பயனர்:Tamilanban3000

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இளைமைப்பருவம்

நம் விக்கிப்பீடியாவில் எனது புனைபெயர் தமிழ் அன்பன். எனது இயற்பெயர் தில்லைகணபதி. நான் தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் வட்டத்தில் ஆப்பெரும்பட்டு என்ற சிற்றூரில் தந்தை ஆனந்தன், தாய் மங்கைநாயகி அம்மாள் ஆகியோருக்கு 29.09.1959 மகனாகப் பிறந்தேன்.


ஊர்ச்சிறப்பு

ஆப்பெரும்பட்டு என்ற ஊருக்கு அவ்வுர் பெரியவர்கள் இவ்வாறு விளக்கம் அளித்தனர். தமிழில் “ஆ“ என்றால் “பசு“ என்பது பொருளாகும். “பெரும்பட்டு” என்றால் “நிறைந்த ஊர்” என்று பொருள்படும். ஆக, “பசுக்கள் நிறைந்த ஊர்” என்றும் இலட்சுமிகடாட்சம் நிறைந்த ஊர் என்றும் சொல்வார்கள். நான் சிறுவனாக இருந்தபோது ஒவ்வொரு வீட்டிலும் நிறைய பசுக்கள் இருந்ததைக் கண்டிருக்கிறேன். என் வீட்டிலும் ஐந்தாறு பசுக்கள் இருந்தன. அவற்றுக்கென, தனி கொட்டிலும் உண்டு. இவ்வுர் புதுச்சேரிக்கு வடக்கேயும் 18கி.மீ, தற்போதைய சர்வதேசநகரமான ஆரோவில்லுக்கு வடக்கேயும் 5கி.மீ. தொலைவிலும், வங்காளவிரிகுடா மற்றும் கிழக்குக் கடற்கரை, புதுவைப்பல்கலைக் கழகம் இவற்றுக்கு மேற்கே சுமார் 6கி.மீ. தொலைவிலும் கழுவெளி நீர்த்தேக்கத்திற்கு தெற்கே சுமார் 6கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ள ஒரு தொன்மையான ஊர். ஊரின் தென்கிழக்கே ஓர் பழமையான செம்மண் ஏரி ஒன்று உள்ளது. அவ்வேரியின் அணையில் நெடிதுயர்ந்த பனைமரங்களும் செந்தூர மரங்களும் உண்டு. அடிப்படையில் இது ஒரு விவசாய கிராமம். நெல், வேர்க்கடலை, கேழ்வரகு, கம்பு, தினை, வரகு, வாழை, மஞ்சள், பருத்தி, மிளகாய், கத்தரி, வெண்டை, தக்காளி என எல்லா வகையான பயிர்களும் விளையும் மண்வளத்தை உடைய ஊர். பேரெழில் கொஞ்சும் வனப்பு மிகுந்த ஊர். ஆனால், இன்றைக்கு மாறிவரும் சமுதாயச்சூழலில் பல்வேறு காரணங்களால் விவசாய உற்பத்தி பெரிதும் குறைந்து இளைஞர்கள் தங்கள் வருமானத்திற்கான தொழிலை மாற்றிக்கொண்டுள்ளனர். எனினும், இத்தருணம் வரை இந்த ஊர் இயற்கையின் வலிவும் பொலிவும் மாறாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.


பெயர்க்காரணம்

எனக்கு பெயரிட்டதற்கும் ஒரு சிறுவரலாற்றை என் தந்தை கூறுவார். அவருக்கு இப்போது 94 வயது. எனது தாயார் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்புதான் காலமானார். எனது பெற்றோருக்கு மொத்தம் 5 குழந்தைகள் பிறந்தன. எனக்கு முன் பிறந்த 4 குழந்தைகளில் இருவர் ஆண்குழந்தைகள். இருவர் பெண்குழந்தைகள். அந்தக்காலத்தில் காலரா, அம்மை போன்ற கொள்ளை நோய்களுக்கு நிறைய பேர் பலியானார்கள். என்னுடைய 2 அண்ணன்களும் 1 அக்காளும் அவ்வாறு சிறுவயதில் நோயினால் பாதிக்கப்பட்டு காலமானார்கள். எனக்கு முன்பாக என் ஒரே ஒரு அக்காள் மட்டும் உயிர் பிழைத்தார். அடுத்தபடியாக, என் தாயார் கருவுற்ற சமயத்தில், தமக்கு ஓர் ஆண்மகவு வேண்டும் என்று சிதம்பரம் தில்லை காளியம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனைத் தரிசித்து என் தந்தை வேண்டினார். தமக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறக்கவேண்டும் என்றும் அது நீண்டநாள் வாழவேண்டும் என்றும் அவ்வாறு இருந்தால், அந்த ஆண் குழந்தைக்கு தில்லை காளியம்மனின் (பார்வதியின்) மூத்த மகனான கணபதியின் பெயரை இட்டு வழங்குவதாகவும் மேலும் அவர் வேண்டிக்கொண்டார். விரும்பியவாறு ஆண்குழந்தையும் பிறந்தது. அதற்கு ”தில்லை கணபதி” என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.


