பயனர்:TNSE THENDRALKKDI SVG/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

                   அமலா ஸ்டான்லி       

        தமிழ் நாட்டிலிருந்து வெகு தொலைவில், வேற்று மொழிகள் பேசப்படும் ஒரு மாநிலத்தில், தானே என்னும் மஹாராஷ்டிராவின் புறநகர்ப் பகுதியொன்றில் ஒரு ஆங்கிலவழிக் கல்வி நிறுவனத்தின் முதல்வராகப் பணியாற்றியவர் அமலா ஸ்டான்லி. இன்றும் அன்னைத் தமிழை விடாது போற்றுகின்றார் என்பது பெரு வியப்பே. தாய் மொழியில் கல்வி கற்கும் பொழுதுதான் குழந்தையின் சிந்தனைத் திறன் முழுவீச்சில் தூண்டப்படுகிறது என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டு செயலாற்றி வருகிறார்.

       ”கற்பதும் கற்பிப்பதும்” என்ற நூலில், இருபது தலைப்புகளில் தனது கல்விப் பணிகள் குறித்த அனுபவங்கள், தான் எதிர் கொண்ட கற்றல் - கற்பித்தல் சார் சிக்கல்கள், மாணவக் குழந்தைகள் வீட்டிலும் பள்ளியிலும் எதிர் கொள்ளும் பிரசினைகள், அவற்றின் உளவியல் தாக்கங்கள் ஆகியவற்றை மிக அழகாகத் தொகுத்தளித்ததோடு மட்டுமல்லாமல், வகுப்பறைச் சிக்கல்கள் மற்றும் மாணவர்களின் பிரசினைகளுக்குக் காணவேண்டிய தீர்வுகளையும் மிகச் சாதாரணமாக ஆங்காங்கே கூறியிருக்கிறார்..

ஆசிரியர்களுக்கான நூலோ இது என்று தலைப்பைப் பார்த்ததும் தன்னியல்பாய் ஒரு கேள்வி எழலாம். ஆனால் , ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என்ற மூன்று புள்ளிகளும் மிகச் சரியான கோணத்தில் அமையும்போது மட்டுமே கல்வி என்னும் வண்ணக்கோலம்  அழகும் உயிர்ப்பும் பெறும். இந்தச் சூட்சுமத்தை நன்கு அறிந்திருக்கின்றார் நூலாசிரியர் என்பது அவரது கட்டுரைகளில் தெளிவாகப் புலனாகின்றது.

      ”வாழ வழி காட்டும் கல்வி” என்னும் முதல் கட்டுரையில், மாணவர்களுக்கும், ஒரு ஆசிரியராகத் தனக்கும் இடையே உள்ள நல்லுறவை அவர் உணர்ந்த விதமும், மாணவர்களிடம் தான் கற்றுக் கொண்டேன் என்று வெளிப்படையாக உரைக்கும் துணிவும் ஓர் நல்லாசானின் எழுத்துகளைப் படித்துக் கொண்டிருக்கின்றோம் என்ற ஒரு ஆரோக்கிய மனநிலையை வாசகர்களிடம் ஏற்படுத்தி விடுவது திண்ணம்.

       ஒவ்வொரு வகுப்பறையிலும் நடக்கும் யதார்த்தத்தை எவ்வளவு அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் என்பதற்குச் சாட்சியான அவரது வரிகள்: “அவனுக்குத் தேவையானவை என்று அவர்கள் நினைத்ததை எல்லாம் கொடுத்தவர்கள், அவனுக்கு உண்மையில் என்ன தேவையென்று அறிந்துகொள்ள முயற்சிப்பது இல்லை”. இன்றும் தொடரும் அவலம் இது. பல பள்ளிகளிலும் கட்டட வசதிகள், தொழில் நுட்பக் கருவிகள், கழிப்பறை வசதிகள், விழாக்கள் கொண்டாடுதல் என்று பல வகைகளிலும் கற்றல் சூழல் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இது வரவேற்கத் தகுந்த மாற்றமே. ஆயினும் குதிரைக்குத் தண்ணீரைக் காட்டலாம்; குடிக்க வைக்க முடியாது என்பதை உணராத கற்பித்தல் சூழல்தான் தொடர்கிறது. இதை நன்கு வெளிப்படுத்துகிறார் நூலாசிரியர்.

