பறை (சொல்விளக்கம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பறை எனும் சொல் ஒரு தூய தமிழ் சொல்லாகும். இச்சொல் பறை எனும் பெயரில் ஒரு இசைக் கருவிக்கான பெயர்ச்சொல்லாக பயன்பட்டாலும், வினைச்சொல்லின் பயன்பாடுகளும் உள்ளன. குறிப்பாக இச்சொல்லினதும், இச்சொல் தொடர்பான சொற்பயன்பாடுகளும் யாழ்ப்பாணத் தமிழர் பேச்சு வழக்கில் இன்றும் உள்ளனவைகளாகும்.

வினைப் பயன்பாடுகள்[தொகு]

  • பறை = சொல்
  • பறைதல் = சொல்லுதல்
  • பறைஞ்சன் = சொன்னேன்
  • பறைஞ்சவன் = சொன்னவன் (சொன்னான்)
  • பறையாதே = சொல்லாதே , பேசாதே
  • பறையிறான் = சொல்கிறான்
  • பொய் பறையாதே = பொய் சொல்லாதே
  • அவன் என்ன பறஞ்சவன்? = அவன் என்ன சொன்னான்?
  • அவனிட்ட பறையாதே = அவனிடம் சொல்லாதே

இவ்வாறு பறை எனும் வேர்ச்சொல்லுடன் தொடர்புடைய பலசொற்கள் அல்லது பலச்சொல்லாடகள் உள்ளன. அவை இன்றும் யாழப்பாணத்தவர் பேச்சு வழக்கில் அழியாமல் இருப்பது யாழ்ப்பாணப் பேச்சு தமிழின் தனிச் சிறப்பாகும். தமிழுடன் நெருங்கிய மரபுத் தொடர்பு கொண்ட கிளைமொழியான மலையாளத்திலும் இச்சொல் புழக்கத்தில் உள்ளது.

வரலாறு[தொகு]

பழங்காலத் தமிழர் வாழ்வியலில் செய்தியூடகம் என்று ஒன்று இல்லாத காலகட்டத்தில், ஒரு நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை, அறிவித்தல்களை, அரசக் கட்டளைகளை ஊர் ஊராகச் சென்று சொல்லுதல் "பறைதல்" என்றும், அவ்வாறு ஊர் ஊராகச் சென்று சொல்பவர் "பறையர்" என்பதும் காரணப்பெயர்களாகும். காலப்போக்கில் தமிழர் வாழ்வியலின் சாதிய வேறுபாடுகளின் அடிப்படையில் பறை, பறையர் எனும் தூயத் தமிழ் சொற்கள் தொழில் நிலையை குறிக்கும் பெயராக மாற்றம் பெற்றுள்ளன.

அதேவேளை ஊரூராகச் சென்று செய்திகள், அறிவித்தல்கள், அரச மற்றும் நிர்வாகக் கட்டளைகள் போன்றவற்றை பறைபவர் (சொல்பவர்), தற்போதைய தற்கால ஒலிப்பெருக்கி போன்ற சாதனங்கள் இல்லாத நிலையில் உரத்த குரலில் சத்தமிட்டே பறைய வேண்டியக் கட்டாயச் சூழல் இருந்திருக்கும் என்பதை இன்றையச் சூழ்நிலையில் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். அத்துடன் உரத்தக் குரலில் சத்தமாகப் பறைபவர் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு கருவியின் துணைக்கொண்டு, அதனை ஓங்கி அடித்து ஒலியெழுப்பி, தான் கொண்டு வந்த செய்தியை, அல்லது அறிவித்தலை மக்களுக்குப் பறைவார்.

இதனால் காலப்போக்கில் "பறை" எனும் வினைச்சொல், பறையும் பொழுதும் மக்களை ஈர்ப்பதற்கு பயன்படுத்திய ஒலியெழுப்பிய கருவிக்கான பெயர் சொல்லாக நிலைத்துவிட்டது. அத்துடன் தற்போதைய தற்கால ஒலிப்பெருக்கி போன்ற சாதனங்கள் இல்லாத நிலையில், உரத்தக் குரலில் சத்தமிடுவதால் அல்லது சத்தமிட்டு பறையும் தொழிலை கொண்டிருப்பவர் என்பதால், பறைபவர் ஏனைய தமிழ் சமுதாயக் கட்டமைப்பின் கீழ் ஒரு தரக்குறைவான தொழில் நிலையாகத் தோற்றம் பெற்றது எனலாம்.

