பயனர்:Vishnu Vardni Anandan/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்கையில் இந்து வழிபாடு[தொகு]

சிங்கையில் 5.1% விழுக்கட்டினர் இந்து மதத்தைப் பின்பற்றுகிறார்கள். இந்தியாவிலிருந்து வந்த வழிப்பாட்டு முறைகள், விழாக்கள், இங்கும் கொண்டாடப்படுகின்றன. சிங்கையில் இந்து மதம், ஏழாம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டதாக கூறப்படுகின்றது. 

குடிப்பெயர்ந்த இந்தியர்கள், சிங்கப்பூர் இந்தியர்கள், ஏன் மற்ற இனங்கள், நாடுகளைச் சேர்ந்தவர்கள் கூட இந்து மத வழிப்பாட்டினை பாராட்டி பின்பற்றுவது சிங்கப்பூரையே சாரும் ஒரு சிறப்பாகும். கோயில்களில் மட்டுமல்லாது வீடுகளிலும் சிங்கப்பூர் இந்துக்கள் இறைவனை வழிப்படும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.  

கோயில் வழிபாடு                                                                                                               [தொகு]

சிங்கையில் உள்ள பெரும்பாலான கோயில்களில், உருவ வழிபாடுதான் நடைபெறுகின்றது. ஒரு மூர்த்தியை பிரதான தெய்வமாகக் கொண்டு இக்கோயில்கள் அமைக்கப்படுகின்றன. பிரதான ஆண் தெய்வங்கள் பெரும்பாலும் தங்கள் துணைவியாருடனும் பெண் தெய்வங்கள் தனித்தும் காட்சியளிப்பர். சிங்கையில் உள்ள 29 ஆலயங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளவை, அம்மன் கோயில்களே. சிங்கையில் பெரும்பாலானக் கோயில்கள் திராவிடக் கட்டிடக்கலையை பின்பற்றிக் கட்டப்பட்டவை.  

சிங்கையில் திராவிடக் கட்டிடக்கலை [தொகு]

திராவிடக் கட்டிடக்கலை என்பது தெற்கிந்தியாவில் மிக பிரபலமாகப் பின்பற்றப்பட்ட ஒரு ஆலய கட்டிட முறை ஆகும். மூவேந்தர்களால் முக்கியமாக பின்பற்றப்பட்ட இக்கலை, தென்கிழக்காசியாவிற்கும் பரவியது. இராஜராஜச் சோழனின் மகனான ராஜேந்திர சோழன், 1025 ஆம் ஆண்டில் ஶ்ரீவிஜயா பகுதிக்குப் படையெடுத்து வந்தான். இந்த ஆக்கிரமிப்பிற்குப் பிறகு, தென்கிழக்காசியாவில் தமிழர்களின் தாக்கங்கள் ஏற்பட்டன. ஆகவே தான் சிங்கையில் அந்த காலத்திலேயே திராவிட கட்டிடக்கலையில் பல கோயில்கள் அமைக்கப்பட்டன. 1010 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலும் இதற்கு ஒரு காரணமாகும். இந்துக்கள் பலரிடையே இக்கோயில் மிக பிரபலமடைந்தது. ஆகவே புலம்பெயர்ந்துவந்த இந்தியர்கள் இந்த கலையையே பின்பற்றினர். 

இந்த கட்டிட முறைப்படி, சிங்கையிலுள்ள பல கோயில்களில், கவின்மிகு கோபுரங்கள், மண்டபங்கள், தூண் மண்டபங்கள் ஆகியவைக் காணப்படுகின்றன. இன்று இன்னும் நவீன வசதிகளோடு கோயில்கள் உள்ளன. கல்யாண மண்டபங்கள், நிகழ்ச்சி மண்டபங்கள், உணவக வசதிகள் போன்றவையோடு சிங்கையில் பல கோயில்கள் கட்டப்படுள்ளன. மேலும், பலவித அலங்கார மின்விளக்குகள், மேற்கூரையில் புராண கதைகளின் ஓவிய வடிவங்கள், சுவரோவியங்கள், போன்றவை இவ்வாலயங்களுக்கு பொலிவும் வனப்பும் சேர்க்கின்றன.

சிங்கையில் கோயில் சிற்பக்கலை[தொகு]

ஆயக்கலைகளில் ஒன்றான சிற்பக்கலை, கோபுரங்கள் அமைப்பதிலும் கடவுள் விக்கிரகங்களைப் படைப்பதிலும் முக்கிய பங்காற்றும். இவை சிங்கையில், சுதை, கற்கள், மணல் ஆகியவற்றால் செய்யப்படுகின்றன. சிங்கையில் புடைப்புச் சிற்பங்களை அதிகமாக காணலாம். இருப்பினும், முழுச் சிற்பங்கள் சில கோயில்களில் உள்ளன. அனைத்து சிலைகளிலும், முக பாவனைகள், நடன அசைவுகள் ஆகியவை மிக துல்லியமாக செதுக்கப்படிருக்கும். அவற்றுக்கு வண்ணம் பூசி மிக அழகாக இந்த சிலைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

கோயில் சிறப்புகள்                                                                                                     [தொகு]

