பயனர்:Raja Shanmuga Sundaram/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ச ராஜாபாதர்
1980களில் ராஜாபாதர்
பிறப்புமயிலாடுதுறை, தமிழ் நாடு, இந்தியா
அமைப்பு(கள்)இந்தியப் பொதுவுடைமை இயக்கம்
அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம்

ச ராஜாபாதர் (27 மே 1916) விடுதலைப் போராட்டத்திலும், இந்தியப் பொதுவுடைமை இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். மக்களுக்காகவும், அவர் கொண்ட நம்பிக்கைகளுக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.

பிறப்பும், குடும்பப் பின்புலமும்[தொகு]


ராஜாபாதர் பிறந்தது மே மாதம் 27ம் நாள், 1916ம் வருடம் என்று குறிப்புகள் கிடைக்கின்றன. ஆனால், இது நம்பத் தகுந்தது அல்ல என்று தோன்றுகிறது. அவருக்கு முதலில் வைத்த பெயர் தேவ சங்கரன். ஆனால், சிறு வயதிலிருந்தே ராஜாபாதர் என்று ஏனோ அழைத்து, அதுவே பழக்கமாகி விட்டது. ராஜாபாதரின் தந்தை பெயர் சண்முகம் பிள்ளை. தாயார் பெயர் கற்பகவல்லி. பிறந்த ஊர் மயிலாடுதுறை.

அவருக்குக் கூடப் பிறந்தவர்கள் இரண்டு ஆண்கள், ஒரு பெண் என்பதும், எல்லோரும் நல்ல செல்வாக்குடன் இருந்தார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றிரண்டு தலைமுறைக்கு முன் சென்னையிலிருந்து மயிலாடுதுறைக்கு இடம் பெயர்ந்திருக்க வேண்டும். காரணம் ராஜாபாதர் என்ற பெயர் சென்னை பகுதிகளில் வழக்கத்தில் உள்ள பெயரே அன்றி, தஞ்சை மாவட்டத்தில் காணப்படும் பெயர் அல்ல. இரண்டாவது காரணம், ராஜாபாதரின் குல தெய்வம் சென்னைக்கு அருகிலுள்ள குன்றத்தூர் பொன்னியம்மன். எது எப்படியாயினும், இந்தப் பெயர் மாற்றத்தில் ஒரு நன்மை இருந்தது. ராஜாபாதர், மயிலாடுதுறை என்று கடிதம் எழுதினாலே, அவரது வீட்டிற்கு சரியாக வந்து விடும்.

அவரது தந்தையும், தந்தையின் உடன் பிறந்தோரும் மயிலாடுதுறையில் வணிகத்தில் ஈடுபட்டிருந்தார்கள். பல் பொருள் அங்காடி. கடைகளாகவும் இருக்கலாம். ராஜாபாதரின் அம்மா, கற்பகவல்லி, வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரது முன்னோர் பர்மாவில் இருந்திருக்க வேண்டும். காரணம், அவர்களுக்கு பர்மிய மொழி தெரியும். ராஜாபாதரின் கூடப் பிறந்தவர்கள் வேதவல்லி என்கிற பட்டம்மாள் மற்றும் ராஜாமணி என்ற பெண்களும், ராமலிங்கம் என்ற ஆணும்.

குழந்தைப் பருவம்[தொகு]


ராஜாபாதர், அவரது தலைமுறையில் முதலில் பிறந்த ஆண் குழந்தை. 10 வருடம் கழித்துத்தான் அடுத்த ஆண் குழந்தை பிறந்தது. அதனால், மிகவும் செல்லமாக வளர்க்கப் பட்டார். ஒரு வகையில் பார்த்தால், அவரது வாழ்வில் முதல் பத்து வருடங்களும், கடைசி ஐந்து வருடங்களும் தான் கொஞ்சம் நிம்மதியான வாழ்க்கை அமைந்தது என்று சொல்ல வேண்டும்.

