பயனர்:Vajjiravelu
வரதராஜப் பெருமாள் - காஞ்சிபுரம்.
இறைவன் வரதராஜர் (தேவராஜர்) இறைவி பெருந்தேவி தல மரம் அரசமரம் தீர்த்தம் அனந்த சரஸ் புராண பெயர் அத்திகிரி, திருக்கச்சி காஞ்சிபுரம்.
2000 ஆண்டுகள் பழமையான தலம்.
திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம. இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஏறத்தாழ 3 கிலோமீட்டரில் அமைந்துள்ளது.
பிரம்மாவின் வேள்விக்கு மகிழ்ந்து வரம் அருளியதால் வரதராஜர் என்ற திருநாமம்! இக்கோயில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும் முதலாம் ராஜராஜசோழனால் கி.பி 1018 - 1054 க்குள் கட்டப்பட்ட சிறப்பான ஆலயம். கோவில் 24 ஏக்கர், கொடி மரத்தில் உள்ள அடுக்குகள் 24, கோவில் குளத்தின் படிக்கட்டுகள் 24. பெருமாளைத் தரிசிக்க 24 படிகளைக் கடந்து செல்ல வேண்டும். இவை காயத்ரி மந்திரத்தின் 24 தத்துவங்களை உணர்த்துகிறது. இராஜகோபுரம் 96 அடி.
”வரதா! வரதா! என்று அழைத்தாலே வரந்தா! வரந்தா! என்று எண்ணி வரமருள்பவன்” என்று கவிஞர் வாலி ராமானுஜ காவியத்தில் குறிப்பிடும் அத்திகிரிப் பேரருளாளன் அழகுற உறையும் ஆலயம்.
நாயக்க மன்னர்களால் அமைக்கப்பட்ட கல்யாண மண்டபம் சிறப்பான சிற்பங்களால் ஆனது. எட்டு வரிசைகள்; வரிசைக்குப் பன்னிரண்டு தூண்கள். யாளி, போர்க்குதிரை, குதிரைமேல் போர் வீரர்கள் எனப் பல்வேறு சிற்பங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை! 96 சிற்பங்களோடு உள்ளே இருக்கும் சிறிய நான்கு தூண் மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
மூலவர், வரதராஜர் (தேவராஜர்), தாயார், பெருந்தேவி. திருமங்கை மன்னனும், பூதத்தாழ்வாரும் பாடிய தலம்.
சிறப்பு : பிரம்மா பிரதிஷ்டை செய்த அத்திவரதரை அனந்தசரஸ் தீர்த்தத்திற்குள் வைத்துள்ளனர்.
அத்தி வரதர் எனப்படும் மரத்தால் செய்யப்பட்ட பெருமாள், திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார்.
பிரம்மா நிறுவிய அத்திவரதரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசிக்கலாம். 1938, 1979 ஆம் ஆண்டுகளில் வெளியே எடுத்து 48 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் 2019 ல் இத்தகைய தரிசனம் கிட்டும்!
முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம்.40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீ அத்திவரதரின் திருவுருவச் சிலையை வெளியெடுத்து, கோயிலில் பள்ளிகொள்ள வைத்து 48 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் உற்சவங்கள் பிரமாதமாக நடக்கும். அத்திவரதரை தம் வாழ்நாளில் தரிசிப்பது மிகப் பெரும் பேறு ஆகையால், எங்கிருந்தெல்லாமோ வந்து மக்கள் பெருமாளைத் தரிசிப்பர்.
தங்கம், வெள்ளிப் பல்லிகள்: பெருமாளின் பின்புறம் இருக்கும் இந்தப்
பல்லிகளை வணங்கினால் பல்வேறு சங்கடங்கள் அகலும்.
ராமானுஜருக்கு அருளிய பெருமான்:
ராமானுஜர் அறிவாற்றலின் மீது பொறாமை கொண்ட அவரது ஆசான் யாதவப் ப்ரகாசர்,
அவரைக் கங்கையில் தள்ளிக் கொல்லத் திட்டமிடுகிறார். தனது தம்பி மூலம் சதியை அறிந்து தப்பிக்கிறார் ராமானுஜர். காட்டில் வழி அறியாது கலங்கி நிற்கிறார். அப்போது வேடர் வடிவில் வந்த பேரருளாளனும், பெருந்தேவித் தாயாரும் அவரிடம் குடிக்க நீர் கேட்கிறார்கள்.
அருகில் இருநத சாலக் கிணற்றிலிருந்து நீர் கொணர்ந்து தருகிறார். அவர்களோடு பயணிக்கிறார். திடீரென வேடுவனும், அவன் மனைவியையும் காணவில்லை! சிறிது தொலைவில் வரதராஜப் பெருமாளின் கோபுரததைக் காண்கிறார். கண்டதும் உணர்கிறார் வழிகாட்டியவர் வரதராஜர் என்று!
