பயனர்:Manivel Rajivnath/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்கப்பூர் அப்சராஸ் கலைகள் குழுமம்

இந்தியச் செவ்வியல் நடனத்துறையில் உலகளவில் கவனம் பெற்ற பல படைப்புகளை மேடையேற்றி வரும் ஓர் அமைப்பு சிங்கப்பூர் அப்சரஸ் கலைகள் குழு. படைப்புகளை உருவாக்குதல், அவற்றை நிகழ்ச்சிகள் வழியே மக்களின் பார்வைக்குக் கொண்டு வந்து நிறுத்தல், செவ்வியல் நடனக்கலையைக் கற்றுத் தருதல் ஆகியவை இதன் பணிகள். இக்குழு சிங்கப்பூரில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.

வரலாறு

இக்குழு பரத நடனத்தில் மிகுந்த புலமையும் அனுபவமும் கொண்ட தெய்வத்திரு சத்தியலிங்கம் - நீலா சத்தியலிங்கம் தம்பதியரால் ‘கமலா கலப்’ என்னும் அமைப்பின் ஆதரவுடன் 1977இல் நிறுவப்பட்டது. இந்தியப் பெண்களுக்கான கமலா மன்றம் அன்றைய சிங்கப்பூரில் இந்திய இசை, நடனம் ஆகியவற்றில் ஈடுபடுவோரை ஊக்குவித்தது. 20 மாணவர்களுடன் மட்டுமே தொடங்கப்பட்ட அப்சராஸ் கலைகள் குழு பல நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றங்களையும் மேடை ஏற்றியது. சிங்கப்பூரிலும் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அதன் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இக்குழு விரைவிலேயே மாணவர் எண்ணிக்கையிலும் செயல்பாட்டிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியது.

பணிகள்

சத்தியலிங்கம் தம்பதிகள் இருவரும் உலகளவில் புகழ்பெற்ற பரத நடனப் பயிற்சி நிறுவனமான கலாஷேத்திராவில் அதன் நிறுவனர் திருமதி ருக்மணி அருண்டேலிடம் நேரடியாகப் பயின்றவர்கள். அவ்விணையர் நிறுவிய அப்சரஸ் குழு கலாஷேத்திரா பாணியில் நடனங்களை வடிவமைத்து, மேடைகளில் நிகழ்த்துகிறது. வந்தனம், வர்ணம், அலாரிப்பு, தில்லானா என அனைத்தும் அடங்கிய, மரபு வடிவமான மார்க்கத்தின் அடிப்படையிலான தனிநபர் நடனம், மார்க்கத்தின் அடிப்படையில் குழு நடனம் நிகழ்த்துதல், குறிப்பிட்ட கருத்துருவின் அடிப்படையில் ஆடுதல், தேவையான அனைத்துக் கூறுகளும் அடங்கிய நாட்டிய நாடகங்களைத் தயாரித்தல் ஆகிய வகைகளில் பரத நடன நிகழ்ச்சிகளை அப்சரஸ் தயாரித்து மேடையேற்றி வருகிறது. நடனத்தில் ஆய்வு செய்து குறிப்பிட்ட தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை நிகழ்ச்சியாக உருவாக்குவது இக்குழுவின் தனிச்சிறப்பாகும். சிங்கப்பூரில் குறிப்பிட்ட காலந்தோறும் நடத்தப்படும் நிகழ்வுகள், வெளிநாட்டுச் சுற்றுலாக்கள் மூலம் அப்சரஸ் குழு நடன நிகழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் அரங்கேறுகின்றன. பல்வேறு இன அடையாளங்கள் கொண்ட சிங்கப்பூரில் இந்திய செவ்வியல் நடனக் கலையை ஊக்குவிப்பதைத் தனது முழுமுதற் பணியாக இக்குழு ஆற்றி வருகிறது.