ராஜாபாதருக்கு பத்து வயது இருக்கும் போது, அவரது தந்தை அவரது நண்பருக்குப் போட்ட உத்திரவாதக் கையெழுத்து மூன்று குடும்பங்களையும் ஒருசேரக் கவிழ்த்தது. ஒரே நாளில் ராஜாபாதரின் தந்தை சொத்துக்கள் அனைத்தையும் இழந்தார். சொத்துப் பிரிவினை செய்யப்பட்டு விட்டாலும், குடும்பப் பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடாது என்று அவரது கூடப் பிறந்தவர்களும் தங்கள் சொத்துக்களை எழுதிக் கொடுத்து, அனைவரும் தெருவுக்கு வந்து விட்டார்கள். ராஜாபாதருக்கு அப்போது 12 வயது. எட்டாவது படித்துக் கொண்டிருக்கிறார். சொத்துக்கள் அனைத்தும் போன நிலையில், மிச்சமிருந்தது 100 பவுன் நகை மட்டும். வீடு, கடைகள் அனைத்தும் போய்விட்ட நிலையில், நகையை சொந்தக்காரர் ஒருவரிடம் பாதுகாப்புக்காக கொடுத்து வைத்துள்ளார்கள். மறுபடியும் கடை ஆரம்பிக்கலாம் என்று நகைகளைக் கேட்ட போது, திருட்டுப் போய் விட்டது என்று தர மறுத்துவிட்டார். இருந்த ஒரு நம்பிக்கையும் போனதில் மனமுடைந்து ராஜாபாதரின் தந்தை இறந்து விட்டார். ராஜாபாதரின் படிப்பு நிறுத்தப்பட்டது. கடலை மிட்டாய்களை வாங்கி, கடைகளுக்கு போடும் வேலை செய்ய ஆரம்பித்துள்ளார். ராஜாபாதரின் அம்மா அரிசி குத்தி சிறிது பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார். ராஜாபாதரின் தம்பி சிறு குழந்தை. இந்த வாழ்க்கை கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் தொடர்கிறது. இதைப் பற்றி பின்னர் குறிப்பிடும் போது, அவர் சொன்னது "கொடிதிலும் கொடிது இளமையில் வறுமை" என்று மட்டும் தான். செல்வ வாழ்க்கை வாழ்ந்து விட்டு, திடீரென்று வறுமை எய்துதல், அதுவும் 12 வயதில் குடும்பத்தை நடத்தப் பணம் ஈட்ட வேண்டிய நிலை, மிகவும் கடினமான ஒன்றாகத் தான் இருந்திருக்க வேண்டும்.

இளமைப் பருவம் / மலேசியா, சிங்கப்பூர் வாழ்க்கை[தொகு]


நாகையில் திருமணம் செய்து கொடுத்த ராஜாபாதரின் அக்காவின் உறவினர்கள் மலேயாவில் கடை நடத்தி, மிகுந்த செல்வாக்குடன் இருந்தனர். அங்கு ராஜாபாதரை அனுப்பி, பிழைப்புக்கு வழி தேடிக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. தமிழர்கள் வழக்கமாகப் பயணம் செய்யும் S S ரஜூலாவில் பயணம். இது நிகழ்ந்த போது, அவருக்கு வயது 20லிருந்து 23க்குள் இருக்கலாம். ஆண்டு அனேகமாக 1936 ஆக இருக்கலாம். அதற்குப் பின்னால் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. கோலாலம்பூரில், V O K கணபதியாப் பிள்ளை கடையில் சேருகிறார். கடை இருந்த இடம் 49, லெபோ அம்பாங் (Leboh Ampang). அந்தக் கட்டடம் இன்றும் இருக்கிறது. அவரின் கையெழுத்து மிக அழகாக இருக்கும்; கணக்கில் நல்ல திறமையும் உண்டு. அதனால், எளிதாக நிறுவனத்தில் நல்ல பெயர் வாங்க முடிந்திருக்கிறது. சில வருடங்கள் இவ்வாறு ஓடிக்கொண்டிருந்த நிலையில், இரண்டாம் உலகப் போர் துவங்குகிறது.

ராஜாபாதருக்கு மலேயா கணபதியுடன் [1] [2] தொடர்பு ஏற்படுகிறது. அவருடைய நட்பின் பலனாக, இந்திய தேசிய ராணுவத்தில் [3] அவர் சேருகிறார். இதன் பயனாக, உறவினர்களுடன் முறிவு ஏற்படுகிறது. இந்திய தேசிய ராணுவத்தில் இருந்து கொண்டே, பொதுவுடைமை இயக்கத்திலும் ஈடுபடுகிறார். இந்திய தேசிய ராணுவத்தில், ராஜாபாதர் இருந்த படைப்பிரிவு 5வது கெரில்லா படை. கடைக்குப் பணம் வசூலிக்க மலேயக் காடுகளில் சுற்றிய அனுபவம் இதற்குக் கைகொடுத்தது.