தலத்தின் சிறப்புகள்!
அத்திகிரி, திருக்கச்சி என்பது தலத்தின் தொன்மையான பெயர்கள்.
திருக்குளத்தின் கிழக்கில் இருக்கும் சக்கரத்தாழ்வார் மிகப் பெரிய திருமேனி. 16 கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்திக் காட்சி தருகிறார்.
இன்னும் ஆலயத்தின், ஆண்டவனின் சிறப்புகள் ஏராளம்.
திருவிழா : பிரம்மோற்ஸவம்- வைகாசி - 10 நாட்கள் திருவிழா - பௌர்ணமி விசாக நட்சத்திரத்தன்று நடக்கும் இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். நவராத்திரி - புரட்டாசி - 10 நாட்கள் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். வைகுண்ட ஏகாதசி மற்றும் புது வருடப் பிறப்பின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். தவிர மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது.
வைகாசி மாதத்தில் உற்சவத் திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெறும்.
இவ் உற்சவத் திருவிழாவில் கருடசேவையும், தேரும் மிகப்பிரபலம்.
( குறிப்பு : வரும் 24/05/2013 அன்று கருடசேவையும், 27/05/2013 அன்று தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது.)
சக்கரத்தாழ்வார் : திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது.இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.
பிரம்மாவின் யாக அக்னியில் கிடைத்த மூர்த்தி, இங்கு முகத்தில் தழும்புடன் உற்சவராக இருக்கிறார். இதனால், இவருக்குப் படைக்கும் நைவேத்யத்தில் மிளகாய் சேர்ப்பதில்லை. இவரே இங்கு பிரதானம் பெற்றவர் என்பதால், பக்தர்கள் இவரைத் தரிசித்து விட்டே மூலவரைத் தரிசிக்கிறார்கள
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : நாரத முனிவர்,பிருகு முனிவர், பிரம்மா, ஆதிசேசன் கஜேந்திரன் ஆகியோருக்கு பெருமாள் காட்சி தந்த முக்கிய தலம்
இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது.
2000 ஆண்டுகள் முந்தைய பழமையான தலம்.பல்லவ மன்னர்கள் மற்றும் விஜயநகர
மன்னர்களால் திருப்பணிகள் நடைபெற்ற தலம்.
பிரார்த்தனை : இங்குள்ளபெருமாளை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்த
ஞானம் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும் சக்கரத்தாழ்வார் எனப்
பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதியில் இருக்கும் பெருமானை
வணங்கினால் திருமணத்தடை நீங்குகிறது.வழக்குகளில் வெற்றி
கிடைக்கிறது.வாழ்வில் வளமும் நிம்மதியும் கிடைக்கிறது என அனுபவித்தவர்கள்
கூறுகிறார்கள்.
தனி சன்னதியில் வீற்றிருக்கும் பெருந்தேவித் தாயாரை வணங்கினால் பெண்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் தீர்கின்றன.குழந்தை வரம் வேண்டுவோரும் தாயாரை வணங்குகின்றனர்
தங்கபல்லி: இவ்விடத்தில் தங்கபல்லி வெள்ளி பல்லிகளாக இருக்கும் சூரியன் சந்திரரை தரிசனம் செய்தால் நம்மீது பல்லி விழுவதால் உண்டாகும் தோஷங்களும் கிரகண தோஷங்களும் விலகி ஷேமம் உண்டாகும். நம் மனதில் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.
புத்திரதோஷம் உள்ளவர்கள் அமாவாசையுடன், திங்கள்கிழமை சேர்ந்த நாளில் அரசமரத்தையும், சன்னதியையும் சுற்றிவந்து வழிபடுகிறார்கள்.
நேர்த்திக்கடன் : பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தல், தாயாருக்கு புடவை சாத்துதல், மற்றும் சர்க்கரைப் பொங்கல் பெருமாளுக்கு படைத்தல் ஆகியவை இங்கு நேர்த்திகடன்களாக இருக்கின்றன.
பாடியவர்கள் : மங்களாசாஸனம்
பூத்தாழ்வார், திருமங்கையாழ்வார்,
பூதத்தாழ்வாரின் பைந்தமிழ்:
என்னெஞ்சம் மேயான் என் சென்னியான், தானவனை-
வன்னெஞ்சம் கீண்ட மணிவண்ணன், முன்னம்சேய்-
ஊழியான் ஊழி பெயர்த்தான், உலகேத்தும்-
ஆழியான் அத்தியூரான்.
அத்தியூரான் புள்ளை ஊர்வான், அணிமணியின்-
துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான், - மூத்தீ-
மறையாவான் மாகடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான்.
பக்தியுடன்
R.வஜ்ஜிரவேலு.
11/05/2013.