பயனர்:Premalathajawahar/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறள் கண்ட பொருள் வாழ்வு

பேராசிரியர் தி.முருகரத்தனத்தின் நூல்


குறள் கண்ட பொருள் வாழ்வு

(The Economic Life in Kural) பக் 18+207. (1973) வெளியீடு: மதுரை காமராசர் பல்கலைக்கழகம். வள்ளுவரின் பொருளியல் (Economic Ideas) கருத்துக்களை இன்றைய பொருளியற் கருத்தியல்களின் பின்புலத்தில் இந்நூலில பேரா.தி.மு. ஆய்ந்துள்ளார். சிறந்த 21 பொருளியல் நூல்களைத் துணைநூலாகக் கொண்டு வள்ளுவரின் பொருளியல் பார்வையை நுண்மாண் நுழைபுலத்தோடு பேரா.தி.மு. நான்கு இயல்களின் வழி அமைத்துள்ளார். இயல்களும் பொருத்தமுற அடுத்தடுத்து 1.உலகச் சிந்தனை, 2.வள்ளுவர் சிந்தனை, 3.அரசும் பொருளும், 4.வள்ளுவர் கண்ட வளநாடு என அமைக்கப்பட்டுள்ளன. தற்காலப் பொருளியல் மேதைகளினும் தொலைநோக்குப் பார்வை கொண்டு அறவழியிலிருந்து மாறாமல், பொருளியல் சிந்தனைகளைக் கூறியிருக்கும் வள்ளுவரைச் சிறந்த பொருளியலறிஞர் என்று தக்க சான்றுகளின் வழி பேரா.தி.மு. நிறுவியுள்ளார்.

உலகச் சிந்தனை : 1. அறிவுத்துறைகள் 2. பொருளியல் என்பது யாது? 3. பொருளியல் வரையறை 4. பொருளியல் புதல்வன் 5. பொருளியலின் தோற்றம் 6. பண்டைச் சிந்தனை 7. எபிரேயச் சிந்தனை 8. கிரேக்கச் சிந்தனை 9. ஏசுநாதர் சமயச் சிந்தனை 10. தாமஸ் அக்சினாஸ் சிந்தனை 11. இந்தியச் சிந்தனை போன்ற உட்பிரிவுகள் உள்ளன. பொருளியல் குறித்து உலக அறிஞர்களும், இந்திய அறிஞர்களும் சிந்தித்து வெளியிட்ட கருத்துக்களை இப்பகுதி தெளிவாக விளக்குகிறது.

மனிதன் இயற்கைச் சூழல், சமூகச்சூழல் போன்றவற்றின் அடிப்படையில் பூதவியல், வேதியியல், உயிரியல், ஒழுக்கவியல், அரசியல், பொருளியல், சமூகவியல் போன்ற பல அழிவு சார்ந்த துறைகளை உருவாக்கியிருக்கிறான். இதில் மனிதன் தன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள மேற்கொண்ட முயற்சியின் பயனால் தோன்றிய துறையே பொருளியல் ஆகும். பண்ட மாற்று முறையிலிருந்து, பண மாற்று முறை ஏற்பட்ட பிறகு இப்பொருளியல் துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. தேவை, ஆக்கம், ஆக்கக்கருவி, பயன், இயற்கை, முதல், ஆட்சி, நுகர்ச்சி, வணிகம், விலை, மதிப்பு, பணம், பணவீக்கம், ஏற்றுமதி, பணி, வரி, நாட்டுடைமை முதலானவை பொருளியலின் அடிப்படைகளாகும். இவற்றின் அடிப்படையில் ‘ஆதம் ஸ்மித்’ என்பவர் ஆராய்ந்து ‘நாடுகளின் செல்வம்’ என்ற நூல் எழுதியுள்ளார். இவரே, ‘இன்றைய பொருளியலின் தந்தை’ ஆவார். இவரைத் தொடர்ந்து ‘எரிக் ரோல்’ பொருளியல் சிந்தனையின் வரலாறு என்ற நூலையும் கார்ல் மார்க்ஸ் ‘மூலதனம்’ நூலையும் எழுதியுள்ளனர்.