பொதுவுடைமை இயக்கத்திலும், இந்திய தேசிய ராணுவத்திலும் ராஜாபாதர் செய்த பணிகள் பற்றி அவர் பேசியதே இல்லை. அவரது நண்பர்கள் மூலம் தான் செய்திகள் கிடைக்கின்றன. ராஜாபாதர் இந்தக் காலகட்டத்தில் தான் தனது எதிர்கால மாமனார், வெங்கடாசலம் பிள்ளையை சந்தித்திருக்கிறார். இருவருக்கும் தமிழில் நல்ல ஈடுபாடு. வெங்கடாசலம் பிள்ளைக்கு சிங்கப்பூர் செராங்கோன் தெருவில் துணிக்கடை வைத்திருந்த கோவிந்தசாமி பிள்ளை கடையில் வேலை. சிங்கப்பூர் மாரியம்மன் கோயில் கணக்கும் பார்க்கிறார்.

யப்பானியர்கள் ரஷ்யாவுக்கு எதிராக போரில் ஈடுபட்டவுடன், ராஜாபாதரின் நிலைமை மோசமடைந்தது. பொதுவுடைமை வாதிகள் வேட்டையாடப் பட்டார்கள். ராஜாபாதருக்கும், அவர்களது நண்பர்கள் குழுவுக்கும், ஆங்கிலேய அரசும், யப்பானிய அரசும் எதிரிகளாக மாறின. போரின் முடிவில், ஆங்கிலேயர் மறுபடியும் மலேயாவில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கின்றனர். ராஜாபாதர் நாடு கடத்தப் படுகிறார். இது கிட்டத்தட்ட 1946ம் ஆண்டில்.

மறுபடியும் இந்தியா[தொகு]


இந்தியா வந்தவுடன், பொதுவுடைமை இயக்கத் தோழர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. முக்கியமாக, மணலி கந்தசாமி மற்றும் A M கோபு [4]. விவசாய சங்க வேலைகளிலும் ஈடுபடுகிறார். இதனால், B சீனிவாச ராவுடன் [5] தொடர்பு ஏற்படுகிறது. இந்தியா விடுதலை அடைகிறது. பொதுவுடைமைக் கட்சி எடுத்த நிலைப்பாட்டினால், பொதுவுடைமை இயக்கம் தடை செய்யப் படுகிறது. ராஜாபாதரும், மற்ற தோழர்களும் தலைமறைவு வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். வீட்டிற்கு காவல் அதிகாரிகள் வருவது தினம் நடக்கும் நிகழ்ச்சியாகிறது. ஒரு சமயம், ராஜாபாதருக்கு வந்த ரகசியக் கடிதத்தை, அவரது அம்மா கற்பகவல்லி வாங்கி, பிரித்துப் பார்த்து விட்டு, உடனே எரித்து விடுகிறார்கள். அதிகாரிகள் கதவைத் தட்டி, கடிதம் எங்கே என்று கேட்கிறார்கள். கடிதம் எதுவும் வரவில்லை என்று பாட்டி சொல்கிறார்கள். "கம்யூனிஸ்ட்டின் அம்மா என்பதைக் காட்டுகிறாயே!" என்று ஒரு அறை கொடுத்தாராம் அந்த அதிகாரி. கற்பகவல்லியின் காது செவிடாகி விட்டது. இயக்கத் தோழர் ஒருவரால் காட்டிக்கொடுக்கப் பட்டு, 1950ல் ராஜாபாதர் கைது செய்யப்படுகிறார். மூன்று வருடம் சிறைத் தண்டனை. சேலம் சிறைக்கு அனுப்பப் படுகிறார்கள். ராஜாபாதருடன், A M கோபு மற்றும் சில தோழர்களும் தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப் பட்டார்கள்.

சிறையில், மணலி கந்தசாமியைக் காட்டிக் கொடுக்கச் சொல்லி, சித்ரவதைகள். இது பற்றிக் குறிப்பிடும் போது, "உள்ளங்காலில் தடியால் அடித்தால், உச்சந்தலை வரை வலிக்கும்" என்று குறிப்பிடுகிறார். சிறையில் எழுதிய குறிப்புகள் மூலமாக சிறை வாழ்க்கை பற்றி சில செய்திகள் கிடைக்கின்றன.

