பயனர்:Veeranathan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீரநாதன் ஜெகதீசன் (Veeranathan Jagadesan) பயிற்சியாளர், எழுத்தாளர், கணினி வரைகலைஞர், சொற்பொழிவாளர், ஆலோசகர் என்று பலதரப்பட்ட, துறைசார்ந்தோருக்குப் பயன்பெறும் வகையில் பணியாற்றிக் கொண்டிருப்பவர். 1960ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி தமிழ்நாட்டில், மதுரை நகரில் பிறந்தவர். பெற்றோர் திரு. தி.ப.ஜெகதீசன் – திருமதி சவுந்தரவல்லி. உடன் பிறந்தோர் ஆறுபேர். மூத்தவர்கள் 4 பேர், இளையவர்கள் 2 பேர். 1976 முதல் கோயம்புத்தூர் நகரில் வசித்து வருகிறார். 1997ல் திருமணம். மனைவி திருமதி சித்ரா; ஒரு மகன் வீ.வீரபாலாஜி – 13.7.1998ல் பிறந்தார்.

கல்வி[தொகு]

மதுரை ஆரிய வைசிய உயர்நிலைப் பள்ளியில் (வெள்ளியம்பலம்) எட்டாம் வகுப்பு வரையிலும், சவுராஸ்ட்ரா செகண்டரி ஸ்கூலில் 11வது வகுப்பு (எஸ்எஸ்எல்சி) வரையிலும் படித்தார். புகுமுக வகுப்பை (பியூசி) மதுரை வக்ஃப் வாரிய கல்லூரியில் பயின்றார். இளங்கலை வரலாறு, முதுகலை வரலாறு, இதழியலில் முதுபட்டயம் மற்றும் இதழியலில் எம்.ஃபில் படிப்பு ஆகியவற்றை, மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழியில் பயின்றார். தற்போது (2013), முதுகல‌ை விளம்பரம் மற்றும் பொது மக்கள் தொடர்பியல் படித்து வருகிறார். தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பத்துறை நடத்தும் தொழில்நுட்பத் தேர்வுகளில், அச்சுக்கோர்ப்பு – தமிழ் மற்றும் ஆங்கிலம் – கீழ்நிலை மற்றும் மேல்நிலை; பிழைதிருத்துநர் – தமிழ் மற்றும் ஆங்கிலம் – கீழ்நிலை மற்றும் மேல்நிலை, புத்தகம் கட்டுதல் - – கீழ்நிலை மற்றும் மேல்நிலை – ஆகிய சான்றிதழ் தேர்வுகளை முடித்துள்ளார். இமேஜ் கணினி பயிலகத்தின் மூன்றுமாதகால முதுநிலைபட்டயப் படிப்பில் வலைதள வடிவமைப்புப் பயிற்சியை முடித்துள்ளார்.

பணி[தொகு]

1976 முதல் அச்சுத் துறையின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார். அச்சுத்துறையில் உதவி அச்சுக் கோர்ப்பாளராக, கோவை கலைமணி நிறுவனத்தில் தனது பணியினைத் துவக்கினார். கோவை நகரில் பல்வேறு அச்சகங்களில் பணியாற்றியுள்ள இவர், அச்சுக்கோர்ப்பாளர், உதவி மேற்பார்வையாளர், மேற்பார்வையாளர், மேலாளர் – உற்பத்தி, கணினி வரைகலைப் பயிற்சி இயக்குநர், மேலாளர் – அச்சுப்பெறிகள் விற்பனை – என்று தனது திறமையான உழைப்பால் உயர்ந்து 2004ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். பணிபுரிந்த நாட்களில் இவர் கணினி வரைகலைக்காக நடத்திய பயிற்சி வகுப்புகள் மிகுந்து சிறப்பு வாய்ந்தைவயாகவும், பெரும் வரவேற்பு பெற்றவையாகவும் இருந்தன. சரியான, முறையான, முழுமையான பாடத்திட்டத்துடன், துறைசார்ந்த தகவல்களுடன் பயிற்சி வகுப்புகளை தானே முன்னின்று ஒருங்கமைத்து நடத்தியது குறிப்பிடத்தக்கதாகும். இந்திய கணினி வரைகலை வரலாற்றிலேயே முதன் முறையாக அஞ்சல் வழியில் பயிற்சி வகுப்புகளை நடத்தியதும் இவரது சிறப்பான செயல்பாடுகளில் ஒன்றாகும். இன்றளவும், கணினி வரைகலைப் பயிற்சியில் தனக்கென்று ஒரு சிறப்பான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

தற்போதையப் பணி[தொகு]

