பழங்குடியினர் ஆய்வு நிறுவன அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழங்குடியினர் ஆய்வு நிறுவன அருங்காட்சியகம்
Tribal museum Bhubaneswar.jpg
அருங்காட்சியக நுழைவாயில்
நிறுவப்பட்டது1953
அமைவிடம்அலகு - VIII, சி.ஆர்.பி.எப்.சதுக்கம், நயாபள்ளி, என்.எச்.5, புவனேஸ்வர், ஒடிசா, இந்தியா
இயக்குநர்ஏ.பி. ஓடா
உரிமையாளர்இந்திய அரசு
வலைத்தளம்Scheduled Castes & Scheduled Tribes Research & Training Institute


பழங்குடியினர் ஆய்வு நிறுவன அருங்காட்சியகம் (Tribal Research Institute Museum) என்பது பழங்குடியினர் கலை மற்றும் கலைப்பொருட்களைக் கொண்ட அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சிகம் இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வரில் உள்ளது. இது பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வளாகத்திற்குள் உள்ளது. இது பழங்குடியினர் அருங்காட்சியகம் என்று பிரபலமாக அறியப்படுகிறது. இதற்கு கருத்தியல் ரீதியாக மனிதனின் அருங்காட்சியகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.[1][2] இது உண்மையான பழங்குடி குடியிருப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளது. மாநிலத்தின் பழங்குடி பாரம்பரியத்தினை வெளியுலகிற்குத் தெரியப்படுத்தும் வகையில் இது பழங்குடி கைவினைஞர்களால் உருவாக்கப்பட்டது ஆகும்.[3] பழங்குடியினரின் கலைப்பொருட்கள் மற்றும் பொருள்கள் ஆகியவற்றைக் கொண்ட பிரிவுகள் இந்த அருங்காட்சியகத்தில் அமைந்துள்ளன. இவை ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியினரைப் பற்றிய நன்கு ஆய்வு செய்யப்பட்ட, ஆவணப்படுத்தப்பட்ட பண்பாட்டு வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது ஒரு பல்கலைக்கழக பேராசிரியர் பதவிக்கு இணையான பொறுப்பில் இருக்கும் ஒரு இயக்குநரால் தலைமை வகிக்கப்படுகிறது.இந்த அருங்காட்சியகத்தின் நிர்வாகக் கட்டுப்பாடு ஒடிசா அரசாங்கத்தின் எஸ்.டி, எஸ்சி, சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையிடம் உள்ளது.

இந்த அருங்காட்சியகம் பட்டியல் பழங்குடியினர் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (எஸ்.சி.எஸ்.டி.ஆர்.டி.ஐ) ஒருங்கிணைந்த பகுதியாக செயலாற்றி வருகிறது. இது மனித இனங்களை உள்ளடக்கிய அறிவை மொத்தமாக பரப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.[4]

வரலாறு[தொகு]

கருத்தியல் ரீதியாக "மனிதனின் அருங்காட்சியகம்" என்று பெயரிடப்பட்ட இந்த அருங்காட்சியகம் 1953 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[5] 1986 ஆம் ஆண்டில், சந்தால், ஜுவாங், கடாபா, சோரா மற்றும் காந்தா சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 5 பழங்குடி குடிசைகள் இந்த வளாகத்தில் கட்டப்பட்டன. மற்றும் பார்வையாளர்களுக்காக இங்கு பழங்குடியினரின் கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. 5 மார்ச் 2001 ஆம் நாளன்று, புதிய அருங்காட்சியக கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

சிறப்புகள்[தொகு]