  • சிங்கையின் முதல் இந்து கோயில், ‘சைனாடவுன்’ இடத்தில் அமைந்துள்ள ஶ்ரீ மாரியம்மன் கோயில் ஆகும்.
  • 1932 இல் மலாயன் ரயில் பாதைக் கட்டுமான தொழிலாளிகளால் மிகச் சிறிதாக அமைக்கப்பட்ட முனீஸ்வரன் கோயில், இன்று பல வளர்ச்சிகளைக் கண்டு, ‘குவீன்ஸ்வே’ இல் அமைந்துள்ளது. இன்று அது தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய முனீஸ்வரன் ஆலயம் என கருதப்படுகின்றது. 
  • ஶ்ரீ தெண்டாயுதபாணி கோயில், 1859 A.D. இல் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களால் கட்டப்பட்டது. இந்த கோயிலில் பக்தர்களுக்கு முக்கிய விழாக்களன்று அன்னதானம் வழங்கப்படுகின்றது. மெய்யப்பச் செட்டியார், கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் இந்த கோயிலைப்பற்றி 1970-களில் பாடல்கள் எழுதியுள்ளது இன்னொரு சிறப்பு. 
  • ஶ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயிலில், மகா விநாயகர் சதுர்த்தி, சிங்கையிலே மிக விசேஷமாகக் கொண்டாடப்படும். மேலும் இங்கு மட்டுமே, வேண்டுதல் செய்து 108 முறை பிரகாரத்தைச் சுற்றினால், தங்களது வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், வேறு மதங்கள், வேறு இனங்களிலிருந்து கூட, இங்கே வந்து 108 சுற்றுகள் சுற்றுவதைக் காணலாம். 
  • ஶ்ரீ ஶ்ரீநிவாச பெருமாள் கோயில், 1978 இல், நினைவுச்சின்னங்கள் பாதுகாத்தல் வாரியத்தில், தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது.
  • ஶ்ரீ அரசகேசரி கோயில், வழிபாடு தலமாக மட்டுமல்லாது, மக்களுக்கு உதவி செய்யும் பல பணிகளிலும் பங்குபெற்றுள்ளது. ஒவ்வொரு ஞாயிறும் இங்கே, மார்சிலிங்கில் வசிக்கும் வசதி குறைந்தோருக்கும், இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளிகளுக்கும், மற்ற மக்களுக்கும், இலவச உணவு வழங்கப்படுகின்றது. மேலும், ரத்ததானங்கள் சுமார் மாதம் ஒரு முறை இங்கு நடைபெறும். மேலும் சிங்கப்பூரிலே, குளம் உள்ள ஒரே கோயில் இது மட்டுமே. இங்கே மேலும் பக்தர்களே சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யலாம். 
  • ஶ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில், சைவ சமயப் பள்ளி இருக்கின்றது. இங்கே திருமுறைப் பாடங்கள், பேச்சு, நாடகக் கலைகளும் கற்றுத்தரப்படுகின்றது. இங்கு மேலும் சைவ சித்தாந்த பாடங்கள் டாக்டர் அரு நாகப்பன் அவர்களால் நடத்தப்படுகின்றன. இந்த கோயில், சுமார் 1.5 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள 32 அடி விநாயகர் சிலையை கருங்கல்லால் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த கோயிலில் சோழ நாட்டு கட்டிடக் கலையை காணலாம். இந்த கோயிலில் தென்கிழக்காசியாவிலேயே முதல் முதலாகக் கட்டப்பட்ட ஒரு இசை தூண் உள்ளது. இது சுமார் 200,000 வெள்ளி மதிப்புடையது. இந்த தூணை தட்டினால் வெவ்வேறு நாத ஒலிகள் எழும். 

சிங்கையின் வழிபாட்டுச் சிறப்புகள்                                                                               

இந்து மத வழிபாட்டு முறைகள் இந்தியாவில் பிறந்து சிங்கைக்கு பரவி இருந்தும், சிங்கைக்கென்று சில தனித்துவமான விசித்திர சிறப்புகள் உள்ளன. 

முனீஸ்வரன் வழிபாடு[தொகு]

இந்தியாவில் காவல் தெய்வமான முனீஸ்வரனுக்கு என்று பல கோயில்கள் கிடையாது. ஆனால், சிங்கையில் முனீஸ்வரனைப் பிரதான தெய்வமாகக் கொண்டு சுமார் 3 கோயில்கள் உள்ளன. குடும்ப தெய்வமாக மட்டுமே வழிப்படப்பட்ட முனீஸ்வரன், இன்று முக்கிய தெய்வமாகப் பலராலும் வணங்கப்படுவது விசித்திரம். இந்தியாவில் முனீஸ்வரனின் திரிசூலத்தை வைத்து அதன் மேல் எலுமிச்சைப் பழங்களை வைத்து வழிபடுவதை மட்டுமே பல கிராமங்களில் காணலாம். அல்லது சிலக் கற்களை வைத்து வழிபடுவதைக் காணலாம். 