அதன் பிறகு 2004ஆம் ஆண்டு பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் என்ற பெயரில் செந்தமாக கணினி வரைகலைப் பயிற்சிப் பள்ளியை கோவையில் துவங்கி நடத்தி வருகிறார். அச்சுத்துறையில் ஏற்பட்டுள்ள கணினி வரைகலைஞர்கள் பற்றாக்குறையைத் தீர்க்கவும், தமது பட்டறிவைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்திலும் இந்தப் பயிற்சிப் பள்ளியைத் துவக்கி நடத்தி வருகிறார். இவரது பயிற்சி வகுப்புகளுக்கும், புத்தகம் எழுதுதல் மற்றும் வெளியிடுவதிலும் இவருக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டுவருபவர், இவரது மாணவியும், துறைசார்ந்த அனுபவ அறிவு பெற்றவருமான செல்வி கோ. ரேணுகாதேவி ஆவார். இவர் ஒரு கணினி அறிவியலில் இளம் அறிவியல் பட்டம் மற்றும் இளம் நூலக அறிவியல் பட்டம் பெற்றவர். தற்போது முதுகலை நூலக அறிவியல் பயின்றும் வருகிறார்.

எழுத்துப் பணி[தொகு]

1995 முதல் அச்சுத்துறை மற்றும் கணினி வரைகலை தொடர்பான கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுதி வெளியிட்டும் வருகிறார். இவர் எழுதிய கட்டுரைகள், தினகரன், தினமணி கதிர், தமிழ் கம்ப்யூட்டர் ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. தினமலர் சேலம் பதிப்பில் இவர் எழுதிய கணினி வரைகலைப் பகுதிக்கான தொடர் வாரந்தோறும், ஒரு ஆண்டுகாலம் வெளியாகியது. தமிழ் கம்ப்யூட்டர் இதழில் அடோபி இல்லஸ்ட்ரேட்டர் பற்றிய தொடரினை எழுதியுள்ளார். அச்சுத்துறையில் பணியாற்றி காலத்தில் இவர் எழுதிய பிரீ-பிரஸ் ஒரு அறிமுகம், பேஜ்மேக்கர் ஆகிய புத்தகங்கள் பெரும் வரவேற்பினைப் பெற்றன.

சொந்தமாக பயிற்சிப் பள்ளியை ஆரம்பித்த பிறகு எழுதுவதற்கு நிறை நேரத்தை ஒதுக்கினார். இதனால் 2005 ஆண்டு சித்திரமும் மவுஸ் பழக்கம் என்ற பெயரில் கோரல்டிரா 12 மென்பொருளுக்கான புத்தகத்தை விரிவாக எழுதி வெளியிட்டார். எந்த ஒரு மென்பொருளுக்கும் அதுவரையிலும் இப்படி விரிவான முறையில் புத்தகம் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்த நூலுக்கு 2005ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல் பரிசும் பாராட்டிதழும் கிடைத்தது.

தொடர்ந்து, அடோபி போட்டோஷாப், அடோபி இல்லஸ்ட்ரேட்டர், அடோபி இன்டிசைன் ஆகிய மென்பொருட்களுக்கும் விரிவான புத்தகங்களை எழுதி வெளியிட்டார். அந்த வகையில் கணினி வரைகலைப் பகுதிக்கான அனைத்து மென்பொருட்களுக்கும் விரிவான புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ள ஆசிரியர் என்ற சிறப்பினையும் பெற்றுள்ளார்.

இவை மட்டுமல்லாது, டிடீபீ டிசைனர் கையேடு, இணையத்தை அறிவோம், கம்ப்யூட்டர் கிராபிக் டிசைனர்ஸ் கலர் கைடு, கணினியின் அடிப்படை அறிவோம் போன்ற நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

தமது புத்தகங்களை விற்பனை செய்வதற்காகவும், தங்களது வாசகர்களை நேரில் சந்திப்பதற்காகவும் புத்தகக் கண்காட்சிகளில் அரங்குகள் அமைப்பதை வழக்கமாகச் செய்து வருகிறார். அவ்வாறு வாசகர்களையும், பொது மக்களையும் நேரடியாக சந்திப்பதால், அவர்களது தேவையைக் கேட்டறியும் வாய்ப்பினை பெற முடிகிறது.

அந்த வகையில் வாசகர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இவரால் எழுதப்பட்டு / தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட புத்தகங்கள் எம்.எஸ். பவர்பாயின்ட், செல்பேசி பழுது நீக்கம், அடோபி பிரீமியர் மற்றும் தமிழ்நாடு அஞ்சல் குறியீட்டு எண்கள் போன்றவையாகும்.

செல்பேசி பழுது நீக்கம் புத்தகம் தமிழில் விரிவான செய்திகளுடன் வெளியான முதல் புத்தகமாகும். வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதும்கூடவாகும்.