பழங்குடியினர் ஆய்வு நிறுவன அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருள்களில் ‘ஷாமான்‘ மற்றும் சாரோவைச் சேர்ந்த ‘மிருகம்‘, கோயாவைச் சேர்ந்த நடனம் ஆடும்மகளிர், பாரம்பரிய ஆடையுடன் காணப்படுகின்ற போண்டா மற்றும் டோங்கிரியா கோந்த் பகுதியைச் சேர்ந்த மகளிர், மற்றும் பழங்குடியினர் பள்ளி மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் உள்ளிட்டவை காணப்படுகின்றன. ஒடிசாவின் மக்கள் தொகையில் பெரும்பங்கில் பழங்குடியினர் காணப்படுகின்றனர். 2001 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 21.13 விழுக்காட்டினர் பழங்குடியினர் ஆவர். ஒடிசாவின் மொத்த மக்கள் தொகையில் 81.45 லட்சம் பேர் பழங்குடியினர் ஆவர். பழங்குடியினர் அல்லாதோர் அவர்களுக்கு அருகிலேயே பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவருகின்றனர். அதன் காரணமாக அவர்களது பண்பாட்டில் பழங்குடியினரின் பாரம்பரியம் பண்பாட்டின் தாக்கத்தைக் காண முடியும். இந்த வகையில் ஒடிசா ஒரு ஒருங்கிணைந்த பண்பாட்டைக் கொண்டதாகக் கருதலாம். இந்துக்களின் உயர்ந்த கடவுளாகக் கருதப்படுகின்ற பகவான் ஜெகந்நாதர், பழமையான பழங்குடியினரான சவராக்கள் அல்லது சாராக்களின் கடவுளாகக் கருதப்பட்டு வருகிறார். ஆதிவாசிகளின் மரத்தால் அவர்களால் பாதி நிலையில் செதுக்கப்பட்ட தெய்வங்கள் பகவான் ஜெகந்நாநதர், பாலபத்ரர் மற்றும் சுபத்ரா ஆகிய தெய்வ உருவங்களுடன் மிகவும் ஒத்த நிலையில் அமைந்துள்ளன.[6]

அரங்குகள்[தொகு]

அருங்காட்சியகத்தில் ஐந்து அரங்குகள் உள்ளன. அவற்றில் காட்சிப்பொருள்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[7] -

 • முதல் அரங்கம் - தனிப்பட்ட அலங்காரங்கள்
 • இரண்டாம் அரங்கம் - தனிப்பட்ட நபர்கள் பயன்படுத்திய பொருள்கள், கலைப்பொருள்கள், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள்
 • மூன்றாம் அரங்கம் - வேட்டையாடுதல் மற்றும் மீன் பிடித்தலுக்குத் தொடர்பான பொருள்கள் மற்றும் குற்றம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஆயுதங்கள்
 • நான்காம் அரங்கம் - வீட்டுப் பொருள்கள் மற்றும் விவசாயப் பொருள்கள்
 • ஐந்தாம் அரங்கம் - நடனம், இசைக்கருவிகள் மற்றும் தோக்ரா பொருட்கள்

அமைவிடம்[தொகு]

பழங்குடியினர் ஆய்வு நிறுவன அருங்காட்சியகம், கோபபந்து நகர், புவனேஸ்வர், ஒடிசா 751008 என்ற முகவரியில் அமைந்துள்ளது.[6]

குறிப்புகள்[தொகு]

 1. "Museum of Tribal Arts & Artifacts". TripAdvisor. 24 February 2015 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Tribal Museum / Museum of Man". WebIndia123. 24 February 2015 அன்று பார்க்கப்பட்டது. External link in |website= (உதவி)
 3. "Scheduled Castes & Scheduled Tribes Research & Training Institute, Bhubaneswar". ST, SC, Minorities, and Backward Classes Welfare Department, Government of Odisha. 21 February 2013 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Scheduled Castles and Scheduled Tribes Research and Training Institute". India. 24 February 2015 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Odisha ST&SC Development Minister inaugurated National Tribal Art & Craft Mela-2014". orissadiary.com. 20 November 2014. 5 பிப்ரவரி 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 February 2015 அன்று பார்க்கப்பட்டது. External link in |website= (உதவி)
 6. 6.0 6.1 Tribal Cultural Heritage in India Foundation
 7. "Scheduled Castes & Scheduled Tribes". Scheduled Castes & Scheduled Tribes Research & Training Institute, SC & ST Development Department, Government of Odisha. 23 ஜனவரி 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 January 2016 அன்று பார்க்கப்பட்டது.