முனீஸ்வர வழிபாடு மிகப் பிரபலாமனது மேற்கு மலேசியாவில் தான் என நம்பப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டில் பல மலேசியர்கள் வேலைத் தேடி சிங்கப்பூருக்கு குடிப்பெயர்ந்தனர். இவர்களில் பலர் கிராமப்பகுதிகளையும் சிறு சிறு நகரங்களையும் சேர்ந்தோர். ஆகையால் முனீஸ்வரனின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். சிங்கப்பூரில் நடந்த நகரமயமாதல் வளர்ச்சிகளால் இந்து மதம் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்விடும் என எண்ணி, தாங்கள் வழிபடும் முனீஸ்வரனுக்கென்று கோயில்கள் எழுப்பியதாகக் கூறப்படுகின்றது. 

விழாக்கள்                                                                                                                      [தொகு]

தைப்பூசம்[தொகு]

தைப்பூசம், முருகனுக்காக கொண்டாடப்படும் ஒரு முக்கிய விழாவாகும். சிங்கையில் தைப்பூசம் குறிப்பாக மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. சிங்கை பக்தர்கள் இவ்விழாவின் போது தங்களது பக்தியை வெளிபடுத்துவது வருடாவருடம் நடக்கும் ஒரு வழக்கம் ஆகும். 

இவ்விழா, ஶ்ரீ தெண்டாயுதபாணி கோயிலிலும், ஶ்ரீ ஶ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலும் மிக விசேஷமாக, இரண்டு நாட்கள் நடைபெறும். முதல் நாள், அதாவது தைப்பூசத்திற்கு ஒரு நாள் முன்பு, ரத ஊர்வலம் நடைபெறும். முருகப்பெருமானின் தேர், ஶ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்திலிருந்து, அவரது சகோதரரான விநாயகர் இருக்கும் ஶ்ரீ லயன் சித்தி விநயாகர் ஆலயத்துக்குப் புறப்படும். அடுத்து பல கோயில்களுக்குச் சென்ற பின், தேர் நிற்கும் ஒரு முக்கியமான இடம் தான், ஶ்ரீ மாரியம்மன் கோயில். இங்கு முருகன், தனது தாயாரான பார்வதி தேவியை உள்ளிருந்து வழிபடுவதாக ஐதீகம். கடைசியாக தேர் மீண்டும் லயன் சித்தி விநாயகர் கோயிலுக்குச் செல்லும். அங்கு முருகப்பெருமானின் சிலை வைபவக்கோலத்துடன் வைக்கப்படுகின்றது. மாலையில் முருகனின் சிலை தேரில் வைக்கப்பட்டு, பின் ஶ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்குத் திரும்பும். அப்போது பொதுமக்களும். முக்கியமாக செட்டியார்களும் காவடி எடுப்பார்கள். இதனாலேயே இது ‘செட்டிப் பூசம்’ என அழைக்கப்படுகின்றது. இந்த ஊர்வலத்தில் பல நண்பர்களும் பக்தர்களும் தெய்வ பாசுரங்கள், தேவார திருப்பாடல்கள் ஆகியவற்றைப் பாடி ஆடி, தங்களது பக்தியை தெரிவிப்பார்கள். 

தைப்பூசத்தன்று, நள்ளிரவிலேயே பால் குடம் எடுக்கும் பக்தர்கள் ஶ்ரீ ஶ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்குச் செல்வார்கள். அங்கிருந்து கால்நடையாக ஶ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்குச் செல்வார்கள். கடைசியில் சேமிக்கப்பட்ட பாலெல்லாம், முருகப்பெருமானின் வேலின்மீது ஊற்றப்படும். 

அப்போதிலிருந்து, மாலை 7 மணி வரை, காவடி எடுப்போரும், மற்ற பக்தர்களும் ஆயிரக்கணக்கில் அங்கு செல்வார்கள். சிங்கையில், பால் குடம், பால் காவடி, தொட்டில் காவடி, ரத காவடி, அலகுக் காவடி ஆகியவற்றை பக்தர்கள் எடுக்கலாம். காவடி எடுப்போர், நாக்கிலும் உடம்பின் வேறு பகுதிகளிலும் வேல்களைக் குத்திக்கொண்டும் வேண்டுவர். 

இந்த இரண்டு நாட்களைத் தவிர்த்து, கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு பக்தர்கள் தெண்டாயுதபாணி கோயிலில் முடி காணிக்கைக் கொடுக்கலாம். 

கோயில் இசை என்பது இந்து பாரம்பரியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாகும். தைப்பூசத்தன்று, மூன்று இடங்களில் நேரடியான இசை ஒலிக்கப்படும். உறுமி மேளம் இங்கு அதிகமாக ஒலிக்கும். மேலும், ஊர்வல வழியில் 23 இடங்களில் காவடிச் சிந்து ஒலிபரப்பப்படும். 

இந்த இரண்டு நாட்களில், பக்தர்கள் அனைவரும், போக்குவரத்து அதிகமாக இருக்கும் பல சாலைகளில் பயணிப்பார்கள். இதற்காகவென்று, சிங்கையில், பக்தர்களுக்கென்று சாலைகளில் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டு, போக்குவரத்து, அவர்களின் வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றது. பக்தர்களுக்கு ஶ்ரீ ஶ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் இலவச உணவும் பானங்களும் அளிக்கப்படுகின்றன. மேலும் ஶ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தில் சிறப்பு அன்னதானமும் நடைபெறும். ஊர்வலத்தில் ஆங்காங்கே ஓய்வெடுக்க இடங்களும் ஒதுக்கப்படும். 