நிறுவனர்கள் வரலாறு

சு. சத்தியலிங்கம்

சு. சத்தியலிங்கம் இலங்கையைத் தாயகமாகக் கொண்ட நடன மற்றும் இசைக் கலைஞரும் ஆசிரியரும் ஆவார். இவர் இலங்கையில் நன்கு அறியப்பட்ட அரசியல் தலைவரான சுந்தரலிங்கத்தின் மகன் ஆவார். சத்தியலிங்கம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசைத் துறையில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, நடனக்கலையைப் பயில்வதற்காகக் கலாஷேத்ராவில் சேர்ந்தார். அங்கு நடனத் துறையில் மதிக்கத்தகுந்த பல முன்னணிக் கலைஞர்களிடம் பயிலும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அவர் கலாஷேத்ராவில் பட்டயப் படிப்பை முடித்து, அங்கேயே நடன ஆசிரியர்களில் ஒருவராகவும் பணிபுரிந்தார். 1955இலிருந்து அவர் சிங்கப்பூரிலும், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் செவ்வியல் இசை, நடன நிகழ்ச்சிகளை நடத்தினார். தன்னைப் போலவே பரதத்தில் ஆர்வம் கொண்ட நீலாவைக் கலாஷேத்ராவில் சந்தித்தார். இருவரும் 1956இல் திருமணம் செய்துகொண்டார்கள். இருவருமே சேர்ந்து அப்சரஸ் கலைக்குழுவைத் தோற்றுவித்தனர்.

பரதத்தில் ஆர்வம் உள்ள அடுத்தடுத்த தலைமுறையினரின் விருப்பத்துக்குரிய ஓர் ஆசிரியராக சத்தியலிங்கம் விளங்கினார். இந்தியக் கலைகளை அயல்நாட்டில் வளர்த்த சத்தியலிங்கத்தின் பணியைப் பாராட்டிச் சென்னையைச் சேர்ந்த பாரத் கலாச்சார் அமைப்பு இவருக்கு ‘விஸ்வகலா பாரதி’ என்னும் விருதை அளித்து கௌரவித்தது. சிங்கப்பூர் தேசியக் கலை அவையின் ஆலோசனைக்குழு உறுப்பினராகச் சத்தியலிங்கம் பொறுப்பு வகித்தார். 2011ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் நாளில் சத்தியலிங்கம் மறைந்தார்.

நீலா சத்தியலிங்கம்

நீலா சத்தியலிங்கம் இலங்கையைத் தாயகமாகக் கொண்ட இந்திய நடனக் கலைஞர், நடன வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுவிப்பாளர். இவர் 1938இல் கொழும்பில் பிறந்தார். இவர் ஐந்து வயதிலேயே நடனம் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். கொழும்பில் உள்ள சாந்தி குமார் நடனப் பள்ளியிலும், கலாலயா நடனப் பள்ளியிலும் இந்தியச் செவ்வியல் நடனக்கலைகளான பரதம், கதக், கதகளி, மணிப்பூரி ஆகியவற்றைக் கற்றார். 1954இல் அனைத்து இலங்கை நடன விழாவில் தங்கப் பதக்கம் பெற்றார். அதே ஆண்டில் இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் இலங்கைக்கு வருகை தந்தபோது, அவர் முன்னால் நடனமாடும் வாய்ப்பை நீலா பெற்றார். தனது பதினெட்டாம் வயதில் கலாஷேத்ராவில் மேற்கொண்டு நடனம் பற்றி கற்கச் சென்றார். அங்கு ஐந்து ஆண்டுகளுக்கான படிப்பை இரண்டு ஆண்டுகளில் முடித்து, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, ஆசிரியர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டார்.

நீலா கலாஷேத்ராவில் அறிமுகமான சத்தியலிங்கத்தைக் காதல் திருமணம் செய்துகொண்டார். 1974இல் தன் குடும்பத்தினருடன் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தார்.

1977இல் நீலாவும் அவருடைய கணவர் சத்தியலிங்கமும் அப்சரஸ் கலைக்குழுவை நிறுவினர். அக்குழுவின் கலைத்துறை இயக்குனராகப் பொறுப்பேற்ற நீலா மாணவர்களுக்கு நடனக் கலையைக் கற்பித்தார்.

சிங்கப்பூர் அரசு அமைப்பான மக்கள் கழகத்தின் இந்திய நடனக் குழுவின் பயிற்றுவிப்பாளராகவும் நடன வடிவமைப்பாளராகவும் 1983இல் நீலா நியமிக்கப்பட்டார். சிங்கப்பூர் தேசியக் கலை மன்றத்துக்குக் கலை ஆலோசகராகவும் பணிபுரிந்தார். பல்வேறு இனப் பின்னணி கொண்ட குழந்தைகளை உறுப்பினர்களாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘லயன் சிட்டி ஏஞ்ஜெல்ஸ்’ என்ற நடனக் குழுவில் சிங்கப்பூர் அரசின் கலாசார பதக்கத்தைப் பெற்ற மூன்று கலைஞர்கள் நடன வடிவமைப்பாளர்களாகச் செயல்பட்டனர். அவர்களில் நீலாவும் ஒருவர். 1995இல் பிரான்சில் நடைபெற்ற குழந்தைகளுக்கான நாட்டார் மரபு விழாவிலும் 1996இல் ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச குழந்தைகளுக்கான நாட்டார் மரபு விழாவிலும் இக்குழு நிகழ்ச்சி நடத்தியது.