இசைக்கருவி[தொகு]

இந்த பறை எனும் சொல் ஒரு இசைக்கருவிக்கான பெயராகவும், ஒரு சாதிய பெயராகவும் மட்டுமே பெரும்பாலும் நிலைத்துவிட்டன. குறிப்பாக தென்னிந்தியாவில்.

பிற பயன்பாடுகள் -காரணம்[தொகு]

ஒரு செய்தியை அல்லது ஒரு தகவலை ஒருவரிடம் சொன்னால், அவர் அதனை (இரகசியமாகப் பேணாமல்) எல்லா இடங்களிலும் சொல்லித் திரிபவரானால், அவரை "பறை", "பறையன்", "பறையன் போன்று" எனும் அடைமொழிகளுடன் பேசுவதும் மேற்குறித்த பறை எனும் வினைச்சொல்லின் பயன்பாட்டின் பின்னனியே அடிப்படைக் காரணங்களாகும்.

இலங்கை சிங்களவர் மத்தியில்[தொகு]

இச்சொல்லின் பயன்பாடு இலங்கை சிங்களவர் மத்தியில் சாதியப் பெயராகவும், இரகசியம் பேணாதவரை இடித்துரைக்கும் சொல்லாகவும் பயன்படுகிறது.

சில தமிழ் சிங்கள பயன்பாடுகள்

தமிழ் சிங்களம்
பறையன் பறையா
பறையர் பறையோ
பறையன் போன்று பறையா வகே
பறை + பறை +

இவ்வாறு இன்றைய தமிழர் மத்தியில் தற்போது பயன்படும் இச்சொல்லின் பெயர்ச்சொல் பயன்பாடுகள் அனைத்தும், இலங்கை, சிங்களவர் மத்தியில் பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக தமிழர் பயன்பாட்டில் காணப்படும் பறை + தொடர்பான அத்தனை இழிச்சொல் பயன்பாடுகளும் அதே பொருளில் அவர்கள் பயன்பாட்டிலும் உள்ளன.

இங்கே "வகே" எனும் சொல்லும், தமிழரின் பேச்சு வழக்கில் புழங்கும் "வகை" எனும் சொல்லுடன் தொடர்புடையது.

சிங்கள மருவல் பயன்பாடுகள்[தொகு]

அதேவேளை "பறை" எனும் இசைக்கருவியின் பெயர் "பெறை" அல்லது "பெற" என்று மருவி (பறை > பெறை) வழங்கப்படுகிறது. சாதியர் பெயரான "பறையர்" எனும் தமிழ் சொல், சிங்களத்தில் "பெறவா" என்றும் அழைக்கப்படுகின்றது. அத்துடன் இந்த "பெறை" இசைக்கருவியை அடிப்பவர்களை "பெறக்காரயா" என்று அழைப்பர்.

தமிழ் சிங்களம்
பறை > பறை > பெறை, பெற
பறையர் பறையோ > பெறவா
பறை அடிப்பவர் பெறக்காரயா

தமிழ் பேச்சு வழக்கில் உள்ள சொற்கள் சிங்களப் பேச்சு வழக்கில் மருவி பயன்படுபவைகளில் இந்த "பறை" எனும் சொல்லும் அதனுடன் தொடர்புடையச் சொற்களும் அடங்கும். அத்துடன் சிங்களப் பேச்சு வழக்கில் "பெறக்காரயா" என்பதில் உள்ள "காரயா" எனும் பின்னொட்டும் தமிழர் வழக்கில் உள்ள "காரன்" எனும் பின்னொட்டு முறைமையின் மருவலே ஆகும்.

தமிழ் பேச்சு தமிழ் பேச்சு சிங்களம்
மனிதன் + காரன் + காரையா
கடலை விற்பவர் கடலைக்காரன்/கடலக்காரன் கடலக்காரயா
கடை உரிமையாளர் கடைக்காரன்/கடக்காரன் கடக்காரயா/கடேக்காரயா
தேங்காய் விற்பவர் தேங்காய்காரன் பொல்காரயா
பொய் பேசுபவர் பொய்காரன் பொறுகாரயா

இவ்வாறான பயன்பாட்டின் போது அநேகமான முதல் சொல் வேறுபட்டிருந்தாலும் பின்னொட்டு முறை தமிழில் மருவலாகவே உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பறை_(சொல்விளக்கம்)&oldid=3073367" இருந்து மீள்விக்கப்பட்டது