பிணை வடம்
Appearance
பிணை வடம் அல்லது பிணைக் கயிறு என்பது, தனியாக நிற்கும் உயரமான அமைப்பு ஒன்றின் உறுதிப்பாட்டை அதிகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இழுவிசையைத் தாங்கக்கூடிய வடம் ஆகும். இவ்வடங்கள் பொதுவாக கப்பற் பாய்மரங்கள், வானொலிக் கம்பங்கள், காற்றாலைகள், பொதுச்சேவைக் கம்பங்கள், கூடாரங்கள் போன்றவற்றில் பயன்படுகின்றன. பிணை வடங்களினால் தாங்கப்படும் மெல்லிய, உயரமான நிலைக்குத்துக் கம்பம் பிணைவடக் கம்பம் எனப்படுகின்றது. வடத்தின் ஒரு முனை அமைப்பின் ஒரு புள்ளியிலும், மற்ற முனை நிலத்திலோ அல்லது அமைப்புக்குச் சற்றுத் தள்ளியிருக்கும் வேறொரு புள்ளியிலோ பொருத்தப்பட்டிருக்கும். சாய்வாக அமைந்த பிணைவடத்தின் இழுவிசையும், அமைப்பின் அமுக்க வலுவும் சேர்ந்து, காற்று விசை, முனைநெம்பு அமைப்புக்களின் சுமை ஆகியவற்றைத் தாங்குவதற்கு அமைப்புக்கு வல்லமையைத் தருகிறது.