தைப்பூசம் நிச்சயமாக சிங்கை இந்துக்கள் மிக ஆவலுடன் எதிர்நோக்கும் ஒரு முக்கிய விழாவாகும். இவ்விழா சிங்கை சுற்றுலா வாரியத்தின் இணையத்தளத்திலும் கூட கூறப்பட்டுள்ளது. இந்த காட்சியைப் பார்ப்பதற்காக பல நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளும் வருவர். 

தீமிதித் திருவிழா[தொகு]

திரௌபதி தனது கற்பையும் தூய்மையையும் நிரூபிக்க, தீயின்மேல் நடந்தது போல, பக்தர்களும் எந்த காயமும் இல்லாமல் நெருப்பின்மீது நடந்து தாண்டுவர். இந்த நிகழ்வு பாண்டவர்களின் வெற்றியையும் குறித்தது. இதுவே தீமிதி விழா. 

சிங்கையில் தீமிதித் திருவிழா, 1840 ஆம் ஆண்டிலிருந்து ஶ்ரீ மாரியம்மன் கோயிலில் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

இவ்விழா, ஐப்பசி மாதத்தின் முதல் திங்கட்கிழமையில் தொடங்கும். இந்த விழாவிற்காக ஶ்ரீ மாரியம்மன் கோயிலில், வலிமையின் சின்னமான ஹனுமான் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஒன்று ஏற்றப்படும். இந்த நாள் முதல், மஹாபாரத்தின் துணுக்குகள் ஒவ்வொரு இரவும் தமிழில் வாசிக்கப்படும், தீமிதி முடிந்த இரண்டு நாட்கள் வரை. 

ஶ்ரீ ஶ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்திலிருந்து ஶ்ரீ மாரியம்மன் கோயில் வரை சுமார் 4 கிலோமீட்டர் நடந்த பின், தீமிதி விழா அங்கு நடைபெறும். இதில் ஆண்கள் மட்டுமே பங்குபெறமுடியும். தீமிதியில் பங்குபெறும் பக்தர்கள், தீமிதிக்கு 3 வாரங்களுக்கு முன், தினந்தோறும் பூசையும், விரதமும் இருக்க வேண்டும். இவர்கள், மிக கடுமையான விரதம் பூண்டு, அசைவ உணவையும் இல்லற ஈடுபாட்டையும் தவிர்த்துவிடுவார்கள்.

ஶ்ரீ மாரியம்மன் கோயிலில் சுமார் 2.7 மீட்டர் ஆழத்துக்கு, 3 மீட்டர் நீளத்துக்கு ஒரு குழி தோண்டப்படும். அது, கரிக்கட்டைகளால் ஒளியூட்டப்படும். சில பூசைகளுக்குப் பின், மஞ்சள் கட்டப்பட்டு, வேம்புநீர் தெளிக்கப்பட்ட ஒரு மஞ்சள் கயிறு தீயில் நடப்பவர்களின் கைகளில் கட்டப்படும். இந்த தீமிதி விழா ஆரம்பமாகும்போது, முதலில் தலைமை பூசாரி தீக் குழியைத் தாண்டுவார், தலைமீது கரகத்தைத் தாங்கிக்கொண்டு. பிறகு பக்தர்கள் அனைவரும் தீயை மிதித்து, பூக்குழியின் இறுதியில் இருக்கும் பசு பாலில் தங்களது பாதங்களை குளிர வைப்பார்கள். கடைசியில், பாலாலும் நீராலும் தீ அணைக்கப்படுகின்றது. 

2015 ஆம் ஆண்டில் 4,000 மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டார்கள். 

தீபாவளி[தொகு]

தீபாவளி, தீய சக்தியான நரகாசுரனின் அழிவையும் நல்ல சக்தியின் வெற்றியையும் பறைசாற்றுகிறது. இந்த விழாவன்று தீயவற்றை போக்க தீபங்களை வீடுகளில் ஏற்றி வைப்பார்கள் இந்துக்கள். மேலும் தெய்வ சக்திகளை வரவேற்கவும் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்கவும் அழகிய வண்ணக் கோலங்களை வீட்டு வாசல்களில் வரைந்து வைப்பர். இந்த நாளில் பெரியோரின் ஆசி பெற்று, தீயவற்றை போக்குவதற்காக எண்ணைத் தேய்த்துக் குளிப்பார்கள். பல்வேறு வகையான இனிப்புப் பண்டங்களை இறைவனுக்குப் படைப்பார்கள். இவை, தீமிதி விழா முடிந்தபிறகு தான் தயாரிக்கப்படும். 

இந்த விழாவன்று, அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு பூசைகள் நடைபெறும். 

மேலும் பார்க்கவும்: சிங்கையில் தீபாவளி 

சிங்கையில் தீபாவளி[தொகு]

தீபாவளி, இந்தியர்களுக்காக சிங்கை அரசாங்கம் கொண்டாடும் பிரதான விழாவாகும். இந்த விழாவிற்காக ‘குட்டி இந்தியாவில்’ ஒரு மாதத்திற்கு முன்பு பலவித அலங்காரங்கள் நடைபெறும். சிங்கைக்கு மட்டுமே உரிய ஒளியூட்டு விழா இங்கு மிகச்சிறப்பு. இந்த ஒளியூட்டு விழாவின் போது, குட்டி இந்தியா முழுக்க வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படும். 2015 ஆம் ஆண்டில், சுமார் 30,000 மீட்டருக்கு LED மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டன. 

