பார்க்கர் சுருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோளிடை ஊடகத்தில், சூரியனின் சுழலும் காந்தப் புலத்தின் தாக்கத்தால் ஏற்படும் பார்க்கர் சுருள் வடிவத்தை இங்கே காணலாம். இதில் பார்க்கர் சுருளிடையே புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன் ஆகிய 5 கோள்கள் உள்ளன.[1]
பார்க்கர் சுருள்

பார்க்கர் சுருள் என்பது, சூரியனின் காந்தப்புலம் சூரிய மண்டலத்தில் விரிந்து செல்லும்போது உண்டாகும் வடிவத்தைக் குறிக்கும். சட்டக் காந்தத்தின் காந்தப்புலத்தின் வடிவத்தைப் போலன்றி, சூரியனின் விரிவுப் புலம் ஒரு எண்கணிதச் சுருளாக முறுக்கம் அடைந்துள்ளது. இது சூரியக் காற்றின் காந்தநீர்மவியக்கத் தாக்கத்தினால் ஏற்படுகிறது. சூரியக் காற்றையும் அதோடு தொடர்புடைய பல தோற்றப்பாடுகளையும், 1950களில், எதிர்வு கூறிய இயூசீன் பார்க்கரின் பெயரைத் தழுவியே இவ் வடிவத்துக்குப் பெயர் இடப்பட்டுள்ளது. கோளிடை ஊடகத்தில் சூரியனின் சுருள் வடிவக் காந்தப்புலத்தின் தாக்கம், சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய அமைப்பை உருவாக்குகிறது.

சூரியக் காற்றின் பார்க்கர் சுருள் வடிவம் சூரிய மண்டலத்தின் வெளிப் பகுதியில் சூரியனின் காந்தப்புலத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. சூரியனில் இருந்து 10-20 வானியல் அலகுகளுக்கு அப்பால், காந்தப் புலம் சுருள்வளைய வடிவம் உடையதாக இருக்கும். சட்டக் காந்தத்தில் இருப்பதுபோல் வடமுனையில் இருந்து தென்முனைக்குச் செல்லும் முனையச் சார்பு கொண்டதாகவோ, சூரியன் சுற்றாவிட்டல் சூரியக் காற்றோட்டத்திலிருந்து எதிர்பார்க்கக்கூடிய உள் நோக்கிய அல்லது வெளி நோக்கிய ஆரைப் போக்கமைவு கொண்டதாகவோ இருப்பதில்லை. இந்தச் சுருள் வடிவம், சூரிய மண்டலத்தின் வெளிப் பகுதியில் சூரியக் காந்தப்புலத்தின் வலிமையைக் கூட்டுகிறது.

இந்தச் சுருள் வடிவம், புல் தரைச் சுழலும் நீர் தெளிப்பானிலிருந்து வெளிவரும் நீரின் கோலத்தை ஒத்தது. சூரியக் காற்று சூரியனிலிருந்து சீரான வீதத்தில் வெளியேறுகிறது. ஆனால் இந்தச் சூரியக் காற்றை வெளியேற்றும் சூரியனின் மேற்பரப்பில் உள்ள குறிப்பிட்ட பகுதிகள் சூரியனின் சுழற்சியுடன் சேர்ந்து சுழல்கின்றன. இது அவற்றிலிருந்து வெளியேறும் சூரியக் காற்றை வெளியில் சுருள் வடிவில் அமைக்கிறது. தெளிப்பானிலிருந்து வரும் நீர்த்தாரையைப் போலன்றி, சூரியக் காற்று காந்தப் புலத்துடன் பிணைக்கப்பட்டு உள்ளது. ஆகவே, காந்தப் புலக் கோடுகள் சூரியக் காற்றுப் பொருளுடன் பிணைந்து இருப்பதால், காந்தப்புலக் கோடுகளும் சுருள் வடிவத்தைப் பெறுகின்றன.

சூரியனின் நடுக் கோட்டைவிட அதன் துருவப் பகுதிகள் குறைந்த வேகத்துடன் சுற்றும் வேறுபாடான சூரியனின் சுழற்சிக்கு பார்க்கரின் சுருளும் காரணமாக இருக்கக்கூடும். சூரியனின் காந்தப் புலம் சூரியக் காற்றை நெறிப்படுத்துகிறது. அத்துடன், சூரியக் காற்று பெரும்பாலும் துருவப் பகுதியில் இருந்து வெளியேறுவதால் உருவாகும் சுருள் வடிவம், காந்த இழுவிசையினால், ஒரு முறுக்குப் பின்னிழுவையை உண்டாக்குகிறது.

குறிப்புக்கள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

வூல்ஃபிராம் செயல்முறை விளக்கத் திட்டம் (ஆங்கில மொழியில்)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்க்கர்_சுருள்&oldid=2744798" இருந்து மீள்விக்கப்பட்டது