பின்முடுகு வெண்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பின்முடுகு வெண்பா என்பது பிற்கால யாப்பு முறைகளில் ஒன்று. இதனைக் கடிகைமுத்துப் புலவர் பாடல்களில் காணலாம். கடிகைமுத்துப் புலவர் பாடல்களில் 111 பாடல்கள் பின்முடுகு வெண்பா என்னும் தலைப்பிட்டு அதன் கீழ்த் தரப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. [1] இந்தப் பாடல்கள் வெண்பாவுக்கு உரிய வெண்டளை தட்டுப்பட்டுச் செப்பலோசை குன்றியனவாக அமைந்துள்ளன. செப்பலோசை குன்றி முடுகிசை கொண்டு வெண்பாவைப் போல அமைந்த பாடல்களை முடுகு வெண்பா எனப் பெயரிட்டு வழங்கியுள்ளனர்.

எடுத்துக்காட்டு[தொகு]

ஆதரவாய் என்னருகில் அஞ்சலென்று வந்துநின்று
போதரவு செய்யும்எப் போதுமே - ஓதுதமிழ்ச்
சந்ததமு மலங்கிர் தஞ்செறிந்து நன்குயர்ந்து தங்கு
விந்தை கொண்டிலங்கு செந்தில்வேல். [2]

இந்த வெண்பாவில் பின்னிரண்டு அடிகள் செப்பலோசை குன்றி முடுகி வந்துள்ளன. முடுகுதல் என்பது நெடில்-எழுத்து வராமல் ஓசை முடுகிவரப் பாடுவது.

பாடலின் பொருள்[தொகு]

வெங்கடேசு ரெட்டன் என்னும் தலைவன்மீது காதல் கொண்ட தலைவி ஒருத்தி பாடுகிறாள். அவன் முருகப்பெருமானாகவே வந்து தன்னை ஆட்கொள்வதாகப் பாடுகிறாள். அவன் ஆதரவாக என் அருகில் வந்து நிற்கிறான். அஞ்சாதே என்று சொல்லிக்கொண்டு நிற்கிறான். பின் போய்விடுகிறான். எப்போதும் இப்படிச் செய்கிறான். அவன் முருகனாகவே இருக்கிறான். முருகன் நான் ஓதும் தமிழுக்கு உரியவன். நாள்தோறும் அப்படி இருப்பவன். இலங்கி ஒளிர்பவன். நன்மையாகிய இதம் (இர்தம்) செய்பவன். என்னோடு செறிவாக நெருங்கி இருப்பவன். நன்றாக உயர்ந்து விளங்குபவன். விந்தையாக விளங்குபவன். காரணம் அவன் திருச்செந்தூரிலும் வேலை உயர்த்திக்கொண்டு விளங்குவதுதான்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. தனிப்பாடல் திரட்டு கடிகைமுத்துப் புலவர் தனிப்பாடல்கள், பக்கம் 159 முதல் 196, பாடல் எண் 191 முதல் 196
  2. வெண்பா எண் 24
"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்முடுகு_வெண்பா&oldid=1932616" இருந்து மீள்விக்கப்பட்டது