        குழந்தைகளுக்குக் கட்டுப்பாடுடன் கூடிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்பதைக் “குழப்பமும் தெளிவும்” என்ற கட்டுரையில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். தவறு செய்யும் குழந்தைகளைத் திருத்தும் நோக்கத்தில் கண்டிப்பும் தண்டனையும் இருக்க வேண்டுமே ஒழிய, நம் கோபத்தைத் தீர்க்கும் சாதனங்களாக இருக்கக் கூடாது என்று பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்  “கண்டிப்பும் தண்டனையும்” என்ற கட்டுரையில் அறிவுறுத்தும் இவர், தீவினையற்ற ஆன்மீகத்தைப் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுப்போம் என்ற அருமையானதொரு தீர்வையும்  முன்மொழிந்திருக்கின்றார்.

         மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நன்கு பரிச்சயமான திரைப்பட நகைச்சுவைத் துணுக்குகளைத் தன் கட்டுரைகளில் தேவையான இடங்களில் கலந்து அளித்திருப்பது இன்சுவைப் பாலில் இட்ட சர்க்கரை போல் மேலும் இன்பமளிக்கிறது.

         ஒரு மாணவன் அறிவுள்ளவன் என்பதை அவன் பெறும் மதிப்பெண்களை மட்டும் வைத்து மதிப்பிடுவது எவ்வளவு அபத்தமானது என்பதை  மிகவும் மென்மையாக ஆனால் அழுத்தமாக “அறிவுதான் மானுட அடையாளம்” கட்டுரையில் விளக்கிச் சொல்லியிருப்பதோடு தன் கடமை முற்றுப் பெற்றதாக நினைக்காமல், உண்மையில் மதிப்பீட்டு முறை என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் தன் பாணியில்  சிறப்பாக வரையறுத்துச் சொல்லியிருப்பது குறிப்பிடத்தகுந்த நல்வழியாகும்.

       முயற்சியுடையார், தோல்வியே வெற்றிக்கு அடிப்படை, நல்லுறவாய் நட்புறவுகள், ஒளிமயமான எதிர்காலம் என்ற தலைப்புகளில் வரையப்பட்டுள்ள கட்டுரைகளில் ஆசிரியரின் நேர்மறைச் சிந்தனையே  அதிகம் வெளிப்படுகிறது. மாணவர்களை ஊக்கப்படுத்தும் காரணிகள் அவர்களுக்கு எவ்வகையிலும்  மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்ற நோக்கில்  மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன்  கருத்துகள் விதைகளாகத் தெளிக்கப்பட்டுள்ளன.

       “நலமே நாடும் நல்லாசிரியர்கள்” கட்டுரையில், ஆசிரியர்கள் தங்களை அன்றாடம் மாறி வரும் சூழலுக்கேற்ப  மென்மேலும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும்  மாணவர்களுடன் அவசியமான நல்லிணக்க உறவைப் பேண வேண்டும் என்பதையும்  தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார் அமலா ஸ்டான்லி அவர்கள். 

       கல்வியின் வெற்றி, தீதும் நன்றும், புதிதாய்ப் பிறப்போம் போன்ற கட்டுரைகளில்  புதிய மாற்றங்கள் வரவேற்பு, புதிய பாடத்திட்டம் அறிமுகம், வாழ்க்கை நெறிகளைக் கற்றுக் கொடுத்தல், சிந்தனைத் திறனை வளர்த்தல் ஆகிய மாணவர் மேம்பாட்டுக் கருத்துகள் உரிய உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.

        தம்மை உணர்ந்து, தம்மின் பலம் தெரிந்து,  அறியாமை இருள் அகற்றி, இளைஞர்கள் திறம்படச் செயல்பட்டு  வாழ்க்கையில் வெற்றியடைய, ஆசிரியர்களும்  பெற்றோரும் துணை புரிவோம் என்று அழைப்பு விடுத்திருப்பது இந்நூலின் மிகச் சிறந்த பகுதியாகத் தோன்றுகிறது.  ஒரு செடியில் பூ ஒன்று மலர்வது போல், இயல்பாக, இயற்கையாக, வெகு அழகாகக் கற்றல் நிகழ வேண்டும் என ஆசைப்படும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல் இது என்று உறுதியாகக் கூறலாம்.

                                      பொதிகை பதிப்பகம்,

   முலுண்ட், மும்பை-80

                                      அலைபேசி எண்: 98200 46075