எபிரேயத்தில் பொருள், அரசாட்சியின் ஆதிக்கத்தினால் தனி மனிதரிடம் குவிய, பல ஏழைகள் உருவாயினர். இதனால் தனியுடைமை தாக்குதலுக்குள்ளாகிச் செல்வத்தின் மீது வெறுப்பு தோன்றியது. கிரேக்கத்தில் பிளேட்டோ, அரிஸ்டாடில் போன்றோர் பொருளியல் சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளனர். ""உழைப்புப் பாகுபாட்டில் பண்டங்களின் தரம் உயரும், அவற்றின் பயன் சிறப்புறும்"" என்பது பிளேட்டோவின் கருத்து. அரிஸ்டாடில் ""பண்டங்களுக்குப் பயன்பாட்டு மதிப்பு, கைமாற்ற மதிப்பு என இரு மதிப்புகள் உண்டு"" என்கிறார். பேரா.தி.மு. பிளேட்டோவின் சிந்தனை தற்காலப் பொருளறிஞர்கள் போற்றத்தக்கதாக இல்லை என்றும், அரிஸ்டாடிலின் கருத்து ‘இன்றைய பொருளியலின் கோட்பாடாக’ விளங்கி வருகிறது என்றும் கூறுகிறார். ‘ஏசுநாதர் சிந்தனை’யானது, ‘சமயச் சார்புடையது’ எனவே பொருளியல் வாழ்வையும் சமய வாழ்வாகவே கருதியுள்ளார் என்கிறார்.


‘தாமஸ் அக்கினாஸ்சின்’ கருத்துக்கள் பழஞ்சமயக் கருத்துக்களோடு கூடிய பொருளியல் கொள்கைகளாகும். இந்தியாவிலுள்ள ‘வார்த்தா’ என்னும் வடமொழி நூல், ஒரு பொருளியல் நூல் ஆகும். உழவுத்தொழில் மட்டும் இருந்த காலத்தில் தோன்றி நூல் என்பதால் இதில் பொருளியல் சிந்தனை இல்லை என்றும் கவுடலியரின் ‘அர்த்த சாஸ்திரம்’ என்ற நூலே சிறப்பான பொருளியல் நூல் என்றும் பேரா.தி.மு. குறிப்பிடுகிறார். மேலை நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் சமயம், ஒழுக்கம், அரசியல், பொருளியல் ஆகியவை இணைந்து ஒன்றை ஒன்றைச் சார்ந்து காணப்படுகிறது என்கிறார் பேரா.தி.மு..

வள்ளுவர் சிந்தனை : 1. பொருளியல் தோன்றாமை 2. பொருளியலுக்கு விளைநிலைமின்மை, அறிவாற்றல் இன்மை 3. புறக்கணிப்பு 4. பொருளே பொருள் 5. அறமும் பொருளும் 6. பொருளைப் போற்றுதல் 7. பொருளின் பயன் 8. மக்கள் தேவைகள் 9. இறைப்பற்று 10. ஊழ்நம்பிக்கை 11. செல்வம் நிலையாமை 12. இல்லும் துறவும் 13. செல்வம் யாது 14. வறுமை யாது 15. ஈட்டும் நெறி 16. துயர் துடைக்கும் வழிகள் 17. வள்ளுவர் வகுத்த வழி 18. இன்மையும் இரவும் ஈகையும் 19.வள்ளுவத்தின் சிறப்பு போன்ற பல உட்தலைப்புகளில் வள்ளுவரின் பொருளியல் சிந்தனைகளை ஆராய்கிறது.

பிளேட்டோவின் ‘குடியரசு’ போல, அரிஸ்டாடிலின் ‘அரசியல்’ போல வள்ளுவரின் ‘பொருட்பால்’ சமூக அரசியலைப் பற்றிக் கூறுகிறது. அதே சமயம் வள்ளுவர் அறத்தை முன்னிறுத்தியே பொருளைப் பற்றிக் கூறுகிறார். வள்ளுவர்க்குப் பொருள் ஒரு கருவி. அதைக் கொண்டு, ‘நிலைபேறுடைய உயர்வினும் உயர்வான மனிதப் பண்புகளை மேம்படுத்த வேண்டும்’ என்பதே வள்ளுவரின் கருத்து என்கிறார். பண்பே உயர்ந்த செல்வம். பகுத்துண்ணலே பொருள் வாழ்வின் அடிப்படை" என்பதே வள்ளுவரின் பொருளியலின் கருத்து என்கிறார் பேராசிரியர் பேரா.தி.மு.

