உள்ளடக்கத்துக்குச் செல்

பாசி எரிபொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாசி எரிபொருள் எனபது பாசிகளை அறுவடை செய்து பின் அவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எரிபொருளைக் குறிப்பதாகும். பாசி எரிபொருளுக்கு மூன்றாம் தலைமுறை எரிபொருள் என்று பெயரும் உண்டு. இம்முறையான எரிபொருள் தயாரிப்பு சுற்றுப்புறச்சூழலுக்குத் தீங்கு விளைக்காமல் நிலைத்த மேம்பாடுடன் தயாரிக்கப்படுகின்றது.

எரிபொருளுக்காகப் பெட்ரோலியத்தைத் தாண்டி வேறு ஊற்றுக்களை நோக்கி ஆய்வுகள் சென்று கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் இதற்கான ஆய்வுகள் பல இடங்களில் நடந்து வருகின்றன. நீர்வாழ் உயிரினமான பாசிகளில் (ஆல்கே/Algae) இருந்து சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காமலும், அதே சமயம் பொருளாதார ரீதியில் கட்டுபடியாகக்கூடியதுமான விலையிலும் புத்தம்புதிய உயிரி டீசலைத் தயாரித்துள்ளார்கள் வேதியியலாளர்கள்.

அண்மையில் அமெரிக்க வேதியியல் அமைப்பின் 237வது தேசியக் கூட்டத்தில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. பாசிகளில் இருந்து உயிரி டீசல் தயாரிக்கும்போது இதுவரை உற்பத்திச் செலவு மட்டுமே தலையாய பிரச்சினையாக இருந்து வந்தது. ஆனால் தற்போதைய கண்டுபிடிப்பின்படி உற்பத்திச்செலவு 40 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது.

உலகெங்கிலும் உள்ள கடல்கள், ஏரிகள், ஆறுகள் இவற்றிலெல்லாம் பாசிகள் அபரிமிதமாகக் கிடைப்பதால் மூலப்பொருள் தட்டுப்பாடு இருக்காது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உற்பத்திமுறையின்படி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கழிவுநீர் வெளியாவதில்லை. இந்த புதிய முறைக்கு “solid catalyst continuously flowing fixed-bed” method என்று பெயரிட்டுள்ளார்கள். மேலும் உற்பத்திக்குக் குறைந்த இடப்பரப்பே போதுமென்பதால் தொழிற்சாலையின் அளவும் சிறியதாக இருக்கும்.

உயிரி டீசல் தயாரிப்பில் தற்போது திரவ வினையூக்கி பயன்படுத்தப்படுகின்றது. புதிய கண்டுபிடிப்பின்படி திடநிலையிலான வினையூக்கி பயன்படுத்தப்படும். திடநிலையிலான வினையூக்கிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தமுடியும் என்பதும், உயிரி டீசல் தயாரிப்பினைத் தொடர்ச்சியாகச் செய்யமுடியும் என்பதும் கூடுதல் சிறப்பு. பழைய முறையில் உயிரி டீசல் உற்பத்தி செய்யும்போது திரவ வினையூக்கிகளை அமிலத்துடன் நடுநிலையாக்கல் வினைசெய்து பிரித்தெடுக்கவேண்டி இருந்தது. இதனால் உற்பத்தியை இடையிடையே நிறுத்த வேண்டி இருந்தது.

புதிய முறை தொடர்ச்சியான உற்பத்தி முறை. ஓர் ஏக்கரில் விளைந்த சோயா பீன்களில் இருந்து தயாரிக்கப்படும் பயோ டீசலைக்காட்டிலும் 300 முதல் 400 மடங்கு அதிகமான உற்பத்தியைப் புதிய முறையில் ஈட்ட முடியும் என்கிறார் இதுபற்றிய அறிக்கையை அளித்த முதன்மை ஆய்வாளர் டாக்டர் பென் வென்.

பாசி எரிபொருளின் கூடுதல் நன்மைகள்

[தொகு]
  • முதல் இரண்டு தலைமுறை மாற்று எரிபொருள் போலன்றி, பாசிகளை வளர்க்க உணவு மற்றும் பயிர்களை வளர்க்க உதவாத நிலங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • பாசிகள் வளரும்போது கார்பன் டை ஆக்சைடு நுகரப்படும் என்பதால் உலக வெப்பேற்றத்திற்கான காரணங்கள் குறையும்.
  • பாசி எரிபொருளின் மூலக்கூறு அமைப்புக்கள் பெட்ரோலியத்தின் எரிபொருளினை ஒத்து இருக்கும் என்பதால் இந்தப் புதிய எரிபொருளைப் பயன்படுத்த வண்டிகளில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியிராது.
  • பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் என்று பலவகையான எரிபொருள்களையும் பாசிகளின் வழியே தயாரிக்க இயலும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசி_எரிபொருள்&oldid=2742546" இலிருந்து மீள்விக்கப்பட்டது