பயனர்:TNSE KAVITHAYINI TRY/மணல்தொட்டி/seabed

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


அறிமுகம்[தொகு]

கடலடி நிலத்தோற்றம் என்பது கடலின் அடிப்பகுதியில் உள்ள நில அமைப்பை குறிப்பதாகும். அதிசயமும் ஆச்சரியமும் நிறைந்த ஆழ்கடல் மற்றொரு உலகத்திற்குச் சமமானது. பூமியில் 70.8 விழுக்காடு கடல் நீர் நிறைந்துள்ளது. பருவக்காற்றும் பெய்யும் மழையும் நிலவும் வானிலையும் என பலவற்றைப் பெரும்பான்மை பரப்பான கடலே நிர்ணயிக்கின்றது. கடல் வழங்கிவரும் கடல் உணவும் பிற தாதுச் செல்வங்களும் எரிபொருளும் எரிவாயுவும் கொஞ்சமல்ல. கடலடி சிக்கலான புவி அமைப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

கடலடி நிலத்தோற்றத்தின் அமைப்பு[தொகு]

அனைத்து பெருங்கடல்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியான இயற்கை அமைப்பை உடையது. குறிப்பாக கண்டத்தட்டுகளின் இயக்கமும் கடல் அடையலும் இவ்வமைப்பிற்கான முக்கிய காரணிகளாகும். பெருங்கடல்களின் அமைவிடம் கடலடி கண்டப்பகுதியில் துவங்கி கண்டச் சரிவு வரையிலும் நீள்கிறது.

கடலடி நிலத்தோற்றம்[தொகு]

கடல் முகடுகள் அல்லது கடல் மலைத் தொடர்கள் மற்றும் கடல் விரிசல்கள்[தொகு]

கடல் முகடுகளும் கடல் விரிசல்களும் அருகருகே உள்ள புவியியல் அமைப்புகளாகும். இவற்றுள் முக்கியமானது கடல் மைய முகடுகள் ஆகும். இவை அனைத்து கடல் பகுதிகளிலும் தொடர்ச்சியாகப் பரந்து காணப்படுகின்றன. இதில் ஒரு கிளை அட்லாண்டிக் கடல் மையப் பகுதியையும் ஆக்கிரமித்து ஆப்ரிக்கா அண்டார்டிக்காவின் இடையில் சென்று வடக்காக வளைந்து இந்தியப் பெருங்கடலின் மையம் வரை வந்து முடிவடைகிறது. மற்றொரு கிளை ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிக்கா இடையாகச் சென்று கலிபோர்னியா வளைகுடாவில் முடிகிறது. இவை கடல் சமவெளியிலிருந்து 6000 மீட்டர் உயரம் வரை காணப்படுகின்றன. இவை இடையிடையே கடல் விரிசல்களால் குறுக்கிடப்படுகின்றன. ஒன்றுக்கொன்று 90 டிகிரி செங்குத்தாக குறுக்கிடுகின்றன.இந்த முகடுப்பகுதியில் தான் புதிதாக கடல் பரப்புகள் தோற்றுவிக்கப்படுகின்றன. மேலும் அதிகமான நில நடுக்கங்களும் உண்டாகின்றன. எடுத்துக்காட்டு: மத்திய அட்லாண்டிக் முகடு (அட்லாண்டிக் கடல்) 90 டிகிரி கிழக்கு முகடு (இந்தியப் பெருங்கடல்). இங்கு ஹவாய் தீவுகள் அமைந்துள்ளன. இந்த முகடுகளில் தான் பூகம்பம் அடிக்கடி நிகழ்கின்றன.

கடல் அகழிகள்[தொகு]

கடல் அகழிகள் கடலடியிலுள்ள பெரு நீளப்பள்ளங்கள்.கடல் முகடுகளுக்கு நேர் எதிரானவை. அகழிகள் பொதுவான கடலடி மட்டத்திலிருந்து 6000 மீட்டருக்கு கீழே திடீரென்று சென்று செங்குத்தான பள்ளத்தாக்காக காணப்படும். இவை ஏ வடிவில் காணப்படும். உலகத்திலேயே தாழ்வான பகுதிகள் இந்த அகழிகள் தான். எடுத்துக்காட்டு: மரியானா அகழி

தீவுத்திட்டுகள்[தொகு]