அரசும் பொருளும் : 1. இன்றைப் பொது நிதியியல் 2. செல்வத்தின் சிறப்பும் தேவையும் 3. வள்ளுவர் காட்டும் பொது நிதியியல் 4. இயற்றல் உரை வேறுபாடு 5. பண்டையரசு வருவாய் 6. நச்சினார்க்கினியர் தொகுத்துத் தந்தவை 7. ’இன்னிலை’ தந்தவை 8. பரிமேலழகர் தொகுத்துத் தந்தவை 9. இலக்கியம் தந்தவை 10. வரலாற்றறிஞர் தந்தவை 11. திருக்குறள் தந்தவை 12. இந்திய மரபின் கருத்துக்கள் 13. இன்றைய பொருளியலின் கருத்துக்கள் போன்ற தலைப்புக்களில் அரசு பற்றியும் பொருள் பற்றியும் கருத்துக்களைத் தக்க சான்றுகளோடு எடுத்துரைத்துள்ளார். ஓரரசு தனி மனிதனைப் போலவே, வரவு செலவு பார்த்து முதலும் ஊதியமும் கணக்கிட்டு வாழ்வதோடு, மக்கள் பொருள் வாழ்வினை அது நெறிப்படுத்தியும் செல்கிறது.

அரசு மக்களுக்குப் ‘பொது’ என்பதால் அரசின் பொருள் வாழ்வும் மக்களுக்குப் ‘பொது’ ஆகும். அரசின் பொருள்வாழ்வு ‘பொது நிதியியல்’ என அதனால் தான் அழைக்கப்படுகிறது. ஆனால், கடந்த கால அரசுகளைப் போலல்லாமல், இன்றைய அரசுகள் தம்பொருள் வாழ்வைப் பெருக்கிக் கொண்டிருப்பதோடு, மக்களின் பொருள் வாழ்விலும் தலையிடுகின்றன. இத்தகைய அரசுகளுக்கே ‘பொது நிதியியல்’ பொருந்தும். வள்ளுவர் கண்ட அரசு இதுவல்ல. குடிகளை அலைகழித்துப் பொருள்பெற எண்ணுபவன் கொடுங்கோலன். இம்மன்னன் நாட்டில் ‘முறை’ ஒழுங்காக நடைபெறாது. செல்வமுடைய குடிமக்கள் அஞ்சி வாழும் நிலை ஏற்படும். வறுமையை விட வளமையே அங்கு வருத்தத்தைத் தரும். இதனால் நாடு தகரும் என்பதால் அரசிற்குரிய வருவாயை மன்னன் முறைப்படி ஈட்ட வேண்டும் என்பதே வள்ளுவரின் கருத்து என்பதைப் பேரா.தி.மு. குறட்பாக்களின் வழி நிறுவுகிறார்.

வள்ளுவர் கண்ட வளநாடு  : இது நாடு, நாட்டின் நான்கு வளங்கள், பிற வளம், அதனால் வரும் விளைவுகள் போன்றவற்றைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. மக்களின் தேவைகளை நிறைவேற்றுதல்தான் பொருளியலின் நோக்கமாகும். இயற்கை வளம், மக்கள் வளம் செழிப்புற்று, உழவும் தொழிலும் பெருகி, வணிகம் சிறந்து பஞ்சமும்பட்டினியும் இல்லையென்றாகி அனைத்து மக்களும் இன்புற்று வாழும் நாடு, மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் மக்களரசும் இணைந்ததே வளநாடு என வள்ளுவர் கருதுவதாகப் பேரா.தி.மு. நிறுவுகிறார்.

வளங்களே சிறந்த ஏமத்தைத் (காவலை) தரக்கூடியவை. இயற்கைவளம், மக்கள் வளம், விளைவு வளம், செல்வ வளம் போன்ற நான்கு வளங்களும் பொருள் வாழ்விற்கு அடிப்படை. இதில் தலையானது இயற்கை வளம். வள்ளுவர் ‘இருபுனலும் வாய்ந்த மலையும்’ (குறள் 737) என்ற குறளில் இதே கருத்தை வலியுறுத்துகிறார். காடும் மலையும் ஒரு நாட்டின் பொருள் ஆக்கத்திற்குப் பயன்படும் பெருவளங்களாகும். இருபுனல் என்பது மேல் நீர், கீழ் நீர். மேல் நீராகிய மழையின் சிறப்பை ‘வான் சிறப்பு’ என்ற அதிகாரத்தில் அதன் பொருளியல் சிறப்பை எடுத்துரைக்கிறார். இயற்கை வழங்கிய வளங்களுள் சிறந்ததான நிலமே, இயற்கை உணவிற்கும், செயற்கை உணவிற்கும் அடிப்படை. உழுதொழிலுக்குக் காரணியானது. இவைத் தவிர கனிமவளம், காற்றுவளம், காலநிலைவளம், மக்கள் வளம் போன்றவைகளும் ஒரு நாட்டின் வருவாய்க்கு அடிப்படை வளங்களாகும்.