படிப்பு

நான் என் சொந்த ஊரில் 5ஆம் வகுப்பு வரையும் அருகிலுள்ள கழுப்பெரும்பாக்கம் என்ற ஊரில் 8ஆம் வகுப்பு வரையும் படித்தேன். அதுவரை படிப்பில் முதல் மாணவனாகத் திகழ்ந்து வந்தேன். பிறகு, 1973ல் புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் திருச்சிற்றம்பலம் கூட்டுப்பாதையில் அமைந்துள்ள காந்தி உயர்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி படித்து முடித்தேன். நான் சிறுவனாக இருந்தபோது, அடிக்கடி உடல்நிலை பாதித்ததால், உடல் மெலிந்து பலவீனமாக இருப்பேன். எங்கள் ஊருக்கும் உயர்நிலைப்பள்ளிக்கும் போய்வர தொத்தம் 12கி.மீ. நானும் பலரும் அப்போது சைக்களில் சென்று வருவோம். இன்னும் சில மாணவர்கள் இத்தூரத்தை நடந்தே செல்வார்கள். இதன்காரணமாக, படிப்பில் அதிகக் கவனம் செலுத்த இயலவில்லை.


மேற்கல்வி

நான் சென்னை கந்தசாமி கல்லூரியில் பியுசி 1976ல் முடித்தேன். குடும்பச்சூழ்நிலை காரணமாக ஒரு ஆண்டு படிப்பைத் தொடர முடியவில்லை. பிறகு, 1977-80ஆம் ஆண்டு வரை பச்சையப்பன் கல்லூரியில் வரலாற்றில் பட்டப்படிப்பை முடித்தேன். இங்குதான் என் அறிவுக்கண்கள் முழுவதும் திறக்கப்பட்டன. தலைசிறந்த கல்லூரிப் பேராசிரியர்கள் எங்களுக்குப் பாடங்களை நடத்தினார்கள். பெரிய நூலக வசதி, பல்வேறு அறிஞர் பெருமக்கள், கலைஞர்கள், கவிஞர்கள் ஆகியோர் நிகழ்த்திய உரைகள் ஆகியவற்றின் மூலம் எனது அறிவு பட்டைத் தீட்டப்பட்டது. தமிழ் ஆர்வம் மேலோங்கியது. ஆங்கிலம் கற்கவேண்டும் என்ற மோகம் வளரத் தொடங்கியது.

அதன்பிறகு, 1980ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் பட்டமேற்படிப்பு படித்தேன். கல்வியலில் பட்டப்படிப்பும் தொழிலாளர் சட்டத்துறையில் பட்டையப்படிப்பும் முடித்துள்ளேன். எனக்கு வரும் 29.09.2009ல் 50 வயது ஆகின்றது. நான் வியாபாரம், ஆசிரியர், நிர்வாகம் போன்ற துறைகளில் பணியாற்றி உள்ளேன். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக மொழிபெயர்ப்புத் துறையில் பணியாற்றி வருகின்றேன். பல்வேறு புத்தகங்களை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளேன். பல்வேறு புத்தகங்கள் வெளியிட துணைபுரிந்துள்ளேன். ஆன்மிகம், கல்வி, மொழியியல், விலங்குகள், காடுகள், வணிகம், செயல்திட்டம், இயற்கை விவசாயம், மழைநீர் சேகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை போன்ற துறைகளில் பல கட்டுரைகளையும் கதைகளையும் புத்தகங்களையும் எழுதியுள்ளேன் அல்லது தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ளேன். இப்பணி தொடர்கிறது. ஒரு மாதாந்திர சிற்றேட்டிற்கும் சிறு வாரச் செய்திக்கும் ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.

விக்கிப்பீடியாவில் வெளியிடப்படுகின்ற கலைக்களஞ்சியம், பல அரிய தகவல்கள் அண்மைக்காலமாக தவறாமல் படித்து பயனுற்று வரும் பல்லாயிரக்கணக்காண தமிழர்களில் நானும் ஒருவன். பயனுறுவது மட்டும்போதாது, நமக்குள் உள்ள திறன்களை, திறமைகளை வெளிக்கொணரவும் பகிர்ந்துகொள்ளவும் விக்கிப்பீடியா மனந்திறந்து இருகரங்களைக்கூப்பி வரவேற்கின்றது. இந்த அரிய, பெரிய பணியில் நானும் இணைந்து என்னால் முடிகின்ற பணிகளைச் செய்ய தற்போது முன்வந்துள்ளேன். குறிப்பாக, மொழிபெயர்ப்பு பணியில் இங்கே நிறைய செய்திட வேண்டியுள்ளது என்பதை அறிகின்றேன். அதற்கு என் பணியைச் செய்வேன். வணக்கம்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!! --Tamilanban3000 16:20, 29 ஆகஸ்ட் 2009 (UTC)—

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tamilanban3000&oldid=422322" இருந்து மீள்விக்கப்பட்டது