பின்னொளிர்ப்பு
ஒளியமைப்பில், பின்னொளிர்ப்பு (Backlighting) என்பது, எடுத்துக்கொண்ட பொருளைப் பின்புறமிருந்து ஒளியூட்டல் ஆகும். அதாவது, ஒளி விளக்கும், பார்ப்பவரும் எதிரெதிராக இருக்க, பொருள் அல்லது நடிகர்கள் இடையில் இருப்பர். இது பொருளின் விளிம்புகளை ஒளிரச்செய்யும் வேளை, ஏனைய பகுதிகள் இருட்டாக இருக்கும். 4-புள்ளி ஒளியமைப்பு முறையில் பின்னொளி பொருளுக்கு நேரே பின்புறம் இருக்கும்.
பின்னொளி நடிகன் அல்லது நடிகையில் தலைமுடி விளிம்பை பிரகாசமாக ஒளிரச் செய்யும். இது தலையைச் சுற்றிச் சிறிய ஒளிவட்டம் போல் இருக்கும். கதை மாந்தரின் நல்ல அல்லது தூய்மையான தனமையை வெளிப்படுத்த இந்த நுட்பம் பயன்படுத்தப்படுவது உண்டு.
பின்னொளிர்ப்பு, பொருளையும் அதன் பின்புலத்தையும் பிரித்துக்காட்ட உதவும். முன்னொளிர்ப்பு சில சமயங்களில் இருபரிமாணத் தோற்றத்தைக் கொடுக்கும். இதனால், நாடகங்களில், நடிகர்களினதும், மேடையமைப்பினதும் முப்பரிமாணத் தோற்றத்தை கூட்டிக் காட்டுவதற்காக பின்னொளிர்ப்பு முறையைப் பயன்படுத்துவர். டெர்பியின் ஜோசெப் ரைட் வரைந்த மெழுகுவர்த்தி ஒளியூட்டல் ஓவியங்களில் பின்னொளிர்ப்பைப் பயன்படுத்தி முன்புலப் பொருட்களைப் பின்புலத்திலிருந்து வேறுபடுத்தி, காட்சிக்கு ஒரு ஆழத்தைக் கொடுத்திருப்பதைக் காணலாம். (இடப்புற மேல் படம்)