தீபாவளிக்காக இந்தியாவிலிருந்து கலைஞர்களையும் அழைத்து, பொது மக்களுக்கு இந்திய கலை, கலாச்சரத்தைப் பற்றிய விழிப்புணர்வையும் அறிவையும் ஏற்படுத்துமாறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். 2015 ஆம் ஆண்டில் இந்திய மரபுடைமை கழகத்தின் வெளியில், கிளி ஜோசியர்கள், குயவர்கள், மண் பாண்டம் தயாரிப்போர் போன்றோர் நிறுத்தப்பட்டு, பொது மக்களுக்கு தங்களது கலை, வேலை ஆகியவற்றைப் பற்றி பேசி, நேரில் தங்களது வேலைகளை செய்தும் காண்பித்தார்கள். 

மயில், யானை ஆகியவற்றின் சுமார் 20 மீட்டர் உயரம் கொண்ட உருவங்களும் சென்ற ஆண்டு வைக்கப்பட்டன. மறுபயனீடு செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், அல்லது குறுவட்டுக்களால் சிங்கப்பூரர்கள் அமைப்பார்கள். இவையும் ‘குட்டி இந்தியா’ வட்டாரத்தில் வைக்கப்பட்டன. இந்திய அலங்காரப் பொருட்கள், பாரம்பரிய ஆடைகள், பட்டாசு, மத்தாப்பு, மூர்த்தி விக்கிரகங்கள் போன்றவைகளை மலிவு விலையில் விற்கும் விதவிதமான தீபாவளி சந்தைகளும் இங்கு விழாக்காலத்தில் காணப்படும். 

‘வசந்தம்’ என்ற சிங்கைத் தமிழ் தொலைக்காட்சி ஒளியலை வரிசை, தீபாவளிக்கென்று சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும். சிங்கப்பூர் கலைஞர்கள் சொந்தமாக தயாரித்து உருவாக்கிய சிறப்பு தீபாவளி பாடல்கள் ஒளிபரப்பப்படும். இது தமிழர்களுக்கிடையே மிக பிரபலமடைபவை. மேலும், தீபாவளி ‘சேரி குவீன்’ அதாவது, ‘சேலை இராணி’ என்ற வித்தியாசமான அழகுராணி போட்டியை ஏற்பாடு செய்வார்கள். இப்போட்டியில், வயது வரம்பு எதுவும் இல்லாததால், பல இந்திய பெண்கள் சேலையில் காட்சியளிப்பார்கள். இந்திய பாரம்பரியத்தை நிலைக்க வைக்க சிங்கையில் நடைபெறும் இன்னொரு நிகழ்வு இது. 

தீபாவளியன்று, பண்டிகைக் கொண்டாட்டத்தில் மூழ்கும் வேளையில், நமது பாரம்பரியத்தை நிலைக்க வைக்க சிங்கையில் பலவித நிகழ்ச்சிகளும் வாய்ப்புகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. 

வைகுண்ட ஏகதாசி[தொகு]

திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தின் கதவுகள் இந்த நாளில் திறக்கப்படுவதாக வைணவர்கள் நம்புகிறார்கள். இந்த நாளன்று நோன்பிருந்து, சாப்பிடாமல் இருப்பர். இவ்வாறு செய்வதனால் தங்களது பாவங்கள் மன்னிக்கப்படும் என நம்புகின்றனர். இது ஶ்ரீ ஶ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தில் முக்கியமாக நடைபெறும். பக்தர்கள் இரவு முழுதும் கண் விழித்து பெருமாளை வழிபடுவர். மறுநாள் காலை சொர்க்கவாசல் திறக்கப்படும். சொர்க்கவாசல் திறந்து தரிசனம் செய்த பிறகே பக்தர்கள் தங்கள் விரத்தை முடிப்பார்கள்.

மகா சிவராத்திரி[தொகு]

பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடைந்தது, விஷ்ணுவும் பிரம்மாவும் தங்களில் யார் பெரியவர் என்ற விவாதத்தில் சிவபெருமானின் அடியையும் முடியையும் காண முயன்றது, ஒரு வேடுவன் கொடூர மிருகங்களால் துரத்தப்பட்டபோது அவன் இரவு முழுவதும் விழித்து தான் ஏறியிருந்த வில்வ மரத்திலிருந்த இலைகளைப் பறித்து கீழே இருந்த சிவலிங்கத்தை அறியாமலேயே வணங்கியது, போன்ற பல புராண சம்பவங்கள் நடந்ததாக சொல்லப்படுகின்றது. இந்த விழா இரவில் கொண்டாடப்படுகின்றது. 

சிவராத்திரி அன்று 4 கால பூஜைகள் நடத்தப்படும். இந்த 4 கால பூஜைகளைக் காண சில சிங்கப்பூர் இந்துக்கள், வெவ்வேறு கோயில்களுக்குச் செல்வதுண்டு. 