தொடர்ந்து புத்தகம் எழுதுவதிலும் வெளியிடுவதிலும் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.

எழுதி வெளியிட்டுள்ள புத்தகங்கள்[தொகு]

  1. பிரீ-பிரஸ் ஒரு அறிமுகம்
  2. விஸிட்டங் கார்டுகள்
  3. பேஜ்மேக்கர்
  4. இணையம் - ஒரு அறிமுகம்
  5. சித்திரமும் மவுஸ் பழக்கம் – கோரல்டிரா 12
  6. போட்டோஷாப் சிஎஸ்2
  7. கோரல்டிரா எக்ஸ்3
  8. இல்லஸ்ட்ரேட்டர் சிஎஸ்2
  9. இன்டிசைன் சிஎஸ்4
  10. டிடீபி டிசைனர் கையேடு
  11. போட்டோஷாப் சிஎஸ்3
  12. கணினியின் அடிப்படை அறிவோம் (கோவை விஜயா பதிப்பகம் வெளியீடு)
  13. எம்.எஸ். பவர்பாயின்ட்
  14. நேர மேலாண்மை
  15. செல்பேசி பழுதுநீக்கம்
  16. கணினியில் தமிழ் தட்டச்சு
  17. இணையத்தை அறிவோம்
  18. கோரல்டிரா எக்ஸ்5
  19. கோரல்டிரா செயல்முறை பயிற்சிகள்
  20. அச்சக மேலாண்மை மற்றும் விலை நிர்ணயித்தல்
  21. கணினி கட்டுரைகள்
  22. வலையில் சிக்கிய மீன்கள்
  23. போட்டோஷாப் சிஎஸ்6
  24. போட்டோஷாப் செயல்முறை பயிற்சிகள்
  25. எம்.எஸ். ஆபீஸ் 2010
  26. கணினியின் அடிப்படை
  27. அடோபி பிரீமியர்
  28. கட்டற்ற மென்பொருள் ஜிம்ப் 2.8
  29. புத்தகம் பற்றிய புத்தகம்

கணினி வரைகலைக்கான மென்பொருட்கள் பற்றிய புத்தகங்களைப் பொருத்தவரையில், ஒவ்வொரு புதிய பதிப்பு வெளிவரும்பொழுதும் அதற்கான செய்திகள், செயல்பாட்டு விளக்கங்களுடன் மீண்டும் புதியதாக, முழுமையாக மாற்றி எழுதி வெளியிடுவது இவரது சிறப்பான செயல்பாடுகளில் ஒன்றாகும்.

கணினி மற்றும் கணினி வரைகலைத் தொடர்பாக தான் எழுதும் புத்தகங்களை தமது பயிலகத்தின் வாயிலாகவே வெளியிட்டு வருகிறார். இது தவிர பிற நூல்களை வெளியிட, தமது தந்தையார் அவர்களால் 1975ம் ஆண்டு துவக்கப்பட்ட எஸென்ஷியல் பப்ளிகேஷன்ஸ் என்ற பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் வெளியிட்டுள்ள புத்தகங்கள் பின்வருமாறு:

  1. காணிக்கை – இரண்டு நாடகங்கள் – ஆசிரியர் திரு. தி.ப. ஜெகதீஷன்
  2. தளபதி – இரண்டு நாடகங்கள் - ஆசிரியர் திரு. தி.ப. ஜெகதீஷன்
  3. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் – வாழ்க்கை வரலாறு – ஆசிரியர் திரு. ஜெ. குமணன்
  4. நலமான வாழ்விற்கு 40 எளிய உடற்பயிற்சிகள் – ஆசிரியர் பேராசியை ஜெ. பாகேஸ்வரி
  5. தமிழ்நாடு, புதுச்சேரி – அஞ்சல் குறியீட்டு எண்கள்
  6. பொதுக் கட்டுரைகள் – பள்ளி மாணவர்களுக்காக – ஆசிரியர் திரு. ஜெ. குமணன்
  7. அம்மா சமையல் – சைவ சமையல் குறிப்புகள் – ஆசிரியர் பூங்குழலி
  8. சொல் சுருக்க அகராதி (Abbreviations)
  9. பஞ்சதந்திரக் கதைகள் - ஆசிரியர் திரு. ஜெ. குமணன்
  10. அறிவோம் தெளிவோம் - தொகுப்பு திரு. ஜெ. வீரநாதன்