சிறை வாசத்தினால், குடும்பத்தில் ஏழ்மை தொடர்கிறது. நன்றாகப் படிக்கக் கூடிய ராஜாபாதரின் தம்பியின் படிப்பும் பாதிக்கப்படுகிறது. பள்ளியிறுதித் தேர்வு எழுத அனுமதி கிடைக்கவில்லை. கெஞ்சிக் கூத்தாடி அனுமதி பெற்று எழுதுகிறார். நல்ல மதிப்பெண்களும் பெறுகிறார். ஆனாலும், மருத்துவர் பட்ட மேற்படிப்பு மறுக்கப் படுகிறது.

1953ல் சிறையிலிருந்து விடுதலை.

மறுபடியும் பொதுவுடைமை இயக்கம்[தொகு]


சிறையிலிருந்து விடுதலை பெற்றவுடன், மறுபடியும் மயிலாடுதுறையில் பொதுவுடைமை இயக்கத்திலும், பொதுப்பணியிலும் ஈடுபாடு. B சீனிவாச ராவுடன் தொடர்பு. விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்க வேலைகளும், போராட்டங்களும். இதன் நடுவில், 1954ல் அசோக் பவன் என்று ஒரு சிற்றுண்டிக் கடையை ஆரம்பிக்கிறார். சரியாக செல்லாததால், சிறிது காலத்துக்குப் பிறகு, மூடப்படுகிறது. திருமணம்

ராஜாபாதரின் திருமண ஏற்பாடு ஆரம்பிக்கிறது. அவருக்கு திருமணத்தில் ஈடுபாடு இல்லை; நண்பர்கள் வற்புறுத்தி, சம்மதம் பெறுகிறார்கள். ராஜாபாதருக்கு சிங்கப்பூரில் ஏற்கனவே அறிமுகமான வெங்கடாசலம் பிள்ளையின் ஒரே மகள் சாவித்திரி. திருமண நாள் 26 ஆகஸ்ட் 1956. ராஜாபாதருக்கு 40 வயது. மணமகள் சாவித்திரிக்கு 20லிருந்து 23க்குள். சாவித்திரி தரங்கம்பாடியில் பிறந்து வளர்ந்தவர். அவரது அப்பா வெங்கடாசலம் பிள்ளை. அம்மா அஞ்சலை. வெங்கடாசலம் பிள்ளையும் பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபாடு உள்ளவர். சாவித்திரி, தரங்கம்பாடி ராஜா தெருவில் உள்ள செயின்ட் தெரசா பள்ளியில் எட்டாவது வரை படித்தவர். படிப்பில் மிகுந்த ஆர்வம் உண்டு, நன்றாகப் படிப்பார். திருமணம் மணலி கந்தசாமி தலைமையில், மிக நன்றாக நடந்தது.

குடும்ப மற்றும் அரசியல் வாழ்க்கை[தொகு]


4 அக்டோபர் 1957ல் முதல் ஆண் குழந்தை, பிறந்து, உடனே இறந்து விடுகிறது. இரண்டு வருடம் கழித்து, 11 ஜூன் 1959ல் இரண்டாவது மகன் சண்முக சுந்தரம் பிறப்பு. இதற்கிடையில், 12 மார்ச் 1959ல் நகரமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். வெற்றிக் கொண்டாட்டத்தில் படகு போல அலங்கரிக்கப் பட்ட தேரில் ஏற மறுத்து விட்டு, நடந்தே வந்தார். 22 செப்டம்பர் 1961ல் மூன்றாவது மகன் சீனிவாசன் பிறப்பு. குழந்தைக்குப் பெயர் சூட்டும் சமயத்தில், தோழர் B சீனிவாச ராவ் மறைந்த செய்தி வருகிறது. அவர் நினைவாக, குழந்தைக்கு சீனிவாசன் என்று பெயர் சூட்டப் படுகிறது. ராஜாபாதரின் மனைவி சாவித்திரியின் உடல் நிலைமை, கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகிறது. 19 ஏப்ரல் 1963 இரவு 8 மணிக்கு, அவர் உயிர் பிரிகிறது. அப்போது, மூத்த பையனுக்கு வயது நான்குக்கும் குறைவு. இரண்டாவது குழந்தைக்கு வயது இரண்டுக்கும் குறைவு.