நடனத்துறையில் அவருடைய பங்களிப்புகளுக்காக 1989இல் சிங்கப்பூரில் கலைத்துறையில் உயரியதாகக் கருதப்படும் அரசின் கலாசாரப் பதக்கம் நீலாவுக்கு வழங்கப்பட்டது. 1994இல் நீலா சிங்கப்பூர் குடிமகள் ஆனார்.

பல்வேறு மரபுகளையும் பண்பாடுகளையும் கொண்ட மக்கள் வசிக்கும் சிங்கப்பூரில் பல்வேறு கலைஞர்களுடன் பழகும் வாய்ப்பைப் பெற்ற நீலா நடனத்தில் அதைப் பிரதிபலிக்கும் விதத்தில் பல புதுமைகளைப் புகுத்தினார். 1998இல் சிங்கப்பூர் கலை விழாவில் நிகழ்த்தப்பட்ட அவருடைய படைப்பான ‘கண்ணகி’ என்னும் நாட்டிய நாடகம் இதற்கு ஒரு சான்று.

சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகச் சிங்கே அணிவகுப்புகள் என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய ஊர்வலம் சிங்கப்பூரில் நடைபெறுவது வழக்கம். 2007 வரைக்கும் 13 அணிவகுப்புகளுக்கு நீலா இந்திய நடனங்களை வடிவமைத்தார்.

கல்கி எழுதிய சிவகாமியின் சபதம் என்னும் வரலாற்றுப் புதினத்தை ‘சிவகாமி’ என்னும் பெயரில் நீலா ஒரு நாட்டிய நாடகமாக வடிவமைத்தார். பிரம்மாண்டமான ஒரு தயாரிப்பாக விளங்கிய இந்நாடகத்தில் அவருடைய கலைகள் குழுவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் 65 நடனக்கலைஞர்கள் பங்கேற்றனர். இக் குறிப்பிடத்தக்க நாடகம் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 14, 15 ஆகிய நாட்களில் விக்டோரியா அரங்கில் நடைபெற்றது.

நீலா தனது 78ஆம் வயதில் 2017ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் நாளில் இறந்தார்.

அரவிந்த் குமாரசாமி

அப்சரஸ் கலைகள் குழுமத்தின் தற்போதைய படைப்பாக்க மற்றும் நிர்வாக இயக்குனர் அரவிந்த் குமாரசாமி. நடனக் கலையிலும் இசைக் கலையிலும் கைதேர்ந்த கலைஞரான இவர் நீலா, சத்தியலிங்கம் இணையருடன் இணைந்து 1990லிருந்து இக்குழுவுக்காக அரும்பணிபுரிந்து வருபவர். செவ்வியல் நடனத்திலும் இசையிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். அப்சரஸ் கலைகள் குழுவுக்காக இவர் உருவாக்கிய படைப்புகள் மரபு நடன இலக்கணமும் புதுமையான நடன வடிவமைப்பும் கலந்து உருவாக்கப்பட்டன. சிங்கப்பூர் தேசியக் கலை மன்றத்தின் ‘இளம் கலைஞர் விருது,’ பத்மஸ்ரீ வழுவூர் இராமையா பிள்ளை நினைவாக வழங்கப்படும் ’நிருத்ய வாரிதி’, அருஸ்ரீ கலை அரங்கு வழங்கும் ‘கலா சாதனா’ உட்பட பல விருதுகளை அரவிந்த் குமாரசாமி பெற்றுள்ளார். சிங்கப்பூர் தேசியக் கலை மன்றத்தின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் இவர் பொறுப்பு வகிக்கிறார். இந்திய நடனத்துறையில் அவருடைய பங்களிப்புக்காக இங்கிலாந்தில் உள்ள க்ரோய்டன் நகரின் நகரத் தந்தையால் கௌரவிக்கப்பட்டார்.

அப்சரஸ் குழு வகுப்புகள்

1. பரத நாட்டியம்(கலாஷேத்ரா பாணி): தொடக்க நிலையாளர்கள், இடைநிலை, மூத்தோர்

2. கதக்(லக்னோ பாணி):தொடக்க நிலையாளர்கள், இடைநிலை, மூத்தோர்

3. பால பரதம்: 3 வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள்

4. இந்திய நாட்டுப்புற நடனங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Manivel_Rajivnath/மணல்தொட்டி&oldid=2250851" இலிருந்து மீள்விக்கப்பட்டது