இயற்கைவளம் மட்டுமே இருக்கும் நாடு வளநாடு ஆகாது. இயற்கை வளங்களை பொருள்வளங்களாக மாற்றத்தக்க தகுந்த மக்கள் தேவை. அம்மக்களே ‘தக்கார்’ எனப்படுவர். நாட்டு மக்கள் பசியின்றி வாழக் குறைவின்றி விளைவு தேவை. ‘பிணியின்மை செல்வம் விளைவு . . . . (738)’ என்ற குறளில் வரும் ‘விளைவு’ என்னும் சொல் விளைச்சலை குறிப்பதாகக் கூறி, விளைவின் இன்றியமையாமையை விளக்குகிறார் பேராசிரியர். புயலாலும், வெள்ளத்தாலும், வறட்சியாலும், போராலும் விளைவுகள் பாதிக்கப்படும் பொழுது இதைச் சீர்செய்யவும் பொருள் செலவிடப்படுகிறது.

கடலில் இருந்து பெறப்படும் பொருட்கள் கடலின் விளைவுகள். இதுபோல நிலத்திலிருந்து பெறப்படும் விளைவுகள், மலையிலிருந்து பெறப்படும் விளைவுகள் என இயற்கையிலிருந்து கிடைக்கும் விளைவுகள் பல இருப்பினும், உழவுத் தொழிலின் மூலம் கிடைக்கும் விளைவே சிறந்தது என வள்ளுவர் கருதியதால், உழவுத்தொழிலை மேன்மைப்படுத்தும் வகையில் குறட்பாக்களையும், அதிகாரங்களையும் படைத்துள்ளார். இவ்வுழவுத் தொழிலில் விளைவு அதிகரிக்க உழுபவனுக்கு நிலமும், மதிப்பும் கொடுக்கப்பட வேண்டும் என்பதே வள்ளுவரின் கருத்து என்கிறார். இயற்கை வளத்தின் மூலம் வரும் செல்வங்களை வணிகம், பிற தொழில் ஆகியவற்றில் முதலீடு செய்தால்தான் செல்வம் ஓரிடத்தில் தங்காது. சகடகால் போல் உருண்டோடி அனைவருக்கும் பயன்படும். இயற்கை வளம், முதலாகிற செல்வம், தொழில் இம்மூன்றையும் கொண்டு நாட்டுவளம் மேம்படுத்தப்பட வேண்டும். இத்தோடு, அன்பும் அருளும் கூடிய அறவாழ்க்கை வாழ்வோர் இருக்க வேண்டும், அந்நாடு இன்பம், ஏமம், அமைவு ஆகிய மூன்றையும் பெற்று சிறப்புற்று வாழும் என்கிறார். வளங்களே மன்னன்-மக்களிடையில் அன்பு உரிமையைத் தரக்கூடியவை.

இன்றைய பொருளியல் அறிஞர்கள் காணும் வளநாடானது பொருள் வளங்களை மட்டுமே பெற்றிருக்கக் கூடியது. வள்ளுவர் காணும் வளநாடோ, பொருள் வளங்களுடன், அன்பு என்னும் வளமும், அருள் என்னும் வளமும், அமைதி என்னும் வளமும் பெற்றிருக்கும் நாடே உண்மையான வளநாடு என்பதாகும். என்றும் வருத்தமில்லாத வளங்கொழிக்கும் உண்மையான நாட்டையே வள்ளுவர் காண விழைகிறார் என்கிறார் பேரா.தி.மு. வள்ளுவரின் கொள்கையானது தற்காலப் பொருளியல் மேதைகளாகக் கருதப்படும் எரிக் ரோல், ஆடம் ஸ்மித் போன்றோரின் கருத்துக்களை விட மேலானது, கூர்மையுடையது, தொலைநோக்குப் பார்வையுடையது, பரந்த சிந்தனையுடையது எனத் தக்க சான்றுகளோடு பேரா.தி.மு. நிறுவியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Premalathajawahar/மணல்தொட்டி&oldid=1949829" இலிருந்து மீள்விக்கப்பட்டது