பிரபந்த தீபம்
பிரபந்த இலக்கணம் கூறும் பிரபந்த தீபம் நூல் 97 நூற்பாக்களில் 97 பிரபந்தங்களின் இலக்கணத்தைக் கூறுகிறது. இந்த நூலின் இறுதியில் ‘அபூர்த்தி’ என்னும் குறிப்பு உள்ளதால் இந்த நூல் முற்றுப்பெறாத நூல் எனத் தெரியவருகிறது.
வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியில் 96 வகை பிரபந்தங்கள் காட்டப்பட்டுள்ளன. அது காட்டும் பரணி, உழத்திப்பாட்டு என்னும் பிரபந்தங்கள் இந்த நூலில் இல்லை. அந்த இடத்தைச் சீட்டுக்கவி, சமுத்தி என்னும் பிரபந்தங்கள் நிரப்புகின்றன.
சதுரகராதி பெருங்காப்பியம், சிறுகாப்பியம் எனக் காட்டும் இரண்டை இந்நூல் காப்பியம் என ஒன்றாக வைத்துக்கொள்கிறது. சதுரகராதி தொகை எனக் குறிப்பிடும் ஒன்றை இந்நூல் கலித்தொகை, நெடுந்தொகை, குறுந்தொகை என மூன்றாகப் பகுத்துக்கொண்டுள்ளது.
குறத்திப்பாட்டைக் கூறிய இவர் உழத்திப்பாட்டை விடுத்தமைக்கான காரணம் புரியவில்லை.
இதன் ஆசிரியர் இன்னார் என்று தெரியவில்லை.
முத்துவீரியம் என்னும் நூலின் நூற்பாக்கள் சிலவற்றை அப்படியே பயன்படுத்தியுள்ளதால் இந்த நூல் முத்துவீரியத்துக்குப் பிற்பட்டது என்பது புலனாகிறது.
இது 19-ஆம் நூற்றாண்டு நூல் என்று இந்நூலைப் பதிப்பித்த முனைவர் ச.வே.சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.
கருவிநூல்
[தொகு]- பிரபந்த தீபம், பதிப்பாசிரியர் ச.வே.சுப்பிரமணியன், தமிழ்ப்பதிப்பகம், பெருங்குடி, சென்னை 96, 1980
- தமிழ் இலக்கண நூல்கள், பதிப்பாசிரியர் ச.வே.சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், 2007