பாகாஜதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புரட்சித் தளபதி பாகாஜதீன் (1879-1915) இந்திய விடுதலைக்காக போராடியவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர். வீரம் மிக்கவர்.[1]

இளமைக் காலம்[தொகு]

இவர் 1879 டிசம்பர் 5 ஆம் தேதி உமேஷ் சந்திர முதர்ஜி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜதீந்திர நாத் முகர்ஜி.

இளம் வயதிலேயே, வங்காள மாநிலம் நாதியா மாவட்டத்தின் கோயா கிராமத்தில் உள்ள கோடுய் நதிக்கரைப் புதரில் மறைந்திருந்த ஒன்பது அடி நீள வங்கப் புலி இவர் மீது பாய்ந்தது. இருபது நிமிடம் அதனுடன் போராடி சிறு கத்தியின் உதவியுடன் அதனைக் கொன்றதோடு புலி கடிபட்ட காலை வெட்ட வேண்டும் என்று மருத்துவர் கூறியதற்கு சம்மதிக்காமல் மனோபலத்தால் குணமடைந்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் ’புலியைக் கொன்றவன்’ என்ற பொருளில் பாகா ஜதீன் என்று மக்கள் இவரை அழைத்தனர்.

ராஷ்பிகாரி போஸ் போன்ற தலைவர்களின் பேச்சுக்கள் , கதர்க்கட்சி வீரர்களின் போராட்டங்கள், சுவாமி விவேகானந்தரின் கொள்கை முழக்கங்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட ஜதீன் அரவிந்தரின் இயக்கத்தில் அவருக்கு வலது கரமாக செயல்பட்டார். அதன்பின் அனுசீலன் சமிதி என்ற புரட்சி இயக்கத்தை உருவாக்கி செயல்பட்டார்.

தாம் சம்பந்தப்படாத வழக்கில் சிக்கவைக்கப்பட்டு ஓராண்டு சிறையில் சித்திரவதை அனுபவித்த பின்னர் 1911 பிப்ரவரி 21 இல் விடுதலையாகி வெளியே வந்தார்.

டார்ஜிலிங்கிற்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, ஒரு முதியவருக்கு குடிக்க தண்ணீர் கேட்டு தவித்துக்கொண்டிருந்ததை கண்டு அவருக்கு அடுத்த நிலையத்தில் தன்னிடமிருந்த பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்தார். அப்போது சிறிது நீர் மற்றவர்களை கேலி செய்து கொண்திருந்த ஆங்கிலேய இராணுவ அதிகாரிகள் நால்வரில் ஒருவர் மேல் சிந்த அந்த அதிகாரி தடியார் ஜதீனை அடித்தார். அதை பொருட்படுத்தாமல் பெரியவரிடம் சென்று அருந்துவதற்கு தண்ணீரைக் கொடுத்துவிட்டு கீழே இறங்கி தன்னை அடித்த அதிகாரியின் கையை முறுக்கினார். அவருக்கு உதவ வந்த மற்ற மூன்று அதிகாரிகளும் இவர் ஒருவராலேயே அடித்து துவம்சம் செய்யப்பட்டு நடைபாதையிலேயே துவண்டு விழுந்தனர்.

இதன் காரணமாக தொடரப்பட்ட வழக்கில், ஆங்கிலேய நீதிபதி ஒரே ஓர் இந்தியன் நான்கு ஆங்கிலேயரை அடக்கினார் என்ற செய்தி வெளியே தெரிந்தால் இந்தியர்களுக்கு தன்னம்பிக்கையும் துணிவும், ஆங்கிலேயருக்கு இந்தியர் மேல் அச்சமும்,அவமானமும் ஏற்படும் என்று உணர்ந்து வழக்கை தள்ளுபடி செய்தார்.

உதவி நூல்[தொகு]

  • சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்; வி.வி.வி.ஆனந்தம்; கங்கை புத்தகநிலையம்

மேற்கோள்கள்[தொகு]

  1. சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்; வி.வி.வி.ஆனந்தம்; கங்கை புத்தகநிலையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகாஜதீன்&oldid=2712034" இலிருந்து மீள்விக்கப்பட்டது