உள்ளடக்கத்துக்குச் செல்

பாரான் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாரான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாரான்
இயக்கம்மஜீத் மஜீதி
தயாரிப்புமஜீத் மஜீதி
ஃபவுத் நாகாஸ்
கதைமஜீத் மஜீதி
இசைஅஹ்மத் பெஜ்மான்
நடிப்புஹூசைன் ஆபிதீனி, ஷாஹ்ரா பாஹ்ராமி, முஹம்மது அமீர் நாஜி, அப்பாஸ் ரஹீமி, ஹோலம் அலி பக்ஸ்
விநியோகம்மிராமாக்ஸ் பிலிம்ஸ்
வெளியீடுசனவரி 31, 2001 (2001-01-31)
ஓட்டம்94 நிமிடங்கள்

பாரான் (Baran) என்பது ஈரானியத் திரைப்பட இயக்குநர் மஜீத் மஜீதி எழுதி இயக்கிய ஈரானியத் திரைப்படம் ஆகும். இது 2001ஆம் ஆண்டு வெளியானது. பாரான் எனும் சொல்லுக்கு ஈரானிய பாரசீக மொழியில் மழை என்று பொருள். ஈரான் தலைநகர் தெஹரானில் கட்டிட வேலை செய்யும் ஆப்கான் அகதிகளைப் பற்றிய திரைப்படம் இது. இயக்குநர் மஜீத் மஜீதிக்கு ஈரானிலும் வெளிநாடுகளிலும் பல விருதுகளைப் பெற்றுத் தந்தத் திரைப்படம் இது.

கதை

[தொகு]

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கட்டிட வேலை நடக்கும் ஒரு இடத்தில் அனைவருக்கும் தேநீர் தயாரித்துக் கொடுக்கும் வேலை செய்பவன் 17 வயதுக்காரனானலத்தீப். அங்கு வேலை செய்பவர்களுடன் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டேயிருப்பான். ஆப்கானிஸ்தான் மீது ரஷ்யா படையெடுத்தபோது ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரானுக்குள் வந்து தங்கியிருக்கும் ஆப்கானிய அகதிகள் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் இடம் அது. அங்கு வேலை செய்யும் ஒரு ஆப்கான் அகதியான நஜாப்பின் காலில் சுவர் விழுந்துவிடுவதால் அடுத்தநாள் அவரது மகன் என்று 14 வயது நிரம்பிய ரஹ்மத் என்பவன் வேலைக்கு வருகிறான். கடினமான வேலையை ரஹ்மத்தால் செய்ய முடியாததால் லத்தீப்பின் தேநீர் தயாரிக்கும் வேலையை ரஹ்மத்திற்கு கொடுத்து விட்டு லத்தீப்புக்கு கடினமான கட்டிட வேலையைக் கொடுக்கிறார் கட்டிட ஒப்பந்தக் காரர். இதனால் லத்தீப் ரஹ்மத்தின் மேல் கோபம் கொள்கிறான். பல விதங்களிலும் ரஹ்மத்திற்குத் தொல்லை கொடுக்கிறான். ஒரு நாள் ரஹ்மத் ஆண் அல்ல பெண், குடும்ப வறுமை காரணமாக ஆண் போல ஆடையணிந்து கட்டிட வேலைக்கு வருகிறாள் எனத் தெரிந்ததும் அவள் மேல் மதிப்பு கொள்கிறான் லத்தீப். அடையாள அட்டை இல்லாத ஆப்கான் அகதிகளை பணியில் அமர்த்துவது ஈரானில் குற்றம் என்பதால் ஒரு நாள் அதிகாரிகள் வந்து சோதனையிடும்போது ரஹ்மத்தை லத்தீஃப் காப்பாற்றுகிறான். அடுத்த நாள் முதல் ரஹ்மத் வேலைக்கு வராததால் அவளைத் தேடி லத்தீப் ஆப்கான் அகதிகள் வசிக்கும் இடத்திற்குச் செல்கிறான். தன்னிடமிருந்த ஒரே ஒரு மதிப்பு மிக்க பொருளான தன் அகதி அடையாள அட்டையை விற்று அந்தப் பணத்தை ரஹ்மத்தின் தந்தையிடம் கொடுப்பதற்காக அவளின் வீட்டுக்குப் போகிறான் லத்தீப். அடுத்த நாள் ரஹ்மத்தும் ரஹ்மத்தின் தந்தையும் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பிப் போகிறார்கள். முதன் முதலாக ரஹ்மத்தை மிக அருகில் பார்த்தாலும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. வீட்டைக் காலி செய்துவிட்டு வண்டியில் ஏறி ரஹ்மத் போன பிறகு மழை பெய்கிறது. ரஹ்மத்தின் செருப்பு பதிந்த பள்ளம் மழையால் நிறைகிற காட்சியுடன் படம் முடிகிறது.

நடிகர்கள்

[தொகு]
  • ஹுசைன் ஆபிதீனி
  • ஷாஹ்ரா பாஹ்ராமி
  • முஹம்மது அமீர் நாஜி
  • அப்பாஸ் ரஹீமி
  • ஹோலம் அலி பக்ஸ்

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரான்_(திரைப்படம்)&oldid=4160329" இலிருந்து மீள்விக்கப்பட்டது