பயனர்:Yahrliny/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்கப்பூர் தேசியக் காட்சியகம் (National Gallery Singapore)

யாழினி, உயர்நிலை 2, கிரசண்ட் பெண்கள் பள்ளி 

ஒரு நாட்டின் தோற்றத்தையும் அதன் தொன்மைச் சிறப்பைப் பற்றிக் கூறுவது வரலாறாகும். ஆகவே, இவ்வரலாற்றோடு தொடர்புடைய இடங்கள் ஒவ்வொரு நாட்டிலும் பேணிக் காக்கப்படுகின்றன. சிங்கப்பூரிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்றாகச் சிங்கப்பூர் தேசியக் காட்சியகம் விளங்குகிறது. சிங்கப்பூரின் சிறப்பையும் மரபையும் சார்ந்த விழுமியங்கள் வலுபெறச் செய்ய உதவுவதே அதன் குறிக்கோளாகும்.

நம் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகத் இது திகழ்கிறது. சிங்கப்பூர் தேசியக் காட்சியகம் மக்களிடையே கலைவுணர்வை வளர்க்கும் பணியைத் தன்னகத்தே கொண்டு அமைகிறது. உலகிலேயே மிகப்பெரிய தேசிய காட்சியகமாக அமைந்துள்ள தேசியக் காட்சியகத்தில் சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்காசிய படைப்புகள் இருக்கின்றன. மேலும், இங்கே நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தைச் சார்ந்த கலைப்படைப்புகளும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள.

சிங்கப்பூர் தேசியக் காட்சியகம் நவம்பர் 24-ஆம் தேதி 2015-இல் திறக்கப்பட்டது. இது பல்வேறு ஊடகங்கள் மூலம் கலையையும் கலாச்சாரத்தையும் புரிந்துகொண்டு பாராட்டு வழங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்தேசியக் காட்சியகம் சிங்கப்பூரின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை ஆசிய கலாச்சாரங்களுடன் ஒன்றிணைப்பதில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு வருகிறது. மேலும், இது மக்களைக் கவரும் வகையில் அமைவதோடு தென்கிழக்காசிய கலைப் படைப்புகளையும் ஊக்குவிக்கிறது. அதுமட்டுமின்றிச் சிங்கப்பூர் தேசியத் தொகுப்பு கலை வெளிப்பாட்டிற்கும் கற்றலுக்கும் ஒரு சிறந்த தலமாகத் திகழ்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

அத்துடன் இக்காட்சியகம் மற்ற நிறுவனங்களுடன் கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவதால் அறிவுப் பரிமாற்றம் எளிதாகின்றது. இது சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்காசியாவில் காட்சிக்கலை வளர உதவியளித்து வருகிறது. மற்றும் இது ஊடகங்கள் மூலமும் கலையைப் பற்றி பார்வையாளர்களுக்குத் தெரிவிக்கின்றது.

மற்றத் துறைகளில் தன்னிகரில்லாத இடத்தைப் பிடித்துள்ள சிங்கப்பூர், கலைத்துறையிலும் சிறந்து விளங்க எண்ணியதால் நம் அரசாங்கம் தேசிய காட்சியகத்தை உருவாக்கியுள்ளது. அதன் விளைவாக மக்களிடையே கலையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசியக் காட்சியகத்தில் கலைக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சிங்கப்பூரர்கள் கலை நிகழ்ச்சிகளிலும் கலைப் போட்டிகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். இன்னும் சிலர் கலைத்துறையிலும் பணிபுரிகின்றனர்.

‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பது போல சிங்கப்பூர் சிறு நாடாக இருந்தாலும் அது கலைத்துறையில் பீடு நடை போட்டு வெற்றி பெற்று வருகிறது. பழைய உச்சநீதி மன்றமும் நகர மண்டபமும் இருந்த இடத்திலேயே இன்றைய சிங்கப்பூர் தேசியக் காட்சியகம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய நகர மண்டபத்தைப் போல இன்றைய சிங்கப்பூர் தேசியக் காட்சியகம், சிங்கப்பூர் வரலாற்றில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைச் சித்தரித்துக் கண்காட்சிகளாகப் பார்வைக்கு வைத்துள்ளது.

சிங்கப்பூர் தேசியக் காட்சியகம், சிங்கப்பூரின் கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளிப்பதோடு அதன் வளர்ச்சியையும் கலைப் படைப்புகளின் மூலம் சித்தரித்து, கண்காட்சியில வைக்கின்றது.

“பலாப் பழத்தில் ஈக்கள் மொய்ப்பது போல்” பல நாடுகளிலிருந்தும் சுற்றுப்பயணிகள் நம் நாட்டிற்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். சின்னஞ்சிறு தீவாக இருந்தாலும் உலகத்தோரின் கவனத்தை ஈர்க்கும் சிங்கப்பூர் முன்பு, ஒரு மீன்பிடி கிராமமாக இருந்தது என்றால் அது வியக்கத்தக்கதன்றோ! மூன்றாம் உலக நாடாக இருந்த சிங்கப்பூர் முதல் உலக நாடுகளின் வரிசையில் இடம்பிடித்துள்ளது. குடிசைகளை அகற்றி வானுயர்ந்த கட்டடங்கள் உருவாக்கி பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. சிங்கப்பூரின் இத்தகைய வளர்ச்சியைச் சுற்றுப்பயணிகள் அறிந்துகொள்ள தேசியக் காட்சியகமே சிறந்த இடம் என்பது வெள்ளிடைமலை.

சிங்கப்பூர் தேசியக் காட்சியகம் மாணவர்களுக்குக் கண்காணிப்பு மற்றும் பொருள் விளங்கும் திறன்களை வளர்க்க கற்றல் திட்டங்களை வழங்குகிறது. மேலும், இத்திட்டங்கள் மாணவர்களிடையே கலை மீது ஆர்வம் வளர உதவுகின்றன. இவற்றைப் போன்ற நிகழ்ச்சிகள் மாணவர்கள் சிங்கப்பூரின் வரலாறு, அதன் வளர்ச்சி, கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றைப் பற்றிக் கற்றுக்கொள்ள வாய்ப்புகளாக விளங்குவது மிகவும் சிறப்புக்குரியதாகும்.

நாம் ‘நுனிப்புல் மேய்தாற் போல்’ கலையை மேலோட்டமாகப் பார்க்கக்கூடாது. மரத்தின் வேர் மண்ணில் ஊன்றி இருப்பது போல் கலையை மக்கள் மத்தியில் மிகவும் ஆழமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே சிங்கப்பூர் தேசியக் காட்சியகம் பேணிக் காக்கப்படுகின்றது. ஒரு விருட்சம் போல் சிங்கப்பூரின் கலையை வளர்க்க இதன் பங்கு இன்றியமையாதது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, சிங்கப்பூரின் அடையாளமாக விளங்கும் தேசியக் காட்சியகத்திற்கு அடிக்கடி சென்று நம்மால் முடிந்தவரை பயனடைவோம்!

(முற்றும்) 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Yahrliny/மணல்தொட்டி&oldid=2250612" இலிருந்து மீள்விக்கப்பட்டது