மேலும் இந்த பூஜைகளில், லிங்கோத்பவருக்கும் அபிஷேகம் செய்வர். ‘லிங்கோத்பவர்’ என்பவர், கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தின் நேர் பின்புறத்தில் இருப்பார். இது, சிவலிங்கத்தின் உருவங்கொண்டாலும், பிரம்மாவும் விஷ்ணுவும் சிவபெருமானின் அடியையும் முடியையும் காண, முறையே, பன்றி உருவிலும், அன்னப்பறவை உருவிலும் முயல்வது போன்ற காட்சி இந்த லிங்கத்தில் செதுக்கப்பட்டிருக்கும். 

இந்த நாளன்று, சிவபெருமானுக்காக பக்தர்கள் ஒரு நாள் முழுவதுமாகக் கண் விழிப்பார்கள். 

நவராத்திரி [தொகு]

நவம் என்பது சமஸ்கிருதத்தில் ‘9’ ஆகும். ஆகவே இந்த விழா, 9 நாட்களுக்கு நீடிக்கும். வீட்டு வாசலிலும் பூஜை அறை வாசலிலும் மாவிலைத் தோரணங்களைக் கட்டியும், 9 நாட்களுக்கும் விதவிதமான கோலங்களை வரைந்து வைப்பார்கள். 

நவராத்திரியை கொண்டாடுவோர், கலசப் பானையை வைத்து துர்க்கைதேவியை தங்கள் வீட்டிற்கு வரவேற்பார்கள். செம்பு அல்லது வெள்ளியாலான ஒரு சொம்பு பாத்திரத்தை அரிசியால் நிரப்பி, அதை மாவிலைகளால் அலங்காரம் செய்து, அதன் மத்தியில் சந்தனக்குங்குமம் வைக்கப்பட்ட ஒரு தேங்காயை வைப்பார்கள். பிறகு, இந்த கலசத்தை கோலத்தின் நடுவிலோ, அல்லது துர்க்கையம்மன் படத்தின் முன்னோ வைப்பர். 

நவராத்திரியில் கொலு [தொகு]

நவராத்திரியின் ஒரு சிறப்பு அம்சம், கொலு வைப்பது ஆகும். கொலு என்பது, சில படிகளை அடுக்கி, அவற்றை அலங்காரப்படுத்தி, பின் அவற்றின் மேல் சிலைகளை வைப்பதாகும். இந்த படிகள் 3, 5, 7, 9 போன்ற ஒற்றைப்படை எண்களில் தான் இருக்கும்.

கொலுவில் வைக்கப்படும் சிலைகள், உயிர்களின் பிறப்பு வரிசை முறைக்கேற்ப அடுக்கப்படுகின்றன. சிவபுராணத்தில் மாணிக்கவாசகப் பெருமான் கூறியது போல, “புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி, பல்விருமாகி, பறவையாய், பாம்பாகி, கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய், வல்லசுரராகி, முனிவராய், தேவராய்”, பிறக்கும் உயிர்கள் அனைத்திற்கும் ஒரே குறிக்கோள்; அது இறைவனை அடைவதாகும். அவ்வாறு அடைவதற்கு உயிர்கள் பல படிகளைக் கடக்க வேண்டும் என்பதன் பிரதிபலிப்பே கொலு. 

கொலு பொம்மைகளை அடுக்குவதில் ஒரு குறிப்பிட்ட முறை உள்ளது. மேலிருந்து முதல் படியில், துர்க்கையம்மன், லட்சுமி, சரஸ்வதி சிலைகளும் கலசமும் வைக்கப்பட வேண்டும். இதுவே உயிர்கள் கடைசியில் எய்தவேண்டிய படியாகும். இரண்டாவது படியில் அஷ்டலட்சுமிகள், மூன்றாவதில் தசாவதாரங்கள், நான்காவதில் சித்தர்கள், முனிவர்கள், ஐந்தாவதில் சமுதாயத் தொண்டாற்றியோர், ஆறாவதில் சாதாரண மக்கள், கடைசி படிகளில் பறவைகள், விலங்குகள் ஆகியவை வைக்கப்பட வேண்டும். 

சிங்கையில் பிராமணர்கள், அந்தணர்கள் ஆகியோரே கொலு வைப்பதை இன்றும் தவறாமல் பற்றி வருகின்றனர். 

ஆயுத பூஜை[தொகு]

ஆயுத பூஜை என்பது நவராத்திரி விழாவில் ஒரு அங்கமே. இந்நாளில் இந்துக்கள் தங்களது ஆயுதங்களையும், தளவாடங்களையும், கருவிகளையும் சந்தனக்குங்குமம் இட்டு வழிபடுவர். 

நவராத்திரியின் சிறப்புகள்[தொகு]

9 நாள்கள் கொண்டாடப்படும் நவராத்திரியில், தேவியின் 3 வடிவங்களையும் நாம் வழிபடுகிறோம். முதல் 3 நாள்கள் துர்க்கைக்கும், அடுத்த 3 லட்சுமிக்கும், கடைசி 3 சரஸ்வதிக்கும் கொண்டாடப்படும். லட்சுமி செல்வத்தையும், சரஸ்வதி கல்வியையும், துர்க்கை வலிமையையும் பிரதபலிக்கின்றனர் என்ற ஐதீகம் உள்ளது. வாழ்க்கையில் இந்த மூன்றும் ஒரு மனிதனுக்கு மிக முக்கியம் என்பதனால் இந்த விழாவில் இந்த மூன்று தேவிகளையும் வழிபடுவர். 