ராஜாபாதரின் பொதுவாழ்க்கை தொடர்கிறது. விவசாயிகள் சங்கம், பொதுவுடைமை இயக்கப் போராட்டங்களில் சிறை, உண்ணாவிரதம் போன்றவை வாழ்க்கையாக் அமைகின்றன. ஒரு முறை 11 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கிறார். “வயிறு சுருங்கி விடும். உண்ணாவிரதம் முடிந்து, சாப்பிடும் போது தான் மிகவும் கஷ்டப்பட்டேன்” என்று இது பற்றிப் பின்னால் குறிப்பிட்டார். மயிலாடுதுறை வட்டச் செயலாளராக பொறுப்பேற்கிறார். மாவட்டக் குழுவிலும் அங்கத்தினர். 1964ல் பொதுவுடைமை இயக்கம் இரண்டாகப் பிரிகிறது. CPIல் [6] [7] தொடர்கிறார். 2வது முறையாக நகரமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார். வீட்டிற்கு கட்சித் தலைவர்கள் வருவது அடிக்கடி நிகழ்கிறது. இதற்கிடையில், இரு சிறு குழந்தைகள் உள்ள குடும்பத்தை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை வேறு.

Indian National Army (INA)வில் அங்கம் வகித்ததால், 1971ல் விடுதலைப் போராட்டத் தியாகி என்று செப்புப் பட்டயமும், மாதம் 100 உரூபா ஓய்வுதியமும் கிடைக்கிறது. கட்சியிலிருந்து, முழு நேர ஊழியர் என்பதால் மாதம் 100 உரூபா ஊதியமும் கிடைக்கிறது. இதை வைத்துத்தான் வாழ்க்கை. இதே சமயத்தில், நில மீட்சிப் போராட்டத்தில் ஈடுபட்டு, 1 மாதம் சிறை.

அரசியலில் இருந்து விலகல்[தொகு]


70களின் கடைசியில் இருந்து, அரசியலில் இருந்து கொஞ்சம் விலகுகிறார். பொதுப்பணி மட்டும் தொடர்கிறது. பொதுவுடைமை இயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தனது வீரியத்தை இழந்து கொண்டிருக்கிறது என்ற கருத்து அவர் மனத்தில் உருவாகிறது. ஆனாலும், 1980 வரை மயிலாடுதுறையின் கட்சி வளர்ச்சிக்கும், மயிலாடுதுறையைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் மூலம் விவசாயிகளின் மேம்பாட்டுக்கு உழைத்துள்ளார். மயிலாடுதுறையில் நகர சுத்தித் தொழிலாளர்கள் முன்னேற்றத்துக்கு ஒரு சங்கம் அமைப்பதற்கு மூல காரணமாக இருந்தார்.

கடைசி ஐந்து வருடங்கள்[தொகு]


பிள்ளைகள் இருவரும் படித்து முடித்து விட்டு, வேலைக்குச் செல்கின்றனர். குடும்பத்தில் முதன்முறையாக கொஞ்சம் நிலைத்தன்மை வருகிறது. முதன்முதலாக, 1981ல் வங்கிக் கணக்கு ஆரம்பிக்கிறார். கட்சியில் அதிகம் வேலை செய்யாவிடினும், 1982ல், மயிலாடுதுறையில் மாவட்ட மாநாடு ஏற்பாடு செய்கிறார்கள். சிறப்பாக இருந்தது என்று பாராட்டுக்கள் கிடைக்கின்றன.

1985 இறுதியில், உணவுக்குழல் புற்றுநோய் என்று தெரிய வருகிறது. முற்றிய நிலை. எனினும், அறுவை சிகிச்சை செய்யப் படுகிறது. பலனின்றி, 9 பிப்ரவரி 1986 அன்று இறப்பு. ஜனசக்தியில் செய்தி வருகிறது. எழுதியவர் A M கோபு. கட்சித் தோழர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் எரியூட்டப் படுகிறது. இறக்கும் போது, அவரது வங்கிக் கணக்கில் 165 உரூபா இருந்தது. புத்தகங்களும், 1964ல் வாங்கிய (வாங்கும் போதே அது பழையது) ஒரு உந்துவண்டியும் தவிர, வேறு எந்த சொத்தும் இல்லை.

எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி, மக்களுக்கு மட்டுமே வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.