ஆசிரியர் திரு. ஆர்.வி. பதி எழுதியுள்ளவை

  1. 100 ஆண்டுகள் வாழ 100 வழிகள்
  2. ஆரோக்கிய வாழ்விற்கு பிராணயாமம்
  3. ஆரோக்கிய வாழ்விற்கு முத்திரைகள்
  4. வாருங்கள் செல்வங்களே, விஞ்ஞானி ஆகலாம்
  5. இந்திய அறிவியல் மேதைகள்
  6. முத்தான மாணவர்களுக்கு முல்லாக் கதைகள்
  7. தசாவதாரக் கதைகள்
  8. பூச்சிகள் தகவல்கள்
  9. பறவைகள் தகவல் களஞ்சியம்
  10. சிறுவர்களுக்கான அறிவியல் தகவல் களஞ்சியம்
  11. ஷீரடி சாயிபாபா

விரைவில் வெளியிடப்படவுள்ள புதிய புத்தகங்கள்

  1. என் ஆசிரியப்பிரான் - கி.வா. ஜகந்நாதன்
  2. மகாத்மா காந்தி - விரிவான வரலாறு - திரு. ஜெ. குமணன்

புத்தக வெளியீடுகள்[தொகு]

தமது தயாரிப்புகளான சித்திரமும் மவுஸ் பழக்கம் – கோரல்டிரா 12, போட்டோஷாப் சிஎஸ்2, இல்லஸ்ட்ரேட்டர், டிடீபி டிசைனர் கையேடு ஆகிய புத்தகங்களை தனித்தனியாக புத்தக வெளியீட்டு விழாக்கள் மூலமாக வெளியிட்டார். இந்த நூல் வெளியீட்டு விழாக்களில் சிவகாசி அரசன் கணேசன் பலதொழில்நுட்ப இயக்குநர் திரு. அசோகன், தமிழ் கம்ப்யூட்டர் இதழின் ஆசிரியர் திரு. ஜெயகிருஷ்ணன், அகில இந்திய அச்சகதாரர் பேரவையின் தலைவர் திரு. சுரேஷ், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், யூபீஎஸ்சியின் உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் இ.பாலகுருசாமி அவர்கள் போன்ற அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

மேலும் சென்னை, ஈரோடு ஆகிய நகரங்களில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிகளில் அமைக்கப்பட்ட தமது பயில அரங்குகளில் இணையத்தை அறிவோம், கணினி கலைச்சொல் அகராதி, தமிழ்நாடு அஞ்சல் குறியீட்டு எண் கையேடு ஆகிய புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வுகளில், கவிஞர் ஈரோடு தமிழன்பன், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் முதன்மைக் கல்வி அலுவலகருமான பேராசிரியர் முனைவர் பொன்னவைக்கோ, ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் திரு. ஸ்டாலின் குணேசகரன், ஈரோடு மூத்த அச்சகதாரர் திரு. கவிதா. சீனிவாசன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் கோவை அச்சகதாரர் சங்கத்தின் தலைவர் திரு. சி.டி.குமாரவேல் மற்றும் கோவை பேராசிரியர் அ. தேவராஜ் ஆகியோர் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இதழ் பணி[தொகு]

அறிந்ததைப் பகிர்ந்து கொள்வோம் என்பதன் அடிப்படையில், அச்சுத்துறை மற்றும் கணினி வரைகலைப் பகுதிகளில் தாம் அறிந்ததை, தமக்குத் தெரிந்ததை பிறருடன் பகிர்ந்து கெள்ளும் விதமாக கணினி வரைகலையின் சங்கமம் என்ற மாத இதழைத் துவங்கி நடத்தினார். 3 ஆண்டுகள் அச்சு இதழாக நடத்திய இதனை ஏப்ரல் 2012 முதல் மின்னிதழாக நடத்தி வருகிறார். இது முற்றிலும் இலவசமாக, விருப்பமுள்ளவர்களுக்கு அவர்களது மின்னஞ்சல் வழியே அனுப்பப்பட்டு வருகிறது. இதனைப் பெற விருப்பமுள்ளவர்கள் http://www.veeranathan.com/sangamam.php என்ற வலைதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்பினால் போதும்.

பெற்றுள்ள பரிசுகள்[தொகு]

2005ஆம் ஆண்டிற்கான சிறந்த கணினி இயல் புத்தகப் பரிசு – வழங்கியவர்கள் - தமிழ் நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை (16.1.2007).

2012ஆம் ஆண்டிற்கான சிறந்த தொழில்நுட்ப எழுத்தாளர் விருது – வழங்கியவர்கள் – ஜெய்வர்மம் அறக்கட்டளை, கோயம்புத்தூர் (3.2.2012).

2011ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிவியல் நூல் பரிசு – வழங்கியவர்கள் – பவித்ரம் அறக்கட்டளை, சென்னை (4.3.2012).

2011ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிவியல் நூல் பரிசு - வழங்கியவர்கள் - கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை, நாமக்கல் (2.10.2012)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Veeranathan&oldid=1636897" இலிருந்து மீள்விக்கப்பட்டது