆண்டில் பிராடுவே நிகழ்ச்சிகளுக்காக ஏறத்தாழ 1.081 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான நுழைவுச் சீட்டுக்கள் விற்பனையானதாக "பிராடுவே லீக்" கூறியுள்ளது. 2010 ஆம் ஆண்டில் இதன் மதிப்பு 1.037 பில்லியன் டாலர்களாக இருந்தது. 2011 ஆம் ஆண்டில் 12.13 மில்லியன் மக்கள் இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துள்ளனர்.

வரலாறு

[தொகு]

நியூயார்க்கின் தொடக்ககால அரங்கு

[தொகு]

1750 ஆம் ஆண்டு வரை நியூயார்க்கில் குறிப்பிடத்தக்க அரங்கு எதுவும் இருக்கவில்லை. 1750 ஆம் ஆண்டில் நடிகர்களும், முகாமையாளர்களுமான வால்ட்டர் முரே, தாமசு கீயன் ஆகியோர் நாசூ சாலை அரங்கில் 280 பேரைக் கொண்ட அரங்க நிறுவனம் ஒன்றை உருவாக்கினர். இவர்கள் சேக்சுப்பியரின் நாடகங்களையும், "பலாடு" எனப்படும் ஒருவகை நாட்டுப்பாடல் இசை நாடகங்களையும் நிகழ்த்தி வந்தனர். 1752 ஆம் ஆண்டில், வில்லியம் அல்லம் என்பார் தனது உடன்பிறந்தாரான லூயிசு என்பவரின் தலைமையில் 12 நடிகர்களைக் கொண்ட நாடகக் குழு ஒன்றைப் பிரித்தானியாவில் இருந்து அமெரிக்காவின் குடியேற்றப் பகுதிகளுக்கு அனுப்பிவைத்தார். அவர்கள் வெர்சீனியாவில் உள்ள வில்லியம்சுபர்க்கில் ஒரு அரங்கை உருவாக்கி "வெனிசின் வணிகன்" (The Merchant of Venice), "த அனட்டமிஸ்ட்" (The Anatomist) ஆகிய நாடகங்களுடன் அதனைத் தொடக்கி வைத்தனர். 1753 ஆம் ஆண்டு கோடையில் இக்குழு நியூயார்க்குக்கு இடம் பெயர்ந்தது. அங்கே அவர்கள் நாட்டுப்பாடல் இசை நாடகங்களை நிகழ்த்தி வந்தனர். புரட்சிப் போர்க் காலத்தில் நாடகங்கள் எதுவும் நடைபெறவில்லை. பின்னர் 1798 ஆம் ஆண்டில் அரங்கு நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கின. அந்த ஆண்டில் இன்று "பார்க் ரோ" என அழைக்கப்படும் அன்றைய "சத்தாம் சாலை"யில் 2000 இருக்கைகளைக் கொண்ட "பார்க் அரங்கம்" கட்டப்பட்டது. 1826 ஆம் ஆண்டில் "போவெரி அரங்கம்" திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து வேறு பல அரங்கங்களும் உருவாயின.

1840களில், பி. டி. பர்னம் என்பவர் ஒரு பொழுதுபோக்குத் தொகுதி ஒன்றை கீழ் மன்ஹாட்டனில் நடத்தி வந்தார். 1829 ஆம் ஆண்டில் "[[நிப்லோசு கார்டன்]" திறந்து வைக்கப்பட்டு நியூயார்க்கின் முதன்மை இரவுப் பொழுதுபோக்குப் பகுதி ஆனது. 3000 இருக்கைகளைக் கொண்ட இவ்வரங்கம், பல வகையான இசை நிகழ்வுகளையும், இசை சாராத நிகழ்வுகளையும் நடத்தியது. "அசுட்டர் பிளேசு" அரங்கம் 1847 ஆம் ஆண்டில் திறந்துவைக்கப்பட்டது. 1849ல், சமூகத்தின் கீழ் வகுப்பைச் சேர்ந்த ரசிகர்கள், இவ்வரங்கில் மேல் வகுப்பினர் தம்மைக் குறைவாக நடத்துவதாகக் கருதியதால் ஒரு கலவரம் ஏற்பட்டது. "அசுட்டர் பிளேசு" கலவரம் என அழைக்கப்படும் இக் கலவரத்தின் பின்னர் நியூயார்க்கின் பொழுதுபோக்கு வகுப்பு அடிப்படையில் பிரிவு அடைந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராடுவே_அரங்கு&oldid=1368865" இலிருந்து மீள்விக்கப்பட்டது