பயனர்:TNSE ARUN VPM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறுகதை

திரைகடலோடியும் திரவியம் தேடு..

“அப்பா,விஷேசத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே வந்துடுங்கப்பா” என்ற தன் மகளிடம், “நிச்சயமா வந்துடுவேன்” என்று சொல்லி செல்பேசியை வைத்தான் முருகன். முகப்புத்தகத்தை திறந்ததும் “சொந்த ஊருல வாழறது தான்டா கெத்து” என்று யாரோ ஒரு நண்பன் பகிர்ந்திருந்ததை விருப்பம் தெரிவித்து பகிர்ந்துவிட்டு வேலைக்கு செல்ல தயாரானான் முருகன்.

முருகனுக்கு இது நான்காவது வெளிநாட்டு பயணம். வயதான பெற்றோர், காதலித்து திருமணம் செய்த மனைவி, இவர்களை விட்டு, காய்ந்து போன தன் இரண்டு ஏக்கர் நிலத்தால் இனி பயனில்லை என்று முடிவு செய்து நிலத்தை குத்தகைக்கு விட்டு அந்த பணத்தைக் கொண்டு மலேசியா  செல்வதென முடிவாகி ஆறு மாத கர்ப்பிணியான தன் மனைவியை விட்டு பிழைப்பு தேடி வெளிநாடு சென்றான்.

கட்டிட வேலைதான் முதலில் கிடைத்தது. ஐ.டி.ஐ படித்திருந்தான், நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தான் என்பதால் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு மலேசியா வந்தான். தன்னம்பிக்கை, உழைப்பு, நேர்மை, திறமையினால் உலகளாவிய ஓட்டுநர் உரிமம் பெற்றான். ஓட்டுநர் வேலை கிடைத்தது. நல்ல சம்பளம். வாழ்க்கையில் சிறிதாக மேலே உயர்ந்தான்.மனைவியின் முதல் பிரசவத்திற்கு ஊர் திரும்பினான். பிறந்தது பெண்பிள்ளை. நிலத்தையும் மீட்டான்.

பருவமழை மீண்டும் பொய்த்ததாலும், பிறந்திருக்கும் பெண் பிள்ளையை நன்றாக வளர்த்து ஆளாக்க வேண்டியிருந்தாதலும் மீண்டும் வெளிநாடு செல்ல முடிவெடுத்தான். இடையிடையே வந்து சென்றாலும் தனது இரண்டாவது பெண்பிள்ளை பிறந்தபோது தன் மனைவியோடு இருக்க முடியாத நிலை வந்தபோது கலங்கினான்.

இப்பொழுது இரண்டு பிள்ளைகளுக்கும் காதணி விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை இங்கிருந்தபடியே தயார் செய்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு தன் வீட்டில் நடக்கும் விஷேசம் என்பதால் கொஞ்சம் ஆடம்பரமாகவே ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. ஒரு வாரம் முன்னதாகவே வரச்சொல்லி அழைத்திருந்தாள் பெரிய பிள்ளை. இரண்டாவது பிள்ளையை இன்னும் நேரில் பார்க்கவில்லை.

இந்த முறை வந்திருந்த வெளிநாட்டு பயணத்தால் தான் சம்பாதித்த அத்தனை பணத்தையும் ஒன்று சேர்த்து நிலத்தை மீட்டு, ஏதாவதொரு நான்கு சக்கர வாகனம் வாங்கி மீதி காலத்தை பிள்ளைகளோடு கழித்திட வேண்டும் என்ற எண்ண ஓட்டத்திலேயே வாகனத்தை செலுத்தினான். திட்டமிட்டபடி  வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமே என்று பெருமூச்சு விட்டபடி வாகனத்தை செலுத்த, எங்கிருந்தோ ஒரு வாகனம் குறுக்கே வர, வண்டியோடு சேர்ந்து வாழ்க்கையும் புரண்டது. ஓட்டுநர் உரிமம் பறிக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு வாகனம் இயக்க அனுமதி மறுக்கப்பட்டது. விபத்தில் எதிராளிக்கு ஏற்பட்ட காயங்களுக்கு நஷ்ட ஈடாக பெருந்தொகை கட்ட வேண்டிய நிலைக்கு ஆளாகினான். கையிருப்பு கரைந்தது. ஊர் திரும்பவும், விஷேசத்தை நல்ல படியாக நடத்தவும் மீண்டும் நிலம் குத்தகைக்கு விடப்பட்டது.

ஊர் திரும்பிய முருகன் தன் மகள்களின் காதணி விழாவினை முடித்து ஓரிரு மாதமாகியும் எந்த நிரந்தர வேலையும் கிடைக்காத சோகத்தோடு வீட்டிற்கு வந்து சற்று இளைப்பாறியபின் செல்பேசியில் முகப்புத்தகத்தை திறந்தான். முகப்புத்தகம் முழுவதும் போராளிகளால் நிறைந்திருந்தது. சல்லிக்கட்டு, நெடுவாசல், விவசாயிகளின் போராட்டம் என பரபரப்பாக இருந்தது. யாரோ ஒரு நண்பர் தன்னுடைய பதிவிற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். “சொந்த ஊருல வாழறது தான்டா கெத்து” என்ற அப்பதிவினை மறுபகிர்வு செய்துவிட்டு முகப்புத்தகத்தை விட்டு வெளியே வந்து யாருக்கோ அழைப்பு விடுத்தான்.

“ அண்ணே விசா ரெடி ஆயுடுச்சாண்ணே??? எந்த வேலையா இருந்தாலும் பரவா இல்லண்ணே!!!” என்று சொல்லிவிட்டு செல்பேசியை வைத்த முருகனை இரண்டு பெண்பிள்ளைகளும் வெறித்து பார்த்து கொண்டிருந்தார்கள்..

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_ARUN_VPM/மணல்தொட்டி&oldid=2259593" இலிருந்து மீள்விக்கப்பட்டது