மேலும், அடிப்படை குணங்களான ‘சாத்வீகம், ராஜசம், தாமசம்’, ஆகியவையை பொருத்தும் இந்த 9 நாட்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் 3 நாட்கள், துர்க்கை அல்லது காளியை போன்று, தேவி உக்கிரகத்துடன் இருப்பதால், இது தாமச குணத்தை காட்டுகிறது. அடுத்த 3 நாள், மென்மையாக இருந்தாலும் செல்வத்தை ஒத்த லட்சுமியை, ராஜச குணம் சாரும். கடைசி 3 நாட்கள், ஞானமும் ஞானம் பெறுவதையும் ஒத்த சரஸ்வதியை சாத்வீக குணம் சாரும். தாமசம் என்பது நாம் தாயின் கருவில் வளர்ச்சியடையும் ஒரு பருவமாகும். இது அடக்கி ஆளும் சக்தி, வலிமை ஆகியவற்றைக் கொண்ட பூமித்தாயின் குணமாகும். ராஜசம் என்பது மண்ணில் நமது செயல்களும் வாழ்க்கையும் ஆரம்பமாகும்போது பொருளை நாடிச்சென்று அது சம்பந்தமான ஆசைகளைக் கொண்டிருப்பதே ஆகும். இது சூரியனைப் போன்றது. கடைசியாக சாத்வீகம் என்பது இவ்வுலகில் கிடைக்கும் பொருள் ஆசைகள், மனித உடல், அறிவு போன்றவற்றைக் கடந்து போக முயலும் குணமே ஆகும். இது நிலவைப் போன்றது. ஆகவே இந்த 9 நாட்களில் பூமியில் இருந்து எழுந்து, பின் வாழ்க்கையை தொடங்கி, இறைவனை நாடுவதை வரிசையாக பிரதிபலிக்கின்றது. 

ஆருத்ரா தரிசனம்[தொகு]

இந்த விழா பெரும்பாலான கோயில்களில் நடக்கும். அதிகாலையில் நடக்கும் இந்த விழாவில்நடராஜப் பெருமானுக்கும் பார்வதி அம்மனுக்கும் அபிஷேகங்கள் நடக்கும். இது ஶ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் குறிப்பாக மிக சிறப்பாக நடைபெறும். பக்தர்கள் காலையிலேயே எழுந்து குளித்து, ஆலயத்துக்குச் செல்வார்கள். நடராஜப்பெருமானுக்கு நெய், தயிர், பஞ்சாமிர்தம் போன்றவற்றைக் கொண்டு அபிஷேகங்கள் முடிந்தபிறகு, நடராஜ பெருமானும் பார்வதி அம்மனும் அலங்காரப்படுத்தப்பட்டு, ஊஞ்சலில் வைக்கப்படுவார்கள். இந்த ஊஞ்சல் ஆட்டப்படும். இவை நடக்கும் வேளையில், பல அடியார்களும் மக்களும், பொன்னூசல் ஆடாதோ என்ற மாணிக்கவாசகரின் திருக்கோவையாரிலிருந்து பாடல்களைப் பாடுவார்கள். மேலும் பலர் பால், பழம் ஆகியவற்றை வாங்கி இறைவனுக்குப் படைப்பர். 

அடுத்து, மாணிக்கவாசகர், நடராஜர், மற்றும் பார்வதியார் இவர்களின் சிலைகளை அலங்காரக்கோலத்துடன் தூக்கி, பல ஆண்கள் கோயிலை வலம் வருவர். அப்போது அடியார்கள் படைசூழ, கோயில் வலம் சென்று பின் அந்த சிலைகள் திரும்பி, பல பூசைகள் நடைபெறும். இந்த விழாவின் போது நடராஜரின் திருநடனத்தைக் கொண்டாடும் விதமாக, களி என்னும் உணவுப் பண்டத்தை தயாரிப்பார்கள். 

இல்ல வழிபாடு                                                                                                                      [தொகு]

அன்றாட வழிபாடு [தொகு]

இந்து வீடுகளில் பெரும்பாலும் பூசை அறை ஒன்று இருக்கும். அதில் அவர்களுக்கு விருப்பமான தெய்வங்களின் சிலைகள், அல்லது படங்களை வைத்து வழிபடுவார்கள். இந்து வீடுகளில், நல்ல விளக்கேற்றி வைத்து காலைகளிலும் சாயங்காலங்களிலும் வழிபடுவர். 

சிங்கை வீடுகளில் வெளி வாயில் கதவும் அதற்கு பின் மரக்கதவு ஒன்றும் இருக்கும். இந்த மரக்கதவில் இந்து மதத்தினர் திருநீற்றையும் சந்தனக்குங்குமத்தையும் வைத்து அலங்காரம் செய்வது வழக்கம். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை அன்று இவ்வாறு செய்வார்கள். கதவுகளுக்கு மட்டுமல்லாது, கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களையும், புத்தகங்கள், எழுத்கோல்கள் போன்ற கல்வி சமந்தப்பட்ட பொருள்களையும் இவ்வாறு அலங்காரம் செய்து வழிபடுவர். 