கடல் அகழிகளும் தீவுத்திட்டுகளும் ஒன்றோடொன்று தொடர்புடையன. அதனால் தான் அகழிக்கு அருகில் தீவுகள் உள்ளன. உதாரணம் பிலிப்பைன் அகழிக்கு அருகிலுள்ள பிலிப்பைன் தீவுக் கூட்டங்கள். ஜாவா அகழிக்கு அருகிலுள்ள ஜாவா சுமத்ரா தீவுக் கூட்டங்கள். இவ்விடங்களில் பூகம்பமும் எரிமலை வெடிப்பும் நிகழ வாய்ப்புகள் அதிகம். அத்துடன் சுனாமி போன்ற பேரலைகளும் உண்டாகும். உலகில் மிகப் பெரிய பூகம்பம் (9.2 ரிக்டர் அளவு) அலாஸ்கா அருகே உள்ள அலூட்டின் டிரஞ்ச் அருகே ஏற்பட்டது. பசிபிக் நெருப்பு வளையத்தை சுற்றிலும் எரிமலைகள் காணப்படுகின்றன.

கடல் மலைத் தொடர்கள்[தொகு]

கடலிலிருந்து உயர்ந்து கூம்பு வடிவில் காணப்படும் நில அமைப்பை கடல் மலைத் தொடர்கள் என்கிறோம். இவை பெரும்பாலும் அழிந்து போன எரிமலைகள் உயர்ந்து காணப்படுவதால் ஏற்படுகின்றன. இவை குறைந்தபட்சம் 3300 அடியிலிருந்து அதிகபட்சம் 13100 அடி வரை உயர்ந்து காணப்படும். இவற்றின் சிகரங்கள் ஆழ்கடலின் அடியில் 100 முதல் 1000 அடி ஆழத்திலேயே காணப்படுகின்றன. கடலடி பரப்பில் இதுவரையிலும் சுமார் 9951 மலைத்தொடர்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையான மலைத்தொடர்கள் வடபசிபிக் பெருங்கடலின் ஆழ்கடல் பரப்பிலேயே உள்ளன.

கயோட்டுகள்-கடல் கிணறுகள்[தொகு]

கவிழ்ந்த கூம்பு வடிவில் இருக்கும் கடலடி நிலப்பரப்பை கடல் கிணறுகள் என்கிறோம். கடலடியிலிருக்கும் அழிந்த எரிமலைகள் சிலவற்றின் மேல் பகுதி சுமார் 200 மீட்டர் (660 அடி) வரை தட்டையாக காணப்படும் அமைப்பையே கடல் கிணறுகள் என்கிறோம். புரலழவள என்னும் ஆங்கில பெயர் இந்நில அமைப்பிற்க்கு அர்னால்ட் ஹென்றி கியாட் என்னும் புவியியலாளரின் நினைவாக சூட்டப்பட்டுள்ளது. கடல் கிணறுகள் பெரும்பாலும் பசிபிக் பெருங்கடலடியில் அதிகம் காணப்படுகின்றன. கடல் கிணறுகளில் பெரியதாக கருதப்படுவது வடகிழக்கு அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள “கிரேட் மீடீர்” கடல்கிணறு ஆகும். இதன் மேற்பகுதி 4000 மீட்டர் (13123அடி) அளவுடையது.கடல்கிணறுகள் முதன்முதலில் ஹாரி ஹேமண்ட் ஹேஸ் என்பவரால் 1945ஆம் ஆண்டு ஒலி எதிரொலிப்புக் கருவியைக் கொண்டு கண்டறியப்பட்டது.

கடல் படிவுகள்[தொகு]

கடல் படிவுகள் என்பன இயற்கையாகக் காணப்படும் மூலப்பொருட்கள் புவியின் தட்பவெப்பநிலை மாற்றங்கள் மற்றும் அரிப்பு காரணமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்தப்பட்டு உருவாக்கப்படுகின்றன.

கடல் சமவெளிகள்[தொகு]

கடலுக்கடியில் 3000 மீட்டர் (9800 அடி) ஆழத்திலிருந்து 6000 மீட்டர் (20000 அடி) ஆழம் வரையிலும் அமையப்பெற்ற சமமான நிலப்பரப்பை கடலடி சமவெளிகள் என்கிறோம். இவை கண்டத்திட்டுகளின் நிறைவுப் பகுதியில் துவங்கி கடல் முகடுகள் வரை பரவிக் காணப்படுகின்றன. இவை அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் பரந்துள்ளன. இங்கே அதிகப்படியான படிவுகள் காணப்படும்.

மேற்கோள் நூல்கள்[தொகு]

இயற்கைப் பேரழிவுகளும் பாதுகாப்பும் - டாக்டர். வெ.சுந்தரராஜ் மற்றும் டாக்டர்.ப.நம்மாழ்வார் ஆழ்கடல் அதிசயங்கள் - டாக்டர். வெ.சுந்தரராஜ்