மாதந்தோறும் வழிபாடு[தொகு]

புரட்டாசி மாதம், சனிக்கிழமைகளில் மிக விசேஷமாக பெருமாளை அலங்கரித்து, பிரத்யேகமான உணவு தயாரித்து, வழிபடுவர். இந்த நாளில் வசதி குறைந்தோருக்கு அவர்கள் உதவுவார்கள். வெங்கடாசலபதி இந்த புரட்டாசி மாதத்தில் மக்களை நெறிபடுத்தியதாகக் கருதப்படுகின்றது. புரட்டாசி சனியில் அன்னதானம் செய்யும் வழக்கம் 1900 களின் தொடக்கத்திலிருந்து உள்ளதாக வாய்மொழி வரலாறு உண்டு. இன்று வரை புரட்டாசி சனியில் அன்னதானம் நடைபெற்று வருகிறது.

நன்றி                                                                                                                         [தொகு]

1. ^ 2 million expected at Deepavali festivities. (2015, September 17) மீட்டெடுக்கப்பட்ட இடம்: http://www.straitstimes.com/singapore/2-million-expected-at-deepavali-festivities

2. ^ About Thaipusam. (2017, February 9). மீட்டெடுக்கப்பட்ட இடம்: http://thaipusam.sg

3. ^ Chandrahasan Anandan. (2011). Queensway Muneeswaran Temple Mahakumbabishegam.

^ Chandrahasan Anandan. (2013). Geylang Shivan Temple Gopuram.

4. ^ Chandrahasan Anandan. (2017). Photo of Arudhra Darisanam 2017, 2013.

5. ^ Ethiraj Aravindan. (2017). Photo of Arudhra Darisanam 2017

6. ^ List of Hindu temples in Singapore. (2017, February 22). மீட்டெடுக்கப்பட்ட இடம்: https://en.wikipedia.org/wiki/List_of_Hindu_temples_in_Singapore#Muneswarar_temples

7. ^ Malia. (2011, October 2017). theemithi : hindu fire walking festival. மீட்டெடுக்கப்பட்ட இடம்: http://postcardsfromsg.blogspot.sg/2011/10/theemithi-hindu-fire-walking-festival.html

8. ^ Muniyandi Murali. (2016). Photo of Deepavali light up festival 2016.

9. ^ Photo: MUNEESWARAN, SINGAPORE. (2010, June 14). மீட்டெடுக்கப்பட்ட இடம்: http://pulivahanan.wikifoundry.com/photo/10012744/MUNEESWARAN,+SINGAPORE

10. ^ Preet Kaur. (2013, October 22). How to walk on fire and other lessons. மீட்டெடுக்கப்பட்ட இடம்: https://preetk.wordpress.com/tag/theemithi/

11. ^ R India. (2015, September 29). Namma India | The Specialities of Navratri | Must Follow Steps in Hindu Tradition. மீட்டெடுக்கப்பட்ட இடம்: https://www.youtube.com/watch?v=Gf28By85C_o

12. ^ Shankari Dharmaraj. (2016). Photo of Navarathiri Golu. 

13. ^ Shri Arasakesari Shivan Temple. மீட்டெடுக்கப்பட்ட இடம்: http://singaporehindutemples.com/templelist/SreeArasakesariShivan/SreeArasakesariShivan.html

14. ^ Sri Senpaga Vinayagar Temple consecration ceremony: 5 things about the historic temple in Ceylon Road. (2015, January 21) மீட்டெடுக்கப்பட்ட இடம்: http://www.straitstimes.com/singapore/sri-senpaga-vinayagar-temple-consecration-ceremony-5-things-about-the-historic-temple-in

15. ^ http://sttemple.com/pages/11~about-st-temple

16. ^ Suchitthra Vasu. (2015). Theemithi. மீட்டெடுக்கப்பட்ட இடம்: http://eresources.nlb.gov.sg/infopedia/articles/SIP_762_2004-12-23.html

17. ^ Subashini. (2009, June 20). ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் [விஷ்ணு]. மீட்டெடுக்கப்பட்ட இடம்: http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-21-27-39/2009-06-20-16-51-21/2009-06-20-20-49-22?el_mcal_month=8&el_mcal_year=2016

18. ^ http://sspt.org.sg/HEB/Template3/temple-history

19. ^ http://sttemple.com/pages/4~history-of-lsv-temple

20. ^ Thousands attend consecration ceremony at historic Ceylon Road temple. (2015, January 26). மீட்டெடுக்கப்பட்ட இடம்: http://www.straitstimes.com/singapore/thousands-attend-consecration-ceremony-at-historic-ceylon-road-templep

21. ^ http://isha.sadhguru.org/atoz/navratri/

22. ^ p. 8; Singapore Tourism Board - P@SSPORT. (2013). மீட்டெடுக்கப்பட்ட இடம்: https://www.stb.gov.sg/Passport/PASSPORT_Nov-Dec_2013.pdf

23. ^ சிற்பக்கலை. (2014, September 2014). Sri Nandhini. மீட்டெடுக்கப்பட்ட இடம்: http://kovirkalaikal.blogspot.sg/2